அஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் அன்னாசிப்பூ!

அஞ்சறைப் பெட்டிடாக்டர் வி.விக்ரம்குமார்

றுமணமூட்டிகள்... நீளம், உருளை, தட்டை போன்ற வடிவங்களில்  இருந்தாலும், நட்சத்திர வடிவத்தில் வித்தியாசமாகக் காட்சியளிப்பது அன்னாசிப்பூ. எனவே, இது அஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் என்று சொல்லப்படுகிறது. ருசிக்கும்போது லவங்கமும் லவங்கப்பட்டையும் சேர்ந்த சுவைக் கலவையைக் கொடுக்கக்கூடியது இது. இனிப்பு மற்றும் கார்ப்புச் சுவைகளை நாவில் ஆங்காங்கே படரவிடும் தன்மை படைத்தது.

அன்னாசிப்பூவின் சுவையை அதிகமாக உணர, காஷ்மீர் உணவு ரகங்களின் மீது காதல் கொள்ளலாம். அன்னாசிப்பூவுடன், பல்வேறு நறுமணமூட்டிகள் கலந்து தயாரிக்கப்படும் தேநீர், தாய்லாந்து வீதிகளை உற்சாகமடைய வைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் நொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் பானங்களில் அன்னாசிப்பூவை இப்போது அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். நுரையீரல் தொடர்பான நோய்களுக்கும், வாதநோய்களுக்கும் சீன மருத்துவத்தில் உணவாகவும் மருந்தாகவும் அன்னாசிப்பூ பயன்படுத்தப்படுகிறது.

சமீபகாலமாகப் பரபரப்பாகப் பேசப்படும் பன்றிக்காய்ச்சலுக்கு `டாமிஃப்ளூ’ மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரையைத் தயாரிக்க, `ஷிகிமிக் அமிலம்’ எனும் இயற்கை மூலக்கூறு முக்கியக் காரணியாகச் செயல்படுகிறது. மருத்துவக் குணம் நிறைந்த அந்த அமிலம் அன்னாசிப்பூவில் அளவில்லாமல் கிடைக்கிறது. இதன் காரணமாகக் குறிப்பிட்ட ஆண்டில் நோய்த் தொற்று அதிகமாக இருந்தபோது, அன்னாசிப் பூவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதாக மருத்துவ வரலாறு குறிப்பிடுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி வழங்கி, பல்வேறு காய்ச்சல் வகைகளைத் தடுக்கும் திறன் படைத்த அன்னாசிப்பூவை, காய்ச்சல் பரவிவரும் காலத்தில் உணவில் பயன்படுத்துவது சிறந்தது. `அனித்தோல்’ என்னும் பொருளும் அன்னாசிப்பூவின் மருத்துவ மகத்துவத்துக்குக் காரணமாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick