மார்கழி மாசம்தான் எங்களுக்குத் தீபாவளி!

வாழ்க்கைக் கோலம்

மார்கழி மாதத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, வாசல்தோறும் பூத்துக்கிடக்கும் வண்ணக்கோலங்கள். அந்தக் கோலங்களுக்கான கலர் பொடி தயாரிக்கும் மக்களின் வாழ்க்கைக் கோலத்தைப் பார்வையிடுவதற்காக, கலர் கோலப்பொடி தயாரிக்கப்படும் திண்டிவனம் அருகே உள்ள இருதயபுரம் கிராமத்துக்குச் சென்றோம். கேமராவைப் பார்த்ததும், ‘யாரு, என்ன எழுதி எங்க பொழப்பு விடியப்போகுது? எதுவும் வேணாம்...’ என்று அந்த ஊர்ப் பெண்கள் விரக்தியுடன் பேசினார்கள். நாம் காத்திருக்க, சிறிதுநேரம் கழித்து மௌனம் உடைத்தார்கள்.

“நாலு தலைமுறையா கோலப்பொடி தயாரிக்கறதுதான் எங்களுக்குக் குடும்பத் தொழில். இதுல கிடைக்குற காசு வாயிக்கும் வயித்துக்குமே போதலைன்னாலும், எங்களுக்கு வேற வழியும் தெரியல’’ எனச் சொல்லும்போதே கண்கள் கலங்கி அமைதியாகிறார் ஆரோக்கியமேரி. “அக்கா... போயி வியாபாரத்தைப் பாரு. அழுது எதுவும் மாறப்போறதில்ல’’ என்று அவரைச் சமாதானப் படுத்தி பேச ஆரம்பித்தார் சுகன்யா.

“எனக்கு ஆறு வயசானப்போ, எங்கப்பா கலர் கோலப்பொடி தயாரிக்க எனக்குக் கத்துக் கொடுத்தாரு. இந்தா... என் கையில சாயம் இல்லாம பார்க்க எனக்கே பிடிக்காது’’ என்று சாயமேறிய தன் விரல்களை விரித்துக்காட்டுகிறார். அவர் கண்களிலோ வறுமையின் சாயம் அப்பியிருக்கிறது. ‘`எங்க ஊர்ல இருக்குற 50 குடும்பங்களுக்கு இதுதான் குலத்தொழில். மார்கழி மாசம்தான் கலர் கோலப்பொடி வியாபாரம் நல்லாயிருக்கும்; எங்களுக்கும் வருமானம் கிடைக்கும். அதனால மார்கழி மாசம் வந்துட்டா போதும்... எங்க புள்ளைக தீபாவளியைக் கொண்டாடுற மாதிரி கொண்டாடுவாங்க. நோட்டு புஸ்தகத்துல இருந்து, புதுச் சொக்கா வாங்குறவரை எல்லாமே இந்த மாசம்தான். இந்த ஒரு மாச வருமானத்துக்காகத்தான் வருஷம் முழுக்க  உழைக்குறோம்’’ - கலர் பொடிகளை பாக்கெட் போட்டுக்கொண்டே பேசுகிறார் சுகன்யா.

“ஒரு வீட்டுல அப்பா, அம்மா, புள்ளைனு குடும்பமாதான் கோலப்பொடி செய்துகிட்டு இருந்தோம். ஆனா, வருமானம் குறைய குறைய ஆம்பளைங்க எல்லாம் வெளியூர்களுக்குக் கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க. `சரி. இந்தப் பொழப்பு நம்மளோடு போகட்டும்; புள்ளைகளப் படிக்கவெச்சு கரையேத்திவிட்டுடலாம்’னு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா, அங்கே சரஸ்வதியை முந்திக்கிட்டு சாதியில உக்காந்திருக்கு?! சாதி சரியில்லைனு சாப்பிடாம இருக்க முடியாதுல? அதனால, சரி குலத்தொழிலையாச்சும் செஞ்சு பொழச்சுக்கோங்கனு புள்ள குட்டிகளுக்கும் கோலப்பொடி தயாரிக்கச் சொல்லிக்கொடுத்துருவோம். எங்க புள்ளைக வெளியூருக்குப் போயி கம்ப்யூட்டர் வேலை பார்த்து நல்லா சம்பாதிக்கணும்னு எங்களுக்கும் ஆசையிருக்கும்தானே? அதனால, எல்லாத்தையும் தாண்டி என் புள்ளைகளை நான் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறேன். எங்க கையில இருக்குற சாயக்கறை போக, இங்கேயிருக்குற சாதிக்கறை போகணும்’’ என்று ஆற்றாமையும் நம்பிக்கையும் ஒன்றுசேரப் பேசினார் சுகன்யா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick