நமக்குள்ளே... | Editorial page - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

நமக்குள்ளே...

13 லட்சம் வாசகர்களே... உங்களால் உயர்கிறோம்!

மீண்டும் உங்கள் முன் வெற்றித் தாரகையாக ஜொலிக்கிறாள் அவள். அதிகம் வாசிக்கப்படும் தமிழ் இதழ்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது அவள் விகடன். இந்தியப் பத்திரிகைகளின் வாசகர்கள் பலத்தை மதிப்பிடும் `இந்தியன் ரீடர்ஷிப் சர்வே’ ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளின்படி, தமிழில் அதிகம் வாசிக்கப்படும் முதல் ஐந்து இதழ்களின் பட்டியலில் மாதமிருமுறை வெளிவரும் அவள் விகடனும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. வார இதழ்களுக்கு இணையாகப் போட்டியிட்டு மாதம் இருமுறை வெளிவரும் பத்திரிகை இடம்பிடிப்பது எளிதல்ல. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண்கள் இதழும் அவள் விகடன்தான்.

2017-ம் ஆண்டில் 11,04,000 வாசகர்களைக் கொண்டிருந்த அவள் விகடனின் இப்போதைய வாசகர்கள் எண்ணிக்கை 13,06,000 பேர்! இரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சம் வாசகிகள் எங்களோடு இந்தப் பயணத்தில் இணைந்திருக்கிறீர்கள். டிஜிட்டல் உலகில் செய்திகளை அள்ளித்தரும் லட்சக்கணக்கான வலைதளங்கள் இருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 18 சதவிகிதத்துக்கும் அதிக வளர்ச்சியை எட்டியிருக்கிறது அவள் விகடன். இந்த மைல்கற்கள் அத்தனையையும் அவள் விகடன் தொட்டுத் தாண்டிவிட முழுமுதற் காரணம் வாசகிகளே!

எங்கள்மீதான உங்கள் அன்பையும் ஆதரவையும் உணரும்வேளையில், இன்னும் சுவாரஸ்யமாக, இன்னும் பயனுள்ளதாக, இன்னும் உங்களுக்கு நெருக்கமாக இனிவரும் அவள் விகடன் இதழ்கள் அமையும் என்று உறுதியளிக்கிறோம்.

ஒவ்வோர் இதழிலும் உழைக்கும் பெண்களின் உண்மைக் குரலாக, சாதிக்கும் பெண்களை உயர்த்தும் மேடையாக, சிறகு விரிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உற்ற துணையாக உங்கள் இல்லம் தேடி வருவோம்.

தமிழ் இல்லங்களின் தலைமகளாக அவள் விகடனை அங்கீகரித்து ஆதரிக்கும் வாசகிகள் ஒவ்வொருவருக்கும் எங்கள் சிரம்தாழ்ந்த வணக்கமும் பேரன்பும் நன்றியும்.

அன்பில் நிலைத்திருந்து, அறிவில் மெருகூட்டி, அழகுடன் இணைந்திருப்போம்... எந்நாளும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க