நமக்குள்ளே... | Editorial page - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

நமக்குள்ளே...

ரிதுஸ்ரீ, வைஷ்யா, மோனிஷா... ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியான வேகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவிகள். வாழவேண்டிய இளம்பிஞ்சுகள் இப்படி வரிசையாகத் தற்கொலை செய்துகொள்வது பெரும் சோகம். மூன்றாண்டுகளுக்கு முன் நடந்த அனிதாவின் தற்கொலையே இன்னமும் இங்கே கடும்சீற்றத்துடனும் வருத்தத்துடனும் பேசப்பட்டுக்கொண்டிருக்கையில், `நீட்’ பெயரால் அடுத்தடுத்து தற்கொலைகள் தொடர்வது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஆரோக்கியமானதல்ல. நீட் தேர்வுதான் என்றில்லை... பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என்று எத்தகைய தேர்வுகளில் தோற்றாலும் தற்கொலை என்பதைத்தான் தீர்வாகப் பார்க்கிறார்கள் சிலர். பெரும்பாலும் இப்படித் தற்கொலையில் வீழ்வது பெண் குழந்தைகளே. இதற்குக் காரணம், குழந்தைகள்மீது பெற்றோர்களும் சமூகமும் திணிக்கும் தேவையற்ற அழுத்தம்தான் என்பதை எப்போதுதான் உணரப்போகிறோமோ!

நம்மில் பலரும், ‘அடுத்த வீட்டுப்பெண் அவ்வளவு மதிப்பெண் வாங்கினாள், உறவுக்காரப் பெண் இவ்வளவு மதிப்பெண் வாங்கினாள்’ - இப்படி ஆரம்பம் முதலே போட்டி மனப்பான்மையுடன்தானே குழந்தைகளின் வாழ்க்கையைக் கட்டமைக்கிறோம். `என் பொண்ணு நல்லா படிக்கிறா, டாக்டராதான் ஆவா’ என்றுதானே எப்போதும் பெருமைபொங்கப் பேசிக்கொண்டிருக்கிறோம். ‘நல்லா படிக்கும்’ பெண்ணோ, பையனோ கட்டாயமாக மருத்துவப் பணிக்குத்தான் செல்ல வேண்டுமா என்ன?

பிள்ளைகளைப் பணம் காய்ச்சி மரங்களாகவோ, நம் நிறைவேறாக் கனவுகளைச் சுமக்கும் சுமைதாங்கிகளாகவோதான் பார்க்கிறோம் என்பது எவ்வளவு பெரிய அவலம்? ‘எல்லாம் அவர்கள் நன்மைக்காகத்தானே’ என்று அதீத உரிமை எடுத்துக்கொண்டு, அதீத கனவுகளை விதைப்பதில் ஆரம்பிக்கிறது இந்த விபரீதம்.

பட்டப்படிப்பு என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம் மட்டுமே. அதையும் தாண்டி ரசிக்கவும் அனுபவிக்கவும் வாழவும் எவ்வளவோ உண்டே! இசை, நடனம், விளையாட்டு, எழுத்து என்று எத்தனையோ இருக்கின்றன. இவற்றையெல்லாம் கொண்டாட நம் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோமா?

மருத்துவம், பொறியியலெல்லாம் தாண்டி எத்தனையோ படிப்புகள் இருக்கின்றன வாழ்வில் ஏற்றம்பெற. இதைப்பற்றிய விழிப்புணர்வை நம் குழந்தைகளுக்கு ஊட்டி மாற்றி யோசிக்கவைப்பதுதான், வாழ்க்கையை இனிதாக்கும். என்ன படிக்கலாம் என்று மாற்றியோசிக்கும் அதேவேளையில், வாழ்க்கை என்பது வெறும் தேர்வுடன் முடிந்துவிடுவதல்ல என்கிற தெளிவையும் ஏற்படுத்தவேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

பொறுப்புள்ள பெற்றோராக இருந்து, கருணையுள்ள சமூகத்தைக் கட்டமைப்போம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க