நமக்குள்ளே... | Editorial page - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

நமக்குள்ளே...

லுவலகத் தோழி பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம் நிறையவே அதிர்ச்சியைக் கொடுத்தது.

வழக்கத்தைவிட சோர்வாக இருந்திருக்கிறது அவருடைய பக்கத்து வீட்டுத் தோழியின் முகம். என்ன ஆயிற்று என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் கண்கள் கலங்கி அழுதிருக்கிறார். பதறிப்போய் விசாரித்ததில், `மாதவிடாய் வலி’ என்று சொல்லியிருக்கிறார். அவருடன் பணியாற்றும் பெண் ஒருவரும் மெனோபாஸ் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்பதாகச் சொல்ல, ஏகத்துக்கும் பயந்து போயிருக்கிறார் பக்கத்து வீட்டுத் தோழி. சில ஆண்டுகளாகவே மாதவிடாயின்போது அடிவயிற்றில் கடும்வலியும், திடீர் சதை இறுக்கமுமாக அவதிப்பட்டிருக்கிறார். ஆனால், யாரிடமும் அதை வெளிப்படுத்தவோ, பேசவோ இல்லை. `மாதவிடாயின்போது ஏற்படும் சாதாரண அசௌகரியங்களில் இதுவும் ஒன்று’ என்று எண்ணிவிட்டாராம். நம் அலுவலகத் தோழிக்கு ஏதோ பொறிதட்ட... கட்டாயப்படுத்தி கைனகாலஜிஸ்ட் ஒருவரிடம் அழைத்துச்சென்று பரிசோதித்ததில் `செகண்டரி டிஸ்மெனரியா’ பிரச்னை இருப்பது தெரிந்திருக்கிறது. இப்போது அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

`மனைவியை சரியாகக் கவனித்துக்கொள்ளவில்லையோ’ என்கிற குற்ற உணர்ச்சியில், மனம் வருந்துகிறார் அவருடைய கணவர். `என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே?’ என்று ஆற்றாமையில் அவர் சொன்னது இன்னமும் தன் காதில் ஒலிப்பதாகச் சொன்னார் அலுவலகத் தோழி.

மாதவிடாய், மெனோபாஸ் குறித்த சிக்கல்களைப் பெண்கள் அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் சூழலே இன்னும் உருவாகாத நிலையில், வீட்டில் உள்ள ஆண்களிடம் எப்படி பகிர்வது? அது குறித்த உரையாடல்களை எப்படி எடுத்துச் செல்வது? அம்மாவுக்கு அந்த நாள்களில் அதிகம் தொல்லை கொடுக்கக் கூடாது என்பது எத்தனை குழந்தைகளுக்குப் புரிகிறது? என்ன நிகழ்ந்தாலும் சரி, வீட்டின் அத்தனை வேலைகளும் கடிகாரச் சுழற்சி போல அச்சுப்பிசகாமல் நடக்க வேண்டும் என்று ஆண்கள் ஏன் நினைக்கிறார்கள்? அந்த நாள்களில் பெண்ணுக்குக் கொஞ்சம் ஓய்வு தரலாம் என்று எண்ணி உணவுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் ஆண்கள், மனைவி / தாய் / சகோதரியுடன் சமையலறைக்குள் சென்று உதவி செய்யும் ஆண்கள் எத்தனை பேர்? அந்த நாள்களில் பெண்கள் உடல்ரீதியாகவும் மனதளவிலும் பாதிக்கப்படுவது பற்றி வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளிடம் பேசுவதிலிருந்தே இதற்கான உரையாடல் தொடங்கப்பட வேண்டும்.

உடைத்துப் பேசுவோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க