Published:Updated:

வானிலிருந்து அசரீரி, நாசாவின் `கேசி', கடைசி ஆசை... கல்பனா சாவ்லா நினைவலைகள்! #VikatanOriginals

கல்பனா சாவ்லா #VikatanOriginals
கல்பனா சாவ்லா #VikatanOriginals

கல்பனா சாவ்லா... இன்றைக்கும் பல இந்தியர்களின் ஆதர்ச நாயகி. பலரையும் விண்வெளிக் கனவுகள் காணவைத்த சாகசக்காரி. இன்றோடு அந்த துயர விபத்து நடந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் அந்த சோகத் தடங்கள் நம்மைவிட்டு மறையவில்லை. #RememberingKalpanaChawla

கல்பனாவுக்கு சிறுவயதிலேயே பைலட்டாக ஆசை. ஆனால், அதைச் சொன்னபோது அவரின் பெற்றோரே அதற்கு சம்மதிக்கவில்லை. டாக்டர், இன்ஜினீயர் அல்லது ஐ.ஏ.எஸ்... இந்த மூன்றும்தான் கல்பனாவுக்கு பெற்றோர் கொடுத்த சாய்ஸ். அதில் ஒன்றைத் தேர்வுசெய்திருந்தால் இன்று நம் யாருக்குமே தெரியாமலே போயிருக்கலாம். ஆனால், விடாமல் தன் கனவுகளைத் துரத்தினார்; ஒருநாள் அவற்றை சாத்தியமாக்கினார். இதற்காக உந்துதல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து அவரே விகடன் நிருபரிடம் ஒருமுறை பேசியிருக்கிறார். அந்த உரையாடலின் பகுதிகள் இங்கே...

09/02/2003 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழிலிருந்து...

``எனக்கு சிறுவயது முதல் விண்வெளி என்றால் அப்படி ஓர் ஆசை. மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். நட்சத்திரங்களை எண்ணுவேன். என்னை நண்பர்கள் கேலி செய்வார்கள். ஆனால், வானிலிருந்து எனக்கு மட்டும் ஒரு குரல் அழைப்பு கேட்டுக்கொண்டே இருக்கும்..."

``சிறுவயதில் இருந்த அந்த பிரமிப்பு நிஜமாகவே விண்வெளியில் பறந்தபிறகு அடங்கியதா?"

``அது தீரக்கூடிய பிரமிப்பா என்ன? விண்வெளியிலிருந்து நட்சத்திரங்களையும், காலக்ஸியையும் பார்க்கும்போது நாம் பூமியைச் சேர்ந்தவர்கள்தானா அல்லது வேற்றுக்கிரக மனிதர்களா என்றே ஒரு மயக்கம் கலந்த சந்தேகம் வரும்" என்றவர் எப்படி விண்வெளித் துறைக்குள் நுழைந்தார் என்பதையும் விவரித்திருக்கிறார்.

``1986-ம் ஆண்டு டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஆர்லிங்டன் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பற்றிய மேற்பட்டப்படிப்பு படிக்க அட்மிஷன் கிடைத்ததே... அதுதான் என் வாழ்க்கையின் பொன்னான நேரம். ஒரு குழந்தையைப் போல் குதூகலித்தேன். கொலராடோ பல்கலைக்கழக்தில் டாக்டரேட் படிப்பை வெற்றிகரமாக முடித்தபோது எனது விண்வெளிக்கனவுகள் வசப்படும் என்று முழு நம்பிக்கை வந்துவிட்டது. கல்லூரி நாட்களில் லாக்கிட் என்னும் புகழ்பெற்ற நிறுவனத்தின் `ஸ்கங்க் வொர்க்ஸ்' எனும் விண்வெளி கலங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பற்றிய புத்தகங்களைக் கரைத்து குடித்தேன். பிற்பாடு நாசாவில் வேலைக்குச் சேரும்போது இந்தப் புத்தக அறிவு பெரிய அளவு கைகொடுத்தது. அது மட்டுமல்ல; இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குள் அடியெடுத்து வைத்தபோதே இந்த நாட்டின் விஞ்ஞான தாகத்தை முழுதாக உள்வாங்கிக் கொண்டேன். அதுதான் அதுதான் இங்கிருக்கும் விஞ்ஞானிகளோடு சரிக்குச் சமமாக பணிபுரிய எனக்குக் கைகொடுத்தது" எனக் கூறியிருக்கிறார் கல்பனா.

கல்பனா சாவ்லா என்ற பெயரின் சுருக்கமாக `கேசி' என்றுதான் நாசா விஞ்ஞானிகள் இவரை அழைப்பார்கள்.

இவர் நாசாவில் வேலைக்குச் சேர்ந்தது 1994-ல். இவரோடு சேர்ந்து நாசாவின் பணிக்கு உலகம் முழுவதுமிருந்து விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 4,000.

முதன்முறையாக கல்பனா 1997-ம் ஆண்டு விண்வெளியில் பறந்தபோது, அவரது மேற்பார்வையில் இருந்த துணை சாட்டிலைட் ஒன்று கழன்று தனியாகப் பிரிந்துபோய் விட்டது. அவரின் சக விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஸ்பேஸ் வாக் செய்து அதை மீட்டிருக்கின்றனர். இதுபற்றி கல்பனாவுக்கு கடைசிவரை மனவருத்தம் உண்டு. ``இதனால் என் விண்வெளி பயண வாழ்க்கைக்கே ஒரு முடிவு என்று பயந்தேன். நல்ல வேளையாக எனக்கு மேலே பணிபுரிந்த விஞ்ஞானிகள் அதைப் பெரிதுபடுத்தவில்லை" என்று தனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்வாராம்.

விண்வெளியில் கல்பனா விரும்பிக் கேட்டது சிதார் மேதை ரவிசங்கரின் ஆல்பமான `ராகமிஷ்ரா போலோ'வைத்தான்.

``தினமும் வீட்டிலும் ரவிசங்கரின் இசையைக் கேட்டபடிதான் கண் விழிப்பேன். நம் நாட்டின் இசைப் பாரம்பர்யத்துக்கு ஈடு இணை ஏது?" என்று பேட்டியில் சிலாகித்திருக்கிறார் கல்பனா.

Junior Vikatan's Tribute Article on Kalpana Chawla - Dated 09/02/2003
Junior Vikatan's Tribute Article on Kalpana Chawla - Dated 09/02/2003

ஒருமுறை பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது பிரபலமான இந்தியர்களைச் சந்திக்க ஏற்பாடு ஆகியிருந்தது. அதில் பிரதமரே பார்க்க ஆர்வம் காட்டிய வி.ஐ.பி, கல்பனா. பிரதமரிடம் சிறுகுழந்தை போல குதூகலித்துப் பேசியிருக்கிறார் இவர்.

``இங்கே நான் வந்துவிட்டாலும் என் இதயம் எல்லாம் இந்தியாதான். விண்ணிலிருந்து பார்த்தால் பாரதத்தின் கங்கை நதியும், இமயமலையும் எவ்வளவு மெஜஸ்டிக்காக தெரிந்தன, தெரியுமா? பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டேன்." என்று அவர் சொன்னபோது வாஜ்பாய்க்கும் நெகிழ்ச்சி.

கல்பனாவின் இழப்பு அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு தேசங்களுக்குமே பேரிழப்பு. அவரது குடும்பத்திற்கு இது இரண்டாவது பேரிழப்பு. ஆம், கல்பனாவைப் போலவே அவர் குடும்பத்தில் இன்னொருவரும் விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் கல்பனாதான் கடைக்குட்டி. விபத்து நடந்த 2003-ம் ஆண்டு அவரைத் தவிர அனைவருமே டெல்லியில்தான் வசித்துள்ளனர். அவரது அண்ணன் சஞ்சய் சாவ்லா மட்டுமே டெல்லியில் இருக்க, குடும்பத்திலுள்ள மற்ற அனைவரும் விண்வெளிப் பயணத்தைக் காண அமெரிக்காவிற்கே சென்றுள்ளனர். அதன்பின் நடந்த துயரம் குறித்து கல்பனாவின் அண்ணன் சஞ்சய் சாவ்லா அப்போது விகடனிடம் பகிர்ந்துகொண்டவை இதோ...

``இது எங்கள் குடும்பத்தைக் கலங்கடித்த இரண்டாவது பெரிய இழப்பு. எனது மூத்த சகோதரி சுனிதாவின் கணவர் இந்திய கடற்படையில் விமான அதிகாரி. சுனில் சாவ்லா அவர் பெயர். 1989-ம் ஆண்டு மும்பை அருகே கப்பலிருந்து ஹெலிகாப்டரில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. எங்களை நிலைகுலையவைத்த முதல் அதிர்ச்சி சம்பவம் அது. இந்த விபத்தில் மற்றவர்களது உடல்கள் கிடைத்தன. எனது சகோதரியின் கணவர் உடல் மட்டும் கிடைக்கவே இல்லை. இப்போது கல்பனாவின் முடிவும் எங்களை வேதனைக் கடலில் தள்ளியிருக்கிறது.

கல்பனாவுக்கு விண்ணில் பறக்கும் ஆர்வம் வரக் காரணம் அப்பாதான். கர்னாலிஸ் ஃபிளையிங் கிளப் என ஒன்று உண்டு. இதில் எங்க அப்பாவும் ஓர் உறுப்பினர். அடிக்கடி ரைடு போவார். இதைப் பார்த்து கல்பனாவுக்கும் பறக்கும் ஆசை வந்தது.இந்த கிளப்பில் சேர்ந்து ஃபிளையிங் கற்றுக்கொண்டாள். இருந்தாலும் அவளை ஒரு டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ ஆக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமாக இருந்தது. அதையும் மீறி அவளது ஆசை ஜெயித்தது.

Kalpana Chawla
Kalpana Chawla

1994-ல் ஜே.பி.ஹிரிஷன் என்பவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். நாங்களும் அனுமதித்தோம். ஹிரிஷன் ஒரு ஃப்ரீலான்ஸ் ஃபிளையிங் இன்ஸ்ட்ரக்ட்டராக இருந்தவர். தற்போது (2003-ல்) கம்ப்யூட்டர் இன்ஜினீயராக இருக்கிறார். அவரது தந்தை இங்கிலாந்தைச் சேர்ந்தவர். தாய் பிரான்ஸ்காரர். கல்பனாவின் பிஸியான வேலை காரணமாக குழந்தை பிறப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தனர்.

அசுர உழைப்பு, இசை மயக்கம், அரிதான ஷேரிங்ஸ்... 80's இளையராஜாவின் இன்ஸ்பிரேஷனல் கதை #VikatanOriginals

ஜனவரி 28-ம் தேதி, அப்பாவோடு ஸ்பெஷல் தொழில்நுட்பத்தின் உதவியோடு விண்வெளியில் இருந்தபடியே பேசினாள் கல்பனா. அங்கிருந்து பூமியைப் பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது என்றெல்லாம் ரசித்துச் சொல்லியிருக்கிறார். இம்முறை பயணம் முடிந்து வெற்றிகரமாக தரையிறங்கியதும் இந்தியாவுக்கு வரவேண்டும்... அங்கே நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு தாய் நாட்டுக்கு உதவவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இதன்மூலம் எங்களுக்கும் பெருமை தேடித் தரப்போகிறாள் என்று நாங்கள் ஆவலோடு காத்திருந்தோம். ஆனால், எங்கள் ஆசையில் மண் விழுந்துவிட்டது" என்று தன் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சஞ்சய்.

அடுத்த கட்டுரைக்கு