Published:Updated:

``அந்த ஜீவனை என்னோட காமெடி காப்பாத்தினதுதான் வாழ்நாள் சாதனை!" - வடிவேலு #VikatanVintage

வடிவேலு
வடிவேலு

ஒரு விபத்துல சிக்கிய எங்க பொண்ணுக்கு, பேச்சு மூச்சு இல்லாம போச்சு. கோமா நெலமைக்கு போனவ, அதுல இருந்து தப்பிட்டாலும்... சரியான பேச்சோ, சிரிப்போ வரல.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

- 'வேலு பேசறேன் தாயி..!' தொடரில் வடிவேலு பகிர்ந்தவை. | அவள் விகடன் டிசம்பர் 6, 2011

ஒருநாளு, ''ஒங்களப் பாக்க குடும்பத்தோட சிலர் வந்திருக்காக''னு மேனேஜரு சொல்றாரு. அடிக்கடி இந்த மாதிரி நம்மள வந்து பாக்குறது வழக்கந்தேன். ஷூட்டிங் இல்லாத நேரமா இருந்தா... நானும் அவுகள பாத்து, அவுக சொல்ற நல்லது கெட்டதுகள கேட்டு அனுப்புவேன். ஆனா, அன்னிக்கு எனக்கு கொஞ்சம் நெருக்கடியான வேலை. ''இன்னொரு நாளு பாக்கலாம்னு சொல்லி அனுப்பிடுப்பா''னு சொன்னேன்.

வெளியே போன மேனேஜரு... செவத்துல அடிச்ச பந்து மாதிரி திரும்பி வந்தாரு. ''அவங்க ஒங்களப் பாக்காம இந்த எடத்த விட்டுப் போறதா இல்லியாம்''னாரு. என்னடா இவ்வளவு விடாப்புடியா நம்ம மேல பாசம் காட்டுறாகளேனு, ஒடனே அவுகள உள்ள வரச்சொல்லிட்டேன்.

13 வயசுப் பொண்ணை தூக்கிக்கிட்டு... தாயுந் தகப்பனுமா உள்ள வந்தாக. ''எங்க கொலசாமியே நீங்கதான்யா''னு என்னோட ரெண்டு கையையும் புடிச்சுக்கிட்டு அழுவுறாக. எனக்கு ஒண்ணுமே புரியல. என்ன ஏதுனு பதறியடிச்சுக் கேட்டப்ப... அவுக சொன்ன வார்த்தைக இருக்கே... அப்புடியே இப்பவும் நெஞ்சுக்குள்ள நிக்குது.

''ஒரு விபத்துல சிக்கிய எங்க பொண்ணுக்கு, பேச்சு மூச்சு இல்லாம போச்சு. கோமா நெலமைக்கு போனவ, அதுல இருந்து தப்பிட்டாலும்... சரியான பேச்சோ, சிரிப்போ வரல. எல்லா முயற்சியும் செஞ்சு பாத்த டாக்டருங்க கடைசியா, 'உங்க பொண்ணுக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் என்ன?'னு கேட்டாக. 'வடிவேலு ஜோக்குனா ரொம்ப விரும்பி பார்ப்பா'னு சொன்னோம். 'அப்படினா, வடிவேலுவோட காமெடி சி.டி-கள அடிக்கடி போட்டுக் காமிங்க... அதுக்குப் பிறகு பார்ப்போம்'னு சொல்லி டிஸ்சார்ஜ் பண்ணிட்டாக.

'என்ன கையப் புடிச்சு இழுத்தியா?' காமெடி ஓடியிருக்கு. சுருக்குப் போடவேண்டிய கயித்தை கையில வெச்சுக்கிட்டு... விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு அந்த லேடி.

வீட்டுக்குப் புள்ளைய அழைச்சுட்டு வந்த நாள் தொடங்கி, ஒங்களோட சி.டி-கள போட்டுவிட்டு எங்க பொண்ணை பாக்க வெச்சோம். பத்து நாள்கூட ஆகியிருக்காது... திடீர்னு ஒரு நாளு பொண்ணு சிரிக்க ஆரம்பிச்சுட்டா. முதல்ல லேசா தடுமாறி சிரிச்சவ, அடுத்தடுத்த காமெடிகளுக்கு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டா. கண்ணுக்கு முன்ன நடக்கறது கனவா... நெசமானு புரியாத அளவுக்கு திக்குமுக்காடிட்டோம் சாமி. ஒங்கள நேர்ல பாத்து நன்றி சொன்னாத்தேன் மனசு அடங்கும்னு தேடி வந்தோம்!''னு அவங்க கதற, எனக்கும் கண்ணு கலங்கிடிச்சு.

அந்தப் பாப்பாவை பக்கத்துல கூப்புட்டுப் பேசினா, என்னோட ஒவ்வொரு டயலாக்கையும் மனப்பாட பகுதி மாதிரி டபடபானு எடுத்து விடுது. அசந்துட்டேன். பேரு தெரியாத... ஊரு தெரியாத ஒரு ஜீவனை, என்னோட காமெடி காப்பாத்தி இருக்குங்கறத, வாழ்நாள் சாதனையா நெனைக்கிறேன்.

இதேமாதிரி இன்னொரு சம்பவம். திண்டுக்கல் ஏரியாவுல இருந்து டி.எஸ்.பி. ஒருத்தரு பேசினாரு. என்னமோ ஏதோனு, ''சொல்லுங்க சார்''னு தயங்கிக்கிட்டே கேட்டேன். ''இங்க ஒரு லேடி சூசைட் அட்டெம்ப்ட் சார்...''னு அவர் இழுத்ததுதேன் தாமதம்... ''ஆத்தாடி''னு அலறிட்டேன். ''அதுக்கும் எனக்கும் என்ன சார் சம்பந்தம்?''னு தயங்கிக்கிட்டே கேட்டா, ''அந்த லேடி உசுரோட இருக்குனா... நீங்கதான் சார் காரணம்''னு புதுசா இன்னொரு குண்டு போட்டாரு. 'தாலி கட்டுனவன் கல்லுத் திருக்கை மாதிரி இருக்கிறப்ப, நீ ஏண்டா அந்தப் பொண்ண வாழ வைக்கிறே?'னு ஆயிரம் கிராஸ் கேள்வி கேப்பானுகளேனு மனசுக்குள்ள ஆயிரம் ஓடி கிறுகிறுத்த நேரத்துலதேன், அந்த ஆபீசரு நடந்த கதையச் சொன்னாரு.

``அந்த ஜீவனை என்னோட காமெடி காப்பாத்தினதுதான் வாழ்நாள் சாதனை!" - வடிவேலு #VikatanVintage

''புருஷனோட சண்டை போட்டுக்கிட்டு அந்த லேடி வீட்டுக்குள்ள தூக்குப் போட ஓடியிருக்கு. கயித்தை உத்திரத்துல மாட்டி, கழுத்துக்கு சுருக்கு வைக்கிற நேரத்தில டி.வி-யில 'என்ன கையப் புடிச்சு இழுத்தியா?' காமெடி ஓடியிருக்கு. சுருக்குப் போடவேண்டிய கயித்தை கையில வெச்சுக்கிட்டு... விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு அந்த லேடி. கோபத்துல ஒரு பொண்ணு தவறான முடிவு எடுக்க இருந்தத, ஒங்களோட காமெடிதான் சார் காப்பாத்தி இருக்கு!''னு சொன்னவர், சட்டுன்னு அந்தம்மாகிட்டயே போனை கொடுத்துட்டார்.

'கெக்கே பெக்கே'னு தெருவே ஒண்ணுமண்ணா கூடிச் சிரிக்கிற சத்தம் கேட்டுச்சு. ரொம்ப கூச்சத்தோட பேச ஆரம்பிச்ச அந்தம்மா, ''டெய்லி வேலைக்குப் போகாம குடி, கூத்துனு அந்தாளு பண்ற ரோதனை தாங்கலண்ணே. சொல்லிச் சொல்லிப் பாத்தேன். எதையுங் கேட்டுத் திருந்துறபாடா தெரியல. இன்னிக்கு காலையில இருந்தே ரெண்டு பேருக்கும் சண்ட. ஆதங்கந்தாங்காம தூக்கு மாட்டிக்கப் போயிட்டேன். அந்த நேரம் பாத்து டி.வி-யில ஒங்க காமெடி. அதுவும் எல்லாத் தப்பையும் பண்ணிப்புட்டு, ஒண்ணுமே தெரியாத ஆளு மாதிரி, அப்புடியே உறிச்சு வெச்ச எம்புருசன் மாதிரியே நீங்க, 'என்ன கையப் புடிச்சு இழுத்தியா?'னு கேட்டுக்கிட்டு இருந்தீக. அந்தக் காமெடி எனக்கு ரொம்பப் புடிக்கும். அதேன் சட்டுனு சிரிச்சுட்டேன்!''னு அந்தம்மா வெள்ளந்தியும் வெகுளியுமா சொன்னப்ப, எம்மனசு பட்ட பாடு இருக்கே... என்னையப் பெத்த தாயிகளா... இந்த ஜென்மத்துக்கு இந்த நிம்மதி போதும்.

'அழுது அழுது பெத்தாலும்... அவதான் பெக்கணும்'னு ஒரு சொலவடை சொல்வாக. அதனால நம்மளோட காமெடியோ ஆறுதலோ ஒருத்தரோட கஷ்டத்தை மொத்தமா தீர்த்துடாது. கடனோ, கஷ்டமோ... சம்பந்தப்பட்டவுகதேன் அதத் தீக்க வழி பாக்கணும். ஆனாலும், நம்ம வார்த்தையும் வசனமும் ஒருத்தங்களோட வெசனத்தை தீர்க்குதுனா... அது எவ்வளவு பெரிய பாக்கியம்! அதனால யாரு மனசும் நோகாம ஆதரவும் அனுசரணையுமா நடந்துக்கங்க. மனசுவிட்டு நாலு வார்த்தை பேசுறதால, நாம ஒண்ணும் கொறைஞ்சுட போறதில்ல.

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு