- மருதன், ஓவியம் : வேலு
முள்ளம்பன்றியின் மேலுள்ள முட்கள் போல உடலிலுள்ள மொத்த அணுக்களும் அதிர்ந்து விழித்துக்கொண்டன. ஆனால், தோப்தி திரும்பவில்லை. அவள் நடந்து கொண்டிருந்தாள். ஒரு பெண் சோறு வடித்துக் கொடுத்திருந்தாள். வடிந்த சோறு ஆறியவுடன் சிறிதளவு எடுத்து இடுப்புத் துணியில் முடிந்து எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள் தோப்தி. இப்போது அவள் காட்டுக்குள்ளிருக்கும் கேம்புக்குச் சென்றாக வேண்டும்.
‘தோப்தி!’ தன் பெயரைச் சொல்லி யார் அழைத்தாலும் திரும்பிப்பார்க்கக் கூடாது என்று அவளுக்குத் தெரியும். தோப்தி மேஜேனைப் பிடித்துக்கொடுத்தால் சர்கார் 200 ரூபாய் பணம் கொடுப்பார்களாம். அதற்காக ஆசைப்பட்டு யாராவது பின் தொடர்கிறார்களா? நான் தோப்திதான் என்பதை உறுதி செய்துகொள்வதற்காக என்னை அழைத்துப்பார்க்கிறார்களா? வேட்டை விலங்குகளைப் போல சுற்றிக்கொண்டிருக்கும் வீரர்களிடம் சிக்கிக்கொண்டால் என்னாகும் என்று தோப்திக்குத் தெரியும். அவளுக்குத் தெரிந்த ஒரு பையனைக் கட்டிப்போட்டு, ஒவ்வொரு எலும்பையும் நொறுக்கியிருக்கிறார்கள். பிறகு ‘கௌண்டர்’ பண்ணிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். அதற்குள் அவன் நாக்கைக் கடித்துத் துப்பிவிட்டான்.
தோப்திக்கு இது மறுவாழ்வு. கடந்த முறை பெரிய தொரையின் ஆள்கள் நடத்திய கௌண்டரில் பல பழங்குடிகள் செத்து விழுந்துவிட்டனர். அதில் தோப்தியும் இருந்தாள். உடலெல்லாம் ரத்தம் வழிய அப்படியே மூச்சைப் பிடித்துக்கொண்டு அவள் சடலங்களோடு படுத்துக்கிடந்தாள். காவலர்கள் நகர்ந்ததும் எழுந்து ஓடி வந்துவிட்டாள். பெரிய தொரை திரும்பிவந்து உடல்களை எண்ணியபோது, அவருக்கு பெரிய தலைகுனிவாகப்போய்விட்டது. ஒரு புழுவைப் போல அவர் துடித்தார். தோப்தி, தோப்தி என்று அரற்றத் தொடங்கினார். அவர் உடலும் கெட்டுப்போனது.