Published:Updated:

``என் பிறந்தநாள் என்னன்னே மறந்துபோச்சு!" - கவுண்டமணியின் செம ரகளை பேட்டி #VikatanOriginals

கவுண்டமணி
கவுண்டமணி ( #VikatanOriginals )

நடிகர் கவுண்டமணியின் வேற லெவல் பேட்டி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2.6.1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...

இந்தியாவில் இன்று அதிகம் சம்பாதிக்கிற நடிகர் இவர்தான் என்று பேச்சு. இவருடைய கால்ஷீட் கிடைத்த பிறகுதான் படத்துக்குப் பூஜை. இவர் வந்து இறங்கும்போது, ஹீரோக்களுக்கு இணையாக `செட்' சலசலத்து அடங்குகிறது. இளம் நடிகைகள் சிலரை இவரோடு இணைத்துக் கிசுகிசுக்கிறார்கள்.

ஜகஜகவென நைலக்ஸ் லுங்கி, ஒரு பட்டன்கூடப் போடாத சட்டையோடு வீட்டில் உட்கார்ந்திருந்தார்... கவுண்டமணி. லேசான தொந்தியைத் தாண்டி, மூன்று முழ நீளத்துக்கு ஒரு தங்கச் சங்கிலி; தங்க பிஸ்கட் கோத்துப் போட்டிருக்கிறார். வயது 63 என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். அதன் ஒரே அடையாளம், முன் தலையின் வழுக்கை மட்டுமே.

``நடிக்க வந்தது எப்படி..?"

``நமக்குச் சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. சினிமாவுக்கும் நமக்கும் ரொம்ப லாங்கு. வீட்ல விவசாயம் பார்த்தாங்க. அவங்க யாரும் `டாக்கீஸ்' பக்கம்கூடப் போனதில்லே. சின்ன வயசுல நடிக்கணும்னு வெறி எனக்கு. காமெடியா, வில்லனா, ஹீரோவா... அதெல்லாம் முடிவு பண்ணலே. நடிகனாயிடணும்; அதான் லட்சியம். 12 வயசுல நாடகக் கம்பெனியில சேர்ந்தேன். பாய்ஸ் கம்பெனியிலேர்ந்து ஜோதி நாடக சபா வரைக்கும் எல்லாத்துலயும் இருந்தேன்; எல்லா வேஷமும் போட்டேன். கூச்சம், பயமெல்லாம் போய், நம்மால முடியும்கிற தைரியம் வந்தது. அப்பதான் சினிமா சான்ஸும் வந்தது."

கவுண்டமணி - செந்தில்
கவுண்டமணி - செந்தில்
#VikatanOriginals

`` `16 வயதினிலே' படத்தில் கண்ணெல்லாம் சுருங்கிப்போய், கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு! அதாவது, வறுமை..?"

(சட்டென்று இடைமறித்து) ``அதெல்லாம் சும்மா. வறுமையாவது ஒண்ணாவது..! சினிமாவுக்கு முன்னாடிதான் நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே... வேளாவேளைக்குச் சோறு; அதிகம் இல்லாட்டியும் பொழுதைத் தள்றதுக்குக் காசு கிடைச்சுக்கிட்டுதான் இருந்தது. வளர்ந்து பெரிய ஆளான பிறகு, `ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்; துண்டு பீடிதான் பிடிச்சேன்'னு சொல்றது, இப்ப ஒரு ஃபேஷனாப் போச்சு. அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்!"

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``செந்திலை நீங்க அத்தனை பாஷையிலும் திட்டியிருக்கீங்க... அடிச்சு உதைச்சிருக்கீங்க..."

``அது தானா அமைஞ்ச காம்பினேஷன். செந்திலுக்கு ப்ளஸ் பாயின்ட்டே அவனோட அமைப்புதான். என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காத மாதிரி அப்பாவியா நிப்பான். ஒரு மாறுதலா இருக்கட்டுமேனு `கலர் கம்பித் தலையா... அடுப்புச் சட்டித் தலையா... அரிசி மூட்டைக்கு அண்ட்ராயர் போட்ட மாதிரி வர்றான் பாரு'னு எல்லா மாதிரியும் திட்டியாச்சு. எதையும் மிச்சம் வெச்சதா தெரியலே. செட்டுக்குப் போயிட்டு, அவனைப் பார்த்ததுமே புதுசு புதுசா திட்டறதுக்கு எனக்கு வார்த்தைங்க தோணும்!"

2.6.1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
2.6.1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

``கோயம்புத்தூர் மண்ணுக்கும் சினிமாவில் காமெடிக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறதே?"

``ஏங்க, மண்ணுக்கும் காமெடிக்கும் என்னங்க சம்பந்தம்? அது என்ன கிழங்கா, மண்ணுல விளையறதுக்கு? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. என்ன... அந்தப் பக்கம் கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி!"

``உங்களோட வளர்ச்சியில யாருக்குப் பங்கு உண்டு? உங்க காட்ஃபாதர் மாதிரினு யாரைச் சொல்வீங்க?"

``இது என்ன `மாஃபியா கேங்'கா, காட்ஃபாதர் இருக்கிறதுக்கு. `ஒருத்தன் வளர்றது இன்னொருத்தனுக்குப் பிடிக்காது'னு நான்தான் சொல்றேனே. ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்காருன்னா, அவரைச் சுத்தியிருக்கிறவங்களுக்குச் சந்தோஷம்னா நினைக்கறீங்க? `சூப்பர் ஸ்டார்'னு புகழறாங்களே தவிர, சொந்தக் காரங்ககூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம்... இதுதான் எனக்கும்!"

`ஒரு நடிகன் எப்படியிருக்க வேண்டும்?' என்பதில் கவுண்டமணியின் `லாஜிக்' ரொம்ப சுவாரஸ்யமானது.

``தன்னைப் பத்தின நிஜ ரூபத்தைப் பொத்திப் பொத்தி மூடணும். பெட்டிக்கடையில பீடியைக்கூடக் கட்டுக்கட்டா உள்ளேதான் வெச்சிருப்பான். அப்போதான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளியே கொட்டிப் பரத்தி வெச்சு வியாபாரம் பண்ணிப் பாருங்க... பீடி விக்காது. நான் விழாக்கள், பேட்டிகள்னு எதுக்கும் ஒப்புக்கறதில்லே. `கலை நிகழ்ச்சி' என்ற பேரில் துபாய், சிங்கப்பூர் போறதில்லே... ரசிகர் மன்றங்களையெல்லாம்கூடக் கலைச்சுட்டேன். என் பிறந்தநாள் என்னன்னே மறந்துபோச்சு. முக்கியமா, டி.வி-க்குப் பேட்டி குடுக்கறதில்லை. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு... அப்பதான் கிக்!"

2.6.1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
2.6.1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

பேட்டியின்போது போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை. ``மேக்கப் இல்லாம `போஸ்' குடுக்கறதில்லீங்க" என்கிறார், வழுக்கைத் தலையைத் தடவியபடி. குடும்பத்தைப் படமெடுப்பதற்கும் மிகப்பெரிய தடை போடுகிறார்.

``முடியாதுங்க... இதுவரைக்கும் என் ஃபேமிலி படம் எதுலயாச்சும் பார்த்திருக்கீங்களா? தர்றதே இல்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்ல சந்தோஷமான குடும்பம். அவங்களைப் பொறுத்தவரைக்கும் நான் காமெடி கவுண்டமணி கிடையாது. ஏதோ ஒரு வேலைக்குப் போறேன்... கூலி வாங்கிட்டு வர்றேன். அதை வெச்சுக் குடும்பம் நடத்துறது அவங்க வேலை. என் குடும்பத்துக்காரங்க இன்னிவரைக்கும் ஷூட்டிங் பார்த்ததே கிடையாது. என்னை ஒரு நடிகனா வீட்டுல யாரும் பார்க்கக்கூடாது. அது வேற... இது வேற!"

கிளம்பும்போது சொன்னார்...

``என்னைப் பொறுத்தவரைக்கும் நாலு பேரைப் பார்க்கணும்; நாலு விதமா பேசணும்; சந்தோஷமா சிரிக்கணும்... அவ்வளவுதான் வாழ்க்கை. இருக்கிறவரைக்கும் சிரிப்போம்... ரைட்டா?"

நிருபர்கள்: கே.அசோகன், ரா.கண்ணன்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு