அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை | Health benefits of Curry leaves - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை

றிவேப்பிலையின் பசுமையில் ஒளிந்திருக்கும் இயற்கையின் செறிவுகள், உணவை மேன்மையாக்கும் நலக்கூறுகள்! இலையின் ஒவ்வொரு மெல்லிய நரம்பும் உண்பவரின் ஆயுளைக் காப்பதற்கான முகவரிகள்!

‘நரை, திரை, மூப்பு’ ஆகியவற்றைத் தள்ளிப்போடும் இயற்கையின் பேரானந்தமான கறிவேப்பிலைக்கு, கறிவேம்பு, கறியபிலை, கருவேப்பிலை போன்ற வேறு பெயர்களும் உள்ளன. செரிமானத்தைத் துரிதமாக்கி, உடலுக்கு உரத்தைக் கொடுக்கும் அஞ்சறைப் பெட்டியின் அச்சாணி கறிவேப்பிலை.

கறிவேப்பிலை இலைகளில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, அமினோ அமிலங்கள், கிளைக்கோஸைடுகள் என உடலுக்கு அத்தியாவசியமான கூறுகள் நிறைந்துள்ளன. இதிலுள்ள `கார்பசோல்’ ஆல்கலாய்டுகள், செல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஃப்ரீ- ரேடிக்கல்களை அழித்து, நோய் தங்காமல் பார்த்துக்கொள்ளும். பீட்டா-கரோட்டீன்களுடன் வைட்டமின் சி-யையும் நிறைவாகக்கொண்டுள்ளது கறிவேப்பிலை. நீரிழிவால் உண்டாகும் பாதிப்புகளைத் தடுத்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கறிவேப்பிலை சிறந்தது என ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

நல்ல கொழுப்பை அதிகரித்து, டிரை கிளிசரைடுகளின் அளவை கறிவேப்பிலை குறைக்கும். குடல் பகுதியின் ஆரோக்கியத்தை அதிகரித்து, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை கறிவேப்பிலை குறைக்கும் என்கிறது ஆராய்ச்சி. நினைவுத் திறனை அதிகரிக்கவும், நுண்புலத்துடன் செயல்படுவதற்குக் காரணமான மூளையின் குறிப்பிட்ட பகுதிகளைக் கறிவேப்பிலை தூண்டும்.

கறிவேப்பிலையின் மணமும் சுவையும் எச்சிலின் சுரப்பை அதிகரித்து, செரிமானத்துக்கு வழிவகுக்கும். கறிவேப்பிலையை அரைத்து, எலுமிச்சைச்சாற்றுடன் கலந்து குடித்தால், பயணங்களின்போது வாந்தி, குமட்டல் உணர்வுகள் காணாமல்போகும். கருவுற்ற பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் வரும் குமட்டல், உணவு எதுக்களித்தல், வாந்தி, அஜீரணம் போன்ற குறிகுணங்களைக் குறைத்து, சீரான செரிமானத்தைத் தருவதுடன், இரும்புச் சத்தையும் அள்ளிக்கொடுக்கக்கூடியது கறிவேப்பிலை. இதைப் பொடியாக்கி, நல்லெண்ணெய்விட்டுக் குழைத்து, தினமும் சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவது உடல்நலத்துக்குத் தொடக்கப்புள்ளி!