முத்துப்பய இருக்கானே, மகா கெட்டிக்காரன். ஆறு அண்ணனுங்களுக்குப் பிறகு பெறந்த கடைக்குட்டிப் பய. வீட்டுக்கே செல்லப்புள்ள. முத்துவோட அப்பங்காரன் அந்த ஊர்ல பெரிய பணக்காரன். ஏகப்பட்ட நெலபுலங்க கெடக்கு. ஊர்லயும் பெரிய மரியாதை.
அறுபத்து நாலு கலைகள்னு சொல் வாங்களே... எல்லாத்திலயும் ஆழங்கால்பட்ட பயலா இருந்தான் முத்து. குறிப்பா, மல்யுத்தம், வாள் சண்டையில அவனை மிஞ்ச அந்த வட்டாரத்துலயே ஆளில்லை. ஓலைச் சுவடிகளையெல்லாம் படிச்சு மந்திரம், மருத்துவம்னு எல்லாத்தையும் கத்து வெச்சிருந்தான்.
முத்துவுக்கு ரொம்பநாளா ஆசை... அந்தூரு ராஜாகிட்ட தன் தெறமைகளைக் காமிச்சு பரிசு வாங்கணும்னு. அப்பனுக்கும் அண்ணங்காரனுகளுக்கும் தெரிஞ்சா விட மாட்டானுக. ஒருநாளு, யாருக்கும் தெரியாம வீட்டைவிட்டுக் கிளம்பிட்டான். கிராமத்துல இருந்து தொலைதூரத்துல இருந்துச்சு அரண்மனை.
காடு, மலைன்னு எல்லாத்தையும் கடந்து ஒருவழியா அரண்மனைக்குப் போயி, ராஜாகிட்ட பாட்டு, கவிதை, கூத்துன்னு எல்லாத்தையும் செஞ்சு காமிச்சான் முத்து. ராஜாவுக்கு அவனை ரொம்பப் புடிச்சுப் போச்சு. ‘இவ்வளவு திறமைசாலியா இருக்கானே’னு நிறைய வெகுமதிகளைக் கொடுத்து அரண்மனையிலயே வேலையும் போட்டுக் குடுத்துட்டாரு.