Published:Updated:

``நம்ம உண்டியல் காசை வெச்சா கடவுள் குபேரனாகப் போறார்?'' - `அகரம்' குறித்து சூர்யா #VikatanOriginals

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா ( Photo: Vikatan )

``அறக்கட்டளை ஆரம்பிக்கப்போறேன், சமூக சேவை செய்யறேன்னு கிளம்பி இருக்கீங்களே, அரசியல் ஐடியா ஏதும் இருக்கா?" என்ற கேள்விக்கு 2006-ல் சூர்யா கொடுத்த பதில்..!

பள்ளிக்கூடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் செய்ய வேண்டிய அறப்பணிகளை கோயில் திருப்பணிகளோடு ஒப்பிட்டு, நடிகை ஜோதிகா அண்மையில் பேசிய பேச்சு மிகவும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. `கோயிலுக்கு அனைவரும் உதவுவது போலவே, மருத்துவமனைகளுக்கும் அனைவரும் உதவுங்கள்' என்பதுதான் அந்தப் பேச்சின் சாராம்சம். ஆனால், சமூக வலைதளங்களில் அது திரித்துவிடப் பட்டதாலும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாலும் பலரும் அதை விமர்சித்து வருகின்றனர்.

இல்லாதார்க்கு உதவும் அறப்பணிகளை, இறைவனுக்குச் செய்யும் திருப்பணிகளாக கருதி உவமை சொல்வதும், பாராட்டுவதும் ஒன்றும் புதிதல்ல; காலம்காலமாக வழக்கத்தில் இருந்து வருவதுதான். சக மனிதனின் துயர்துடைக்கச் சொல்லாத மதங்களே உலகில் இருக்கமுடியாது. தாங்கள் நம்பும் தத்துவங்கள் எதுவாயினும், அதைக் கடந்து மனிதர்கள் அனைவரும் ஒன்றுபடும் இடம் இதுதான். இதை தன் `அகரம்' அறக்கட்டளையின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தி வருபவர் நடிகர் சூர்யா. அதன் தொடக்க காலத்தில் அறக்கட்டளை குறித்தும், எது அப்படியொரு முயற்சியைத் தொடங்கவேண்டும் என்ற உந்துதலைத் தந்தது என்பது குறித்தும் விகடனிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் சூர்யா.

2006-ம் ஆண்டு. சில்லுனு ஒரு காதல் படம் வெளியாகவிருந்த சமயம். அந்தப் படம் தொடர்பாகவும், சூர்யாவின் திரையுலகப் பயணம் குறித்தும் அவரிடம் பேட்டி எடுத்திருந்தோம். அதில்தான் `அகரம்' குறித்தும் பேசியிருந்தார் சூர்யா. அந்தப் பேட்டி இங்கே...

08/01/2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

``சூர்யா - ஜோதிகா காதலில் அப்படி என்ன ஸ்பெஷல்?"

``முதல்ல காதலே ஸ்பெஷல்தான். நட்புக்கும் காதலுக்கும் இடையில் இருக்கிற அந்த நூலளவு வித்தியாசத்தைத் தொட்டுட்டாலே போதும், காதல் குபுக்குனு பூத்துடும்! சினிமாவில் எனக்கும் ஜோதிகாவுக்கும் அப்படி ஒரு அலைவரிசை உண்டு. நாங்க ரெண்டு பேரும் முதன்முதலில் `பூவெல்லாம் கேட்டுப்பார்’ படம் பண்ணும்போது, எங்களிடம் அந்த கெமிஸ்ட்ரி இல்லை. `காக்க காக்க’ பண்ணும்போது அது அவ்ளோ அழகா வொர்க்-அவுட் ஆனதுக்குக் காரணம், டைரக்டர் கௌதம். உள்ளுக்குள்ள புதைஞ்சுகிடக்கிற காதல் உணர்வை, அப்படியே புதையல் எடுக்கிற மாதிரி எங்க ரெண்டு பேரிடமும் எடுத்தார். மற்றபடி `சூர்யா - ஜோதிகா’ காம்பினேஷன் பற்றி டைரக்டர்களிடம்தான் கேட்கணும்.’’

08/01/2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
08/01/2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

``உங்க நிஜ வாழ்க்கையில் வந்த முக்கியமான மூன்று காதல்கள் பற்றிச் சொல்லுங்களேன்?"

``ஒன்... டூ... த்ரீ...னு கவுன்ட் டவுன் பண்ற அளவுக்கு, காதல் என் வாழ்க்கையில் வரலை. நிஜமாவே காதல்ல நான் மக்குதான். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது எனக்கு யாரும் லவ் லெட்டர் தந்ததில்லை. எனக்கும் `ஐ லவ் யூ’ சொல்றதுக்கோ, லவ் லெட்டர் எழுதறதுக்கோ தைரியம் இல்லை. ஆனா, `இந்தப் பொண்ணை லவ் பண்ணா என்ன?’னு ஒரு டஜன் பொண்ணுகளையாவது யோசிச்சிருப்பேன். அப்படி அந்தந்த சீஸனுக்கு ஏத்த மாதிரி வந்துபோன பபிள்ஸ் நிறைய இருக்கு. மத்தபடி, எனக்கு சினிமாவில்கூட காதல் சரியா வரலைங்கிறதுதான் உண்மை. எல்லாரும் பாலசந்தர், பாரதிராஜாகிட்டே திட்டு வாங்கினதைப் பெருமையா சொல்வாங்க. நான் சிம்ரன்கிட்டேயே திட்டு வாங்கியிருக்கேன். `நேருக்கு நேர்’ படத்தில் சிம்ரனை என் மடியில் உட்காரவெச்சு, நெத்தியில் தொடங்கி கழுத்து வரைக்கும் விரலாலேயே மெஹந்தி போடணும். கூச்சத்தில் நடுங்கி, அதுக்கே 16 டேக் வாங்கினவன் நான்!’’

``நீங்களும் ஆக்ஷன் படங்கள் பின்னால ஓட ஆரம்பிச்சுட்டீங்களோ?"

``சினிமா ஒரு தொழில். கலெக்ஷன்தான் இங்கே கடவுள். எல்லாத் தரப்பு ஆடியன்ஸையும் திருப்திப்படுத்த வேண்டியிருக்கு. பாலா அண்ணனுக்கு நான் `ஆறு’ அவதாரம் எடுக்கிறது பிடிக்காது. `மசாலா பண்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க, அதுக்கு நீ தேவையில்லை’னு சொல்லியிருக்கார். ஆனா, `மரோ சரித்ரா’ நடிச்ச கமல் சார், ஏன் `சகலகலா வல்லவன்’ பண்ணணும்? அதே காரணம் எனக்கும் இருக்கு. `அவார்டு நடிகன்’னு எனக்கு யாரும் முத்திரை குத்திடக் கூடாது. `ஆறு’ பத்தி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பணம் போட்ட தயாரிப்பாளருக்கு அது சந்தோஷம் தந்த படம். பர்சனலா இமேஜ் பின்னால போகாத, இமேஜை நம்பாத வெகு சில நடிகர்களில் நானும் ஒருத்தன். அதனாலதான் மூணு ஹீரோக்களில் ஒருத்தனாகவும் நடிக்கிறேன். இப்போ ஃபீல்டில் இருக்கிற அஜீத்தோட ரசிகனா வந்து `தல’னு விசிலடிக்கிறேன். இமேஜுக்குப் பின்னால போயிட்டா, ஒரு நல்ல கலைஞனா இருக்க முடியாதுங்கிற பாடத்தை நான் தெரிஞ்சே வெச்சிருக்கேன்!’’

08/01/2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
08/01/2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

``விஜய், ரஜினி மாதிரி பண்றார்; நீங்க அடிக்கடி கமலை உதாரணம் சொல்றீங்க. உங்களுடைய தனி அடையாளம் தொலைஞ்சுடாதா?"

``அவங்க ரெண்டு பேரும் கண்ணுக்கு முன்னால நிக்கிற கோபுரங்கள். ரொம்ப சீனியர்ஸ். எங்க வயசைத் தாண்டின அனுபவம் அவங்களுக்கு இருக்கு. என்னை கமல் சார் நிறைய பாதிச்சிருக்கார். அவர் படங்களைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதிருக்கேன். குலுங்கி குலுங்கிச் சிரிச்சிருக்கேன். அவரைப் பற்றி அடிக்கடி பேசறதால, அதே மாதிரி ஆகப்போறேன்னு அர்த்தம் இல்லை. ஆகவும் முடியாது. அவர் நல்ல டான்ஸர்; பிரமாதமா பாடுவார்; டைரக்ஷன்ல மிரட்டியிருக்கார்; நடிப்பில் எங்களுக்கு இலக்கணம். சினிமாவுக்குரிய எல்லா முகங்களும் அவரிடம் இருக்கு. நான் எப்படி அவராக முடியும்? ஒரு நடிகனா நான் போக வேண்டிய தூரமே பல மைல் இருக்கு!’’

சூர்யா - ஜோதிகா
சூர்யா - ஜோதிகா
#VikatanOriginals

``அறக்கட்டளை ஆரம்பிக்கப்போறேன், சமூக சேவை செய்யறேன்னு கிளம்பி இருக்கீங்களே, அரசியல் ஐடியா ஏதும் இருக்கா?"

``சத்தியமா அரசியல் ஆசை இல்லீங்க! அப்பா, எங்க எல்லாரையும் காப்பாத்துற அளவுக்கு உழைச்சிருக்கார். தங்கையோட கல்யாணமும் நல்லவிதமா முடிஞ்சிடுச்சு. தம்பியும் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டான். நாலு நல்ல படங்கள் நடிச்சதுக்கப்புறம், எனக்கும் இப்போ நல்ல சம்பளம் தர்றாங்க. நான் தாங்கிப் பிடிக்கிற செலவு எதுவும் இல்லை. `ஏழைங்க காசுலதான் நீ ராஜாவா இருக்கே!’னு அப்பா அடிக்கடி சொல்வார். அதை மறக்கக் கூடாதுனு நினைக்கிறேன். நாலு பேருக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கிறேன். அதுக்கு சமூக சேவைனு பெரிய பேர் வேண்டாம். நாம உண்டியல்ல போடுற காசை வெச்சா கடவுள் குபேரனாகப் போறார்? மனத் திருப்திக்கு நாம செலுத்துகிற காணிக்கை மாதிரிதான் இந்த உதவிகளும்!’’

நிருபர்: த.செ.ஞானவேல்
அடுத்த கட்டுரைக்கு