சென்னையின் முதல் பெண் ஷெரீஃப் மூன்று பத்ம விருதுகளையும் பெற்ற முதல் பெண் - மேரி கிளப்வாலா ஜாதவ்

முதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

“எத்தனை உடல் உபாதை இருந்தபோதும், நேரமின்மை அழுத்தியபோதும் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூற அவர் மறந்ததேயில்லை... தெரியுமா?” என்கிறார் சென்னையில் இன்று மிகச் சொற்பமாக உள்ள பார்சி இனத்தவரில் ஒருவரான ஜரின் மிஸ்திரி. “ஒருமுறை கால்கள் வீங்க, செருப்பு அணிய முடியாத நிலையிலும், வெறும் காலால் மரப்படிகள் ஏறி, பழைய கட்டடத்தின் மாடிக்கு நோயாளிகளைப் பார்க்கச் சென்றார். அவர்தான் மேரி. பிறர் நலமே அவருக்குப் பிரதானம்” என்கிறார்.

வாழ்க்கையின் ஒரே ஆறுதலான மகனை இழந்த தாய் என்ன செய்வாள்? உடைந்து நொறுங்கிப்போய் ஒரு மூலையில் சுருண்டுகொள்வாள். மேரி, அப்படி அல்லர். 1974-ம் ஆண்டு மகன் இறக்க, அடுத்த ஆண்டு, தான் ஆதரவாளராக இருக்கும் பார்சி அஞ்சுமனுக்கு (பார்சி பஞ்சாயத்து) தன் மகன் பெயரால் கட்டடம் எழுப்பித் தருகிறார். கட்டடத்தின் திறப்பு விழாவுக்கு முன்னரே, அதே ஆண்டு இறந்தும் போகும் அந்தப் பெண், மேரி கிளப்வாலா ஜாதவ், மதராஸ் நகரின் முதல் பெண் ஷெரீஃப்.

1908-ம் ஆண்டு உதகமண்டலத்தில் ரஸ்தம் பட்டேலுக்கும் அல்லாமைக்கும் பிறந்தவர் மேரி. வசதியான குடும்பம். பள்ளியில் படிக்கும் காலத்தில் ‘கைடு’, ‘ரெட் கிராஸ்’ போன்ற இயக்கங்களில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டார் மேரி. தன் பதினெட்டாவது வயதில் நோகி கிளப்வாலாவைத் திருமணம் செய்துகொண்டார். அன்றைய மதராஸ் நகரில் கொடை வள்ளலாகத் திகழ்ந்த கிளப்வாலா குடும்பத்தைத் தெரியாத பார்சிகளே இல்லை எனலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick