நமக்குள்ளே...

நியூசிலாந்து நாட்டின் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஜூலி ஆன் ஜென்டர். இப்போது ஓர் அழகிய குழந்தைக்குத் தாயாகியிருக்கிறார். இதில் என்ன ஆச்சர்யம், குழந்தைப்பேறு சாதாரண விஷயம்தானே என்கிறீர்களா? ஜூலி மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆன முறைதான் ஆச்சர்யம். வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆக்லாந்து சிட்டி மருத்துவமனைக்கு, நிறைமாத கர்ப்பிணியான ஜென்டர் தன் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணித்துளிகளில் அழகிய குழந்தையுடன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவு செய்திருக்கிறார்.

நியூசிலாந்தின் `கிரீன்’ கட்சியைச் சேர்ந்த ஜென்டர், தன் பணிகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் சைக்கிள் பயணம், ரயில் மற்றும் பேருந்து என பொதுப்போக்குவரத்து குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருபவர். சாகசங்களின் மீது மிகுந்த ஆர்வம்கொண்டவரான ஜென்டர் கடலில் குதிப்பது, சைக்கிளில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வது என்று கலக்கிவருபவர். அதுதான், தன் பிரசவ நிமிடங்களிலும்கூட சைக்கிள் சவாரி நடத்தும் அளவுக்கு அவருக்குள் துணிச்சலை விதைத்திருக்கிறது.

பொதுவாகவே வெளிநாட்டுப் பெண்கள் தங்கள் உடல்நலன்மீது அதிக அக்கறை கொண்டவர்கள்தாம். எதற்கெடுத்தாலும் பயந்துகொண்டு, தயங்கிச் செயல்படுபவர்கள் அல்லர். அதிலும் கர்ப்பமான பிறகு, பயந்து நடுங்காமல், தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் துணிவோடு நடைபோடுபவர்கள்.

அதற்காக நம் ஊர்ப் பெண்களும் பிரசவ நேரத்தில் சைக்கிள் ஓட்ட வேண்டும்... சாகசம் செய்ய வேண்டும் என்பதில்லை. நம்நாட்டின் மோசமான சாலைகளிலும், தாறுமாறான போக்குவரத்திலும் சைக்கிள் ஓட்டுவது எல்லோருக்கும் சாத்தியமான விஷயமும் அல்ல. ஆனால், உடல் உழைப்பு என்கிற விஷயத்தில் நாம் நிறையவே ஆர்வம் காட்டலாம்தானே?

வெளிநாட்டுப் பெண் அமைச்சர் செய்திருக்கிறார் என்பதற்காக மட்டும் இதையெல்லாம் நாம் இங்கே பேசவில்லை. சொல்லப்போனால், வெளிநாட்டினருக்கே நம் பாட்டி, பூட்டிகள்தாம் ரோல்மாடல்கள். ஆம், அந்தக் காலத்தில் காட்டு வேலை, கழனி வேலை என்று செல்லும் நம்நாட்டுப் பெண்கள், அங்கேயே குழந்தையைப் பெற்றுக்கொண்டு, தலையில் விறகுக் கட்டுடனும் இடுப்பில் குழந்தையுடனும் வீட்டுக்கு நடந்து வந்த கதைகள் எல்லாம் இங்கே ஏராளம்.

அதற்காக, காட்டு வேலைக்குக் கிளம்பிவிட வேண்டாம். கடைசி நிமிடம் வரை, உடல் உழைப்பு நிறைந்த  வேலைகளைத்  தொடர்வோம். உரிய நேரத்தில் மருத்துவ உதவிகளையும் தவறாமல் பெறுவோம்.

சரிதானே தோழிகளே!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick