உயிருக்கும் மேலாக பணியை நேசிக்கும் பெண்கள்!

எழுத்து எங்கள் ஆயுதம்

தினமும் தலைப்புச் செய்தி கொடுக்கும் பத்திரிகையாளர்களே தலைப்புச் செய்தியாகும் நிகழ்ச்சியும் அவ்வப்போது அரங்கேறும். பெண்ணுரிமை குறித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் குறித்தும் தினம் தினம் எழுதிக்கொண்டிருந்த பெண் பத்திரிகையாளர்கள் 2018-ம் ஆண்டில் திடீரென தாங்களே அத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதைப் பகிரங்கமாகத் தலைப்புச் செய்தியாக்கினார்கள்.

தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களைப் பற்றிப் பேசினால்... தன்னை சந்தேகப்படுவார்கள்; வேலை போய்விடும்; இந்தச் சமூகம் கேவலமாகப் பார்க்கும்; திருமணத்தின்போது சிக்கல் ஏற்படும்; குடும்பத்துக்கு அவமானம் நேரிடும் போன்றவற்றை உடைத்தெறிந்து பெண்கள் இதுவரை பேசத் தயங்கியதை,  வெளிப்படையான மனதுடன் மடைதிறந்த வெள்ளமாக முழங்கத் தொடங்கினார்கள்.

`வீடு தொடங்கி, இந்த உலகில் பெண்களுக்கு  நிம்மதி தரும் இடம் என எதுவுமில்லை' என்பதை உணர்த்தும் வண்ணம் அமைந்தது அந்தப் பெண்களின் புகார்கள். இந்தப்  புகார்கள் அனைத்தும்  `மீ டு’ என இயக்கமாக மாறியது.

இந்த நிலையில் முன்னாள் பத்திரிகையாளரும் மத்திய அமைச்சராக இருந்தவருமான எம்.ஜே.அக்பர் மீது, 19-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் அளித்தனர். இதையடுத்து எம்.ஜே. அக்பர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அரசு, `மீ டு’ இயக்கம் தொடர்பாக அமைச்சர்கள் உள்ளடங்கிய கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்தது. இவ்வாறாக, பெண் பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளிக்கொண்டு வந்ததோடு, தங்களது பணி மூலம் பெண்களுக்கு நேரும் பல்வேறு அவலங்களை, உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் அதிகாரத்துக்கு எதிராக வெளிப்படுத்தினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick