நமக்குள்ளே... | Editorial page - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

நமக்குள்ளே...

ரியானா மாநிலம், ஜிந்த் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, சத்தர் கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்தர் என்பவருக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில், ஜிதேந்தர் குடும்பத்தினரை வரவழைத்த மணப்பெண், தான் கூட்டு வன்கொடுமைக்கு ஆளான துயரத்தை விளக்கி, ‘திருமணம் வேண்டாம்’ என்று மறுக்க, அதிர்ந்துபோனது ஜிதேந்தரின் குடும்பம். ஆனால், ‘இந்தப் பெண்ணை தவிர்த்தால் வாழ்க்கை முழுக்கக் குற்ற உணர்வுக்கு ஆளாகிவிடுவேன். என்ன நடந்தாலும் சரி, இந்தப் பெண்தான் என் மனைவி’ என்று உறுதியாக முடிவெடுத்த ஜிதேந்தர், குடும்பத்தினரையும் ஏற்றுக்கொள்ள வைத்தார். இனிதே திருமணம் நடந்தேறியது!

அதன்பிறகு நடந்தது... இன்னும் ஆச்சர்யம்! ‘அந்தக் கயவர்களை அப்படியே விட்டுவிடக் கூடாது’ என்று சபதம்போட்ட ஜிதேந்தர், மனைவியின் துணையுடன் வழக்கு தொடர்ந்தார். சொத்துகளை விற்று நீதிமன்றத்தில் போராடியவர், வழக்கறிஞருக்கு கட்டணம் செலுத்த இயலாது என்கிற நிலையில், மனைவியுடன் சேர்ந்து தானும் சட்டம் பயிலத் தொடங்கிவிட்டார். இனி, தானே நீதிமன்றப் படியேறி வாதாடத் தயாராகி வருகிறார். தன் மனைவிக்காக மட்டுமல்ல; ஜிந்த் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எங்கு நடந்தாலும் முதல் நபராகப் போர்க்கொடி உயர்த்துகிறார் ஜிதேந்தர்.

நான்கு ஆண்டுகளாகத் தன்னலமற்று இவர் நடத்திக்கொண்டிருக்கும் நீதிப் போராட்டம்... ‘சன் ரைஸ்’ எனும் குறும்படமாக வந்துள்ளது.

‘ஜிதேந்தரின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம். உலகில் யாருக்கும், எதுவும், எப்போதும் நடக்கலாம். அன்று, நம்முடன் துணைநிற்கப்போவது யார்? இந்தக் கேள்வியை நமக்குள் எழுப்புவோம்’ என்கிறார், இந்தப் படத்தை இயக்கியிருக்கும் விபா பக்‌ஷி.

உண்மையில், பாலியல் வன்கொடுமை என்பதே ஒரு விபத்துதான். ஆனால், அந்தத் தெளிவு முதலில் நமக்கு இருக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறி. நாம் வளர்க்கும் ஆண் குழந்தைகளுக்கு ஜிதேந்தர் போன்ற நெஞ்சுரத்தையும், வாழ்க்கை பற்றிய தெளிவையும் சொல்லித்தருகிறோமா என்பது அதைவிட மிகப்பெரிய கேள்விக்குறி.

ஒரு நல்ல ஆணை உருவாக்குவதே சமூகத்துக்கு, உலகுக்குச் செய்யும் பேருதவி. ‘நான் அப்படிப்பட்ட தாய்’ என்று ஒவ்வொரு பெண்ணும் கையை உயர்த்தி பெருமைப்படும் காலம் விரைவில் வரும் என்று நம்புவோம்!

உரிமையுடன்,

ஆசிரியர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க