கலை வித்தகி
உலகளவில் கதை சொல்லும் கலையில் பிரபலமானவர்களில் ஒருவர், தீபா கிரண். இரானில் நடைபெற்ற சர்வதேச கதை சொல்லும் திருவிழாவில் கலந்துகொண்ட முதல் இந்தியப் பெண் என்கிற பெருமைக்குரியவர். இவர் தமிழ்ப் பெண் என்பது, நமக்கான கூடுதல் பெருமை. ஹைதராபாத்தில் வசிக்கிற தீபாவுக்கு, உரையாடலின்போதுகூட கண்கள் கதை பேசுகின்றன!
‘`சென்னையில் பிறந்தேன். தி.நகரில் எங்கள் வீடு. என் அப்பாவும் தாத்தாவும் விகடன் வாசகர்கள். அப்படி ஆர்வமாக அதில் என்ன படிக்கிறார்கள் என்று அதைப் புரட்டியபோது, கதைகள் என் கைகளுக்கும் வந்தன. அப்பா நிறைய கதைகள் சொல்வார். என் அம்மாவுக்குப் பூர்வீகம் பாலக்காடு. பல வருடங்கள் மேற்குவங்கத்தில் வசித்தேன். அதனால் தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், பெங்காலி உட்பட பல மொழிகள் தெரியும்’’ என்கிறவர், தான் கதைசொல்லியான தருணத்தைப் பகிர்கிறார்.