நமக்குள்ளே... | Editorial page - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

நமக்குள்ளே...

தாத்தாவின் தோளில் வீட்டைச் சுற்றி சவாரி; சித்தப்பாவின் சைக்கிள் கேரியரில் அமர்ந்து காலை வேளைகளில் தோப்புப் பக்கம் தண்ணீர் திறந்துவிடப்போன பயணங்கள்; அத்தை, சித்திகள் புடைசூழ பாட்டியின் கைபிடித்து மாலை வேளைகளில் கோயிலுக்கு நடந்த நினைவுகள்... அத்தனையும் அசத்தலான அனுபவங்கள்! அக்கா, அத்தான், தம்பி, தங்கை என்று ஒரே தலைமுறையினர் கூட்டமாகக் கூட்டாஞ்சோறு பொங்கி உண்டதை இப்போதும் சிறு சிரிப்புடன் நினைத்துப் பார்க்கிறோம். பைக் ஓட்டக் கற்றுக்கொண்டது, பூக்கட்டப் பழகிக்கொண்டது, தாயம், பல்லாங்குழி என்று சிரிப்பும், விளையாட்டுமாகப் பொழுதுபோக்கியது, கோலமிடக் கற்றுக்கொண்டது என்று ஒவ்வொரு முறையும் கோடை விடுமுறையில் புதிதாக ஏதாவது ஒன்றைத் தெரிந்துகொள்ளத் தவறுவதில்லை குழந்தைகள்.

சிற்றூர்களில் தாத்தாக்களும் பாட்டிகளும் பெரியம்மாக்களும் பெரியப்பாக்களும் அத்தைகளும் மாமாக்களும் சித்திகளும் சித்தப்பாக்களும் கோடை விடுமுறையில் வீடு நிரப்பப்போகும் குழந்தைகளுக்காக ஆவலுடன் காத்திருப்பார்கள். வடகம் பிழிவது, வற்றல் காயவைப்பது, ஊறுகாய் போடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, தோட்ட வேலைகள் பார்ப்பது, கால்நடைகளைப் பராமரிப்பது என்று ஆண் பெண் என அனைவருமே ஓடித் திரிவார்கள். கூடவே, விடுமுறைக்கு வந்த குழந்தைகளும்!

அதெல்லாம் அந்தக் காலம் என்றாகிவிட்டது. `கிராமத்து வீடுகளில் ஏசி இல்லை, ப்ளே ஸ்டேஷன் இல்லை, வைஃபை இல்லை’ என்று காரணம் காட்டி, தாத்தா பாட்டிகளை மாதம் ஒரு வீடாக நகரத்துக்கு வரவழைத்துப் பங்கு போடுகின்றன ஃப்ளாட்களில் வசிக்கும் மகன்-மகள் குடும்பங்கள். கிராமத்திலிருக்கும் குழந்தைகள்கூட இப்போதெல்லாம் வீதிக்கு வராமல் வீட்டுக்குள்ளேயே மொபைல்போன் மற்றும் டி.வி முன்பாக முடங்கிக் கிடக்கின்றன.

கைப்பேசிகளில் ஊறிப்போய், ‘அதுவே உலகம்’ என்று வாழும் ஒரு சவலை சமுதாயத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோம். சூழலியல் தொடங்கி வேளாண்மை வரை, ஆணி அடித்தல் முதல் சிறிய பிளம்பிங் வேலை வரை, வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளை தானே நிறைவேற்றிக்கொள்ளும் எதையும் தேவை எனக் கருதாமல், விடுமுறையிலும்கூட குழந்தைகள் புத்தகக் கல்வி சார்ந்தே இயங்க வற்புறுத்துகிறோம். சோபாவை விட்டுக் கீழே இறங்காத ‘கவுச் பொட்டேட்டோ’ குழந்தைகளாகவே வாரிசுகளை வளர்ப்பது நம் தவறுதானே?

இந்த விடுமுறையிலாவது, குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்க அனுமதிப்போம்... வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகளை உருவாக்குவோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க