நமக்குள்ளே!

ரு மாலைப்பொழுதில், அந்த மலைக்கிராமத்திலிருக்கும் தன் வீட்டின் அருகே விறகு வெட்டிக்கொண்டிருந்தனர் பதினோரு வயது சிறுமியும் அவளுடைய அம்மாவும். சட்டென்று மரப்புதரிலிருந்து பாய்ந்த சிறுத்தை, மின்னல் வேகத்தில் சிறுமியைக் கவ்வி இழுத்துச்செல்ல, பதறித்துடித்த தாய், கையில் கிடைத்த கட்டையைக்கொண்டு சிறுத்தையைத் தாக்கத் தொடங்கினார். கோபமுற்ற சிறுத்தை, சிறுமியை விட்டுவிட்டுத் தாயைத் தாக்க ஆரம்பித்தது. தலையிலும் முகத்திலும் காயங்கள் ஏற்பட்டாலும், பலம் முழுவதையும் திரட்டிக்கொண்டு தாய் போராட, தோற்றோடியது சிறுத்தை. தாயும் மகளும் உயிர்தப்பினர்.

‘கடவுளின் தேசம்‘ என்று அறியப்படும் கேரளத்தின் எல்லையை உரசியபடி நிற்கும் தமிழகத்தின் அழகிய மலைப்பிரதேசங்களில் ஒன்று வால்பாறை. இங்கே பெரியகல்லார் பகுதியில் இருக்கும் தமிழ்நாடு தேயிலை கார்ப்பரேஷன் குடியிருப்பில்தான் வசிக்கின்றனர் சிறுமி சத்யாவும் அம்மா முத்துமாரியும்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி, பிழைப்புக்காக 25 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் வால்பாறையில் குடியேறியவர். கணவன் விட்டுச்சென்ற நிலையிலும் அரும்பாடுபட்டுக் குழந்தைகளை வளர்த்துவரும் முத்துமாரி, சிறுத்தையிடமிருந்து மகளைக் காப்பாற்றுவதற்காக, தன் உயிரையும் பணயம் வைத்து மேற்கொண்ட தீரச்செயலைப் போற்ற வார்த்தைகளே இல்லை.

முறத்தால் புலியை விரட்டிய புறநானூற்றுத் தமிழ்ப் பெண் வரிசையில், கட்டையால் சிறுத்தையை விரட்டிய முத்துமாரியும் சேர்ந்து நிற்கிறார்.

ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், வீரத்துக்குத் தரப்படும் உயரிய அங்கீகாரமான `கல்பனா சாவ்லா விருது’, முத்துமாரிக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையால் வழங்கப்பட்டுள்ளது. முத்துமாரிக்கு நம் அனைவரின் சார்பிலும் மனம் கனிந்த பாராட்டுகள்!

முத்துமாரியைப் பாராட்டும் அதேநேரம்... நம்மையும் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக்கொள்வது நல்லது. ஆணோ... பெண்ணோ... குழந்தைகளைப் பன்முகத்தன்மையுடன் வளர்த்தெடுப்பதில் நாம் காட்டவேண்டிய அக்கறையை, அவர்களுடைய படிப்பில் மட்டும்தானே அதிகமாகக் காட்டிக்கொண்டிருக்கிறோம். வெளியுலகப் பழக்கவழக்கங்கள், விளையாட்டுகள், யாரிடமும் நேர்நின்று பேசக்கூடிய தைரியம் என்று பலவற்றிலும் அவர்களுடைய கவனத்தைத் திருப்ப வேண்டும். வீரம்செறிந்த ஒரு தலைமுறையை உருவாக்குவது நம் கைகளில்தானே இருக்கிறது, தோழிகளே!

உரிமையுடன்,

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick