நமக்குள்ளே... | Editorial page - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/03/2019)

நமக்குள்ளே...

ஷோபா வர்த்தமான், தன்வி அபிநந்தன், மீதா சந்த்ரா... மூன்று பெண்கள், ஓர் இழை!

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் தாய்தான் ஷோபா. ‘டாக்டர்ஸ் வித்தௌட் பார்டர்ஸ்’ மற்றும் ‘ஆபரேஷன் ஸ்மைல்’ அமைப்புகளுடன் இணைந்து இதுவரை ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களின் 12 நாடுகளில் பணியாற்றியிருக்கிறார் மருத்துவரான ஷோபா. அற்புதமாகப் பேசவும் எழுதவும் கூடியவர்.

தன்வி அபிநந்தன், அபிநந்தனின் மனைவி. ஓய்வுபெற்ற ஸ்குவாட்ரன் லீடரான இவர், இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர்களை ஓட்டி சாகசங்கள் புரிந்தவர். இயல்பிலேயே துணிவும், ராணுவப்பணி தந்த உறுதியும் திடமும் கொண்டவர்.

‘அபிநந்தன் விடுவிக்கப்படுவரா... மாட்டாரா..?’ என்பது உறுதியாகத் தெரியாத சூழலிலும்கூட, ஷோபாவும் தன்வியும் பதற்றம் சிறிதும் காட்டாமல் அமைதி காத்து நின்றது, ஆச்சர்யம் கூட்டியது.

மீதா சந்த்ராவின் கணவர் பப்லூ சந்த்ரா சி.ஆர்.பி.எப் ஜவான். பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் பப்லூ வீர மரணம் அடைந்துவிட்டார். ஹௌராவைச் சேர்ந்த ஆசிரியரான மீதா, கணவர் இறந்தபின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘போர் எதற்குமே நிரந்தரத் தீர்வல்ல. மனைவி, கணவனை இழக்கிறாள்; தாய், மகனை இழக்கிறாள்; மகள், தன் தந்தையை இழக்கிறாள். ஆனால், இவர்களைவிட நாடு பெரிதாக இழக்கிறது. போர் காரணமாகப் பொருளாதாரம், வளர்ச்சி எல்லாமே பாதிக்கப்படுகிறது. ஓர் ஆசிரியராக, வரலாற்று மாணவியாக என்னால் போரை ஆதரிக்க முடியாது. அதேநேரம், முப்படைகளுக்கு என் முழு ஆதரவும் உண்டு” என்று கூறிவிட்டார். அவ்வளவுதான்... ‘கோழை, சுயநலவாதி, கணவர் மரணத்துக்குப் பழிவாங்கத் துடிக்காதவருக்குக் கணவர்மீது காதலோ, பாசமோ இல்லை’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் சொற்களால் சுட்டுப் பொசுக்கப் பார்த்தனர். ஆனால், ‘எப்படிக் கேட்டாலும் போர் அவசியமற்றது என்பதுதான் என்னுடைய பதில்’ என்று அழுத்தமாகக் கூறிவிட்டார் மீதா.

எவ்வளவு துணிச்சலான பெண்ணாக இருந்தாலும், தன் வாழ்க்கையுடன் தொடர்புடைய ஆணுக்கு ஒரு பிரச்னை என்றால், தொய்ந்து விடுவதுதான் பெரும்பாலும் வழக்கமாக இருக்கிறது. ஆனால், இந்த மூவரும் விதிவிலக்குகளாக, அனைவருக்கும் வழிகாட்டுகிறார்கள்.

துணிவு என்பதையும் வாழ்க்கைத்துணையாகக் கொள்வோம்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close