அஞ்சறைப் பெட்டி - வெங்காயம் - உடல் எனும் காயத்தைக் காக்கும் கேடயம்! | Health benefits of onion - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

அஞ்சறைப் பெட்டி - வெங்காயம் - உடல் எனும் காயத்தைக் காக்கும் கேடயம்!

`ரிக்க உரிக்க ஒன்றுமே இல்லை’ என்னும் வாழ்க்கையின் நிலையில்லா தத்துவத்தை உணர்த்தும் வெங்காயம், நம்மை உரிமையுடன் அழ வைக்கும் அன்பன். கூடுதல் கரிசனத்துடன், நோய்களைத் தடுத்து ஆரோக்கியத்தைத் தரும் வெங்காயம், இயற்கையின் பிரமிப்பும்கூட!

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தவிர்த்து, உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் வெங்காயம் காணப்படுகின்றன. ஈருள்ளி, சுக்கிரந்தம், நிச்சயம், பலாண்டு, காயம் ஆகிய பல்வேறு பெயர்களைக்கொண்ட வெங்காயத்துக்கு சிறுநீர்ப்பெருக்கி, காமம்பெருக்கி, கோழையகற்றி போன்ற செய்கைகள் இருக்கின்றன. இது சிரங்கு, மூலம், வாய்ப்புண், தாகம், கழிச்சல் போன்ற குறிகுணங்களை நீக்கும் என்பதை, ‘வெப்பமூலங் கிரந்தி வீறுரத்த பித்தமுடன்…’ எனத் தொடங்கும் அகத்தியரின் சித்த மருத்துவப் பாடல் சுட்டிக் காட்டுகிறது.

நெடுங்காலத்துக்கு முன்பே இந்தியா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் விளைவிக்கப்பட்ட நறுமணமூட்டி இது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய கல்லறைகளில், வெங்காயம் சார்ந்த சான்றுகள் கிடைத்திருக்கின்றன. குரான், விவிலியம், இந்து புராணங்களில் வெங்காயம் பற்றி எண்ணற்ற குறிப்புகள் காணப்படுகின்றன. மெசபடோமியா நாகரிகத்தில், `சர்வரோக நிவாரணி'யாகச் செயல்பட்டது வெங்காயம். எகிப்திய, ரோமானிய, கிரேக்க, சீன இலக்கியங்களில் வெங்காயத்தின் மேன்மை குறித்துப் பேசப்பட்டுள்ளன.

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் போன்ற சத்துகளைத் தனது உடலில் வெங்காயம் நிறையவே சேமித்துவைத்துள்ளது. வெங்காயத்தின் மணம் மற்றும் நெடிக்குக் காரணம், நிறைய கந்தகச் சத்தை தன்னகத்தே வைத்திருப்பதே.

வெங்காயத்தில் உள்ள `குயிர்செடின்’ (Quercetin) எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள், காய்ச்சல் முதல் புற்றுநோய் வரை எதுவும் நம் உடலைத் தாக்காமல் பாதுகாக்கக்கூடியது. வெங்காயத்தில் உள்ள ஆந்தோசயனின்களும் வெங்காயத்தின் மருத்துவ மதிப்பைக் கூட்டுகின்றன. வெங்காயத்தைப் புற்றுநோய் பரவாமல் தடுத்து நிறுத்தும் ஓர் எல்லை வீரன் என்கின்றன ஆய்வுகள். ரத்தக்குழாய்களில் கொழுப்புத் திட்டுகள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு. நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க, சமையலில் வெங்காயத்தை கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் செயல்திறனை அதிகரித்து நீரிழிவைக் கட்டுப்படுத்துவதிலும் இதன் பங்கு அதிகம்.

இந்தோனேசியா மற்றும் சீனாவில் வெங்காயத்தை நறுக்கி நூடுல்ஸ் மற்றும் அரிசி உணவுகளின்மீது தூவிச் சாப்பிடும் வழக்கம் அதிகம். `லக்ஸா’ எனப்படும் நூடுல்ஸ் சூப்பில், வெங்காயத் தைத் தூவுவதால்தான் சுவை கூடுவதாக வாதிடுவோர் பலர் உண்டு.