“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்!” - நடிகை சிவரஞ்சனி

பயணங்கள் முடிவதில்லை

“பிறந்தது கேரளா, வளர்ந்தது தமிழ்நாடு. இப்போ ஆந்திராவின் மருமகள். 1990-களில் ஏழு வருஷங்கள் ஆக்டிவாக நடிச்சேன். பிறகு கல்யாணம், குழந்தைகள், குடும்பம்னு இருந்துட்டதால, இப்போவரை நடிக்கலை. ஆனா, சினிமாவோடுதான் இருக்கேன்; என் கணவர் உற்சாகமா நடிக்க, நான் சப்போர்ட் பண்றேன். இனி என் பிள்ளைகள் நடிக்கவும் துணை நிற்கப் போறேன்...” - மகிழ்ச்சியுடன் தொடங்குகிறார் நடிகை சிவரஞ்சனி. 1990-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர், தெலுங்கு முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த்தைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் சினிமா பயணம், குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் பற்றிப் பகிர்கிறார் நம்மோடு!

“நான் பிறந்து வளர்ந்தது சென்னை. என் கண்கள் வித்தியாசமா இருக்குறதால, ஸ்கூல்ல எல்லோரும் ‘ஸோ க்யூட்’னு சொல்லுவாங்க. ஸ்கூல்ல ஒரு நிகழ்ச்சியில் நான் டான்ஸ் ஆடினேன்... பாட்டுப் பாடினேன். சிறப்பு விருந்தினரா வந்திருந்த சினிமா துறையைச் சேர்ந்த ஒருவர், ‘சூப்பர்! சினிமாவில் நடிக்கிறியா?’னு கேட்டார். அப்போ என் தாத்தா பாட்டி வளர்ப்பில் இருந்த நான், ஷார்ஜாவில் இருந்த என் பெற்றோர்கிட்ட கேட்டேன். ‘விருப்பமிருந்தா நடி’னு சொன்னாங்க. அப்படித்தான் எட்டாவது படிக்கும்போது, ‘நிலா பெண்ணே’ படத்தில் ஹீரோயினா அறிமுகமானேன். ஒன்பதாவது படிக்கும்போது படிப்பை நிறுத்துற அளவுக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்தன.

என் நிஜப் பெயர் உமா மகேஸ்வரி. என் ரெண்டாவது தமிழ்ப் படத்துல ‘சிவரஞ்சனி’னு பெயரை மாத்திட்டாங்க. தெலுங்குத் திரையுலகில், நடிகை வடிவுக்கரசி அம்மாவுக்கு ‘சிவரஞ்சனி’னு பெயர் இருந்ததால, அங்க என் பெயரை ‘ஊஹா’னு மாத்தினாங்க. இப்படி எனக்கு மூணு பெயர். ஆனா, பர்சனல் லைஃப்ல என் பெயர் உமா மகேஸ்வரிதான்” என்கிற சிவரஞ்சனி, ‘தாலாட்டு’, ‘ராஜதுரை’, ‘வண்டிச்சோலை சின்ராசு’, ‘சின்ன மாப்பிள்ளை’ உள்பட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாள மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick