அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்! | Health benefits of Sitharathai - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/05/2019)

அஞ்சறைப் பெட்டி: சிற்றரத்தை - பூமிக்குள் மறைந்திருக்கும் மருத்துவப் புதையல்!

ஞ்சியின் நெருங்கிய உறவினர் அரத்தை. வாசனை மற்றும் மருத்துவக் குணத்தில் இஞ்சிக்குக் கொஞ்சமும் சளைத்தது அல்ல. வாசனையால் மதிமயக்கி உணவை நோக்கி நம்மைச் சுண்டியிழுக்கும் `சுகந்த அஸ்திரம்’ அரத்தை. ‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்றொரு மருத்துவப் பழமொழி  உண்டு. சளி, இருமல், இரைப்பு போன்ற கப நோய்களை உணவின் மூலம் விரட்ட, வேர்க்கிழங்கான அரத்தைக்கு அஞ்சறைப் பெட்டிக்குள் இடம் ஒதுக்குங்கள்.

அரத்தையில் சிற்றரத்தை, பேரரத்தை மற்றும் சீன அரத்தை ஆகியன உள்ளன. சிற்றரத்தையைவிட, பேரரத்தையின் வீரியம் சற்று குறைவே. உணவுக்குத் தேவைப்படும் நெடி மற்றும் மணத்துக்கேற்ப சமையலில் அரத்தையின் பிரிவுகளை சமயோசிதமாகப் பயன்படுத்துவது அவசியம். சமையலில் இஞ்சியைப் போலவும், இஞ்சிக்கு மாற்றாகவும் அரத்தை ரகங்கள் நம்மிடையே பயன்பாட்டில் இருந்தன. தற்காலத்தில், சமையலில் பயன்படுவதைவிட மருந்தாகவே அதிக புழக்கத்தில் இருக்கின்றன. மருத்துவக் கூறுகள் நிறைந்த அஞ்சறைப் பெட்டிப் பொருளை, மீண்டும் சமையலுக்குள் அழைத்தால் பலன்கள் நமக்குத்தானே!

மஞ்சளுக்கு எப்படி முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதேபோல் தாய்லாந்து மக்கள் சிற்றரத்தைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். தாய்லாந்து நாட்டின் சிவப்பு மற்றும் பச்சை மசாலா பசைகள், புகழ்பெற்ற `தேங்காய் சிக்கன் சூப்'பில் (Tom-kha-gai) சிற்றரத்தை தவிர்க்கமுடியாத உறுப்பினர். இந்தோனேசியாவின் பண்டிகைக் காலத்தில், பிரசித்திபெற்ற `ரெண்டங்’ (Rendang) எனப்படும் குழம்பு வகையை வாசனையின் உச்சத்தில் நிறுத்துவது சிற்றரத்தைதான்.