நமக்குள்ளே...

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடி கணவரையும் அவர் குடும்பத்தையும் ஏமாற்றியிருக்கும் செய்தி, கடந்த வாரத்தில் பேசுபொருளாக இருந்தது. நிறைமாதம் வரை சமாளிக்க முடிந்த அந்தப் பெண்ணால், அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குழந்தை பிறந்து காணாமற்போனதாகச் சொல்ல, போலீஸுக்கு விஷயம்போய், தீவிர விசாரணையில் மாட்டிக்கொண்டார்.

குழந்தை வேண்டும் என்று கோயில் கோயிலாக அலைக்கழிக்கப்படும் பெண்கள்; குழந்தைப் பேற்றுக்காக மருத்துவமனைகளிடம் பணத்தைக் கொட்டிக்கொடுத்து வாசலில் காத்துக்கிடக்கும் தம்பதிகள்; பிறந்த பச்சிளம் குழந்தைகளைத் திருடி விற்கும் கூட்டம்... இப்படி குழந்தைக்காக இவ்வளவு மெனக்கெடக் காரணம்... சமூக அழுத்தமே!

சமூகமும் குடும்பமும் உறவுகளும் கொடுக்கும் அழுத்தம், குழந்தைப்பேறு இல்லாதவர்களை எந்த எல்லைக்கும் துரத்துகிறது. அப்பாவிப் பெண்களைப் பொய் சொல்லவும், ஏமாற்றவும், அடுத்தவர் குழந்தையை அபகரிக்கவும் தூண்டுகிறது. திருமணம் ஆன அடுத்த மாதம் முதலே, `ஏதாவது விசேஷம் உண்டா?’ என்று பூடகமாகக் கேட்பதில் தொடங்கும் கேள்விகள், ஆண்டுகள் உருள உருள வெளிப்படையான வெறுப்பை உமிழ்கிறது. `உன்னோட கல்யாணமானவங்க எல்லாம் ரெண்டு புள்ளை பெத்தாச்சே?’ என்பது உள்ளிட்ட `சுருக்’ கேள்விகளைக் கேட்பது ஆண் அல்ல; யாரோ ஒரு பெண் என்பதுதான் வேதனை!

ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் மட்டுமே அந்தப் பெண் அல்லது ஆணின் வாழ்க்கை முழுமை அடையும் என்கிற தவறான கற்பிதத்தை மூளைக்குள் ஏற்றிக்கொண்டிருக்கிறோம்.

‘வாரிசு’, ‘வம்ச விருத்தி’ போன்ற எண்ணங்களை கெட்டியாக இன்னமும் பிடித்துக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் தனக்கான வாழ்க்கையை அவரவர் விரும்பியபடி அமைக்க யாரையும் சமூகம் அனுமதிப்பதில்லை. இந்த மேட்டிமைத்தனமே பலரது மனப்பிறழ்வுக்கும் சஞ்சலத்துக்கும் காரணமாகிறது என்பதை, பலரும் உணர்வதில்லை.

நாம் வாழ்ந்த வாழ்க்கையும், அதில் செய்த நல்லவையும் மட்டுமே நம் பெயரை உலகம் உள்ளவரை சொல்லும். நாம் பெற்ற குழந்தைகள் அல்ல... அவர்கள் நம் பெயர்தாங்கிகள் அல்ல; அவர்களுக்கான வாழ்க்கை அவர்களுடையது என்கிற புரிதலே போதுமானது!

ஆம்... கிடைத்திருக்கும் ஒரு வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து, பிறரையும் விருப்பப்படி வாழ விடலாமே!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick