சினிமா, சின்னத்திரை, அரசியல் களங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்ரவுண்டர் குஷ்பு. ‘வருஷம் 16’-ன் சைனீஸ் பட்லரின் தமிழ் இப்போது மேலும் மெருகேறியிருக்கிறது. பேச்சில் அழகும் அறிவும் அனுபவ முதிர்ச்சியும் பிரதிபலிக்கின்றன.
சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலின் படப் பிடிப்பில் இருந்த குஷ்புவை அவள் விகடன் வாசகியரின் கேள்விகளுடன் சந்தித்தோம். கிரீன் ரூமிலிருந்து அவர் தந்த கலர்ஃபுல் பதில்கள்...
குஷ்பு, நக்கத் இருவரில் யார் உங்களை மிகவும் கவர்ந்தவர்? இன்னமும் நக்கத்தாகவே வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுமா?
சாந்தினி, சென்னை-111
எனக்கு ரெண்டு பேருமே ஒன்றுதான். பெயர் மாறினதால், ஆள் மாறிடுவாங்கன்னோ, உள்ளங்கள் மாறிடும்னோ அர்த்தமில்லை. என் குடும்பத்தில் எல்லாரும் என்னை என் இயற்பெயர்லதான் கூப்பிடுவாங்க. குஷ்புங்கிறது சினிமாவுக்காக வெச்ச பெயர் அவ்வளவுதான்!
பயணங்கள் மீதான உங்கள் காதல் அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் நீங்கள் டிராவல் செய்த இடம்?
பி.மஞ்சு, பெரியபாளையம்
பயணம் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். புதுப்புது இடங்களுக்குப் போகணும், அந்த இடங்களின் கலாசாரங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுவேன். அதனால நிறைய டிராவல் பண்ணுவேன். சமீபத்துல போன இடங்கள் நார்வே மற்றும் லண்டன். நார்வே போனது இதுதான் முதன்முறை. நார்வேயில் சிட்டிக்குள்ள போகாம, இன்டீரியர் ஏரியாக்களுக்கு டிராவல் பண்ணினோம். அது வித்தியாசமான அனுபவமா இருந்தது.
மல்டி டாஸ்க்கிங் செய்கிறீர்கள். உங்களுக்கான நேரத்தை எப்படி மேனேஜ் செய்வீர்கள்?
ஷீலா ஜோன்ஸ், செங்கல்பட்டு
என் வேலைகளை நான் பிளான் பண்ணிடுவேன். அரசியலைப் பொறுத்தவரைக்கும் சில நேரம் அப்படி பிளான் பண்ண முடியாது. அப்பவும் என் மகள்கள்கிட்ட நான் அந்த நேரம் இருக்க மாட்டேன்னு தகவல் சொல்லிடுவேன். எவ்வளவு முக்கியமான மீட்டிங்ல இருந்தாலும் வீட்டுலேருந்து போன் வந்தா எடுக்காம இருக்க மாட்டேன். என் குழந்தைங்க பிறந்தபோது அவங்களுக்கு மசாஜ் பண்ணி குளிப்பாட்டறது, சாப்பாடு ஊட்டறதுனு எல்லா வேலைகளையும் நானே பண்ணியிருக்கேன். வேலைக்கு ஆள் வெச்சுப் பார்த்ததில்லை. அதனால எப்போ நமக்குத் தேவையோ, அப்போ அம்மா நம்மகூட இருப்பாங்கனு அவங்களுக்கும் தெரியும்.
மனசுவெச்சா முடியாதது எதுவுமே இல்லை. ஒரு வேலையைச் செய்யாமலிருக்க நூறு காரணங்களைத் தேடலாம். ஆனா, அந்த வேலையைச் செய்ய காரணங்களே தேவையில்லை. வீட்டையும் வேலையையும் பேலன்ஸ் பண்றது பெரிய விஷயமே இல்லை.