Election bannerElection banner
Published:Updated:

``கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய?" - தோழர் நல்லகண்ணு #VikatanVintage

நல்லகண்ணு
நல்லகண்ணு

என்னுடைய 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்தேன்.

- ப.திருமாவேலன்

நல்லகண்ணு... ஆளைச் சரியாகவே அடையாளம் காட்டும் பெயர்!

அரசியல் உலகத்தில் சாதாரணமான விவசாயியைப் போலவே வலம் வந்து பண்பாட்டை விதைத்தவர். எந்த சஞ்சலம், சலனங்களுக்கும் ஆட்படாமல் வாழும் வரலாறு!

''மெகா போனைக் கையில் தூக்கி 'என்று தணியும் இந்தச் சுதந்திரத் தாகம்... என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்று பாடிக்கொண்டு ஸ்ரீவைகுண்டம் தெருவில் 12 வயதில் அலைந்தேன். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று லெதர் பையைத் தூக்கிக்கொண்டு தொழிலாளர், விவசாயிகள் மேம்பாட்டுக்காக அலைகிறேன். அரசியலில் நுழைந்தால் பதவி வாங்கலாம், பணம் சம்பாதிக்கலாம், அதிகாரத்தை அனுபவிக்கலாம் என்றுதான் பலரும் நினைத்து அதைக் கொச்சைப்படுத்துகிறார்கள். ஒருவன் எந்தக் கொள்கைக்காக வாதாடிப் போராடுகிறானோ அதற்கு வெற்றி கிடைக்கும்போது கிடைக்கிற சந்தோஷத்துக்கு எத்தனை கோடிப் பணமும் ஈடாகாது. உண்மையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

அடிமை இந்தியாவில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். அன்றைய நிலையில் வாழ்ந்தவர் அனைவரும் அரசியல் தழும்பு வாங்காமல் இருக்க முடியாது. சுதந்திரம், விடுதலை என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் தெரியாமல் பாரதியார் பாட்டை பஜனைக் கோஷ்டிகளோடு சேர்ந்து பாடிக்கொண்டு போனேன். என் அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காமல், 'பாட்டுப் பாடிக்கிட்டு தெருத் தெருவாச் சுத்துறியாமே? ஒழுங்காப் படிச்சு முன்னேறுற வழியைப் பாரு. இப்படியே அலைஞ்சீன்னா, மாமா மாதிரி காவல்கார வேலைக்கு அனுப்பிடுவேன்' என்று கண்டித்தார். அதிலிருந்துதான் எனக்கு அரசியல் ஆர்வம் அதிகமானது.

நல்லகண்ணு
நல்லகண்ணு

அப்போதுதான் முக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப் பட்டார். இதை விசாரித்த மலபார் போலீஸார் பொதுமக்களைக் கொடுமைப்படுத்தினார்கள். பள்ளி மாணவனாக இருந்த நாங்கள் இதைக் கண்டித்து ஊர்வலங்கள் போனோம். எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியேட் படிக்கப் போனேன். கலைத் தொண்டர் கழகம் தொடங்கினோம். நாங்குநேரியில் ஆசிரியராக இருந்த நா.வானமாமலை எங்களது அரசியல் ஆர்வத்தை அறிவு பூர்வமாக ஆக்கினார். உணவுப் பஞ்சக் காலம் என்பதால், ரேஷன் கார்டுகள் வாங்குவதில் நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. மாணவர்களாகிய நாங்கள் உணவு கமிட்டி அமைத்து மக்களுக்கு கார்டுகளை வாங்கித் தந்தோம். அப்போது ஒரு பாட்டியிடம் கேட்டேன், 'பாட்டி! உங்களுக்கு எவ்வளவு வயல் இருக்கு?' என்று. 'வயிறுதான் இருக்கு பேராண்டி' என்று பதில் சொன்னார். வறட்சியும் வறுமையும் கலந்த இந்த வாழ்க்கை கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை என் கையில் கொண்டுவந்து திணித்தது. அப்போது எனக்கு 18 வயது.

நெல், அரிசியைப் பதுக்கி வைப்பதைப் பலர் செய்வார்கள். இப்படி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டுபிடித்து, ஜனசக்தி பத்திரிகையில் எழுதினேன். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். என்னுடைய முதல் நடவடிக்கை என்று பார்த்தால் இதுதான். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தேன். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப் பட்டபோது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டேன். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை. நாங்கள்வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்தது அரசியல் பயணம். இன்று வரை தொடர்கிறது.

சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தேன். 13 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர், இப்போது மத்திய கமிட்டி உறுப்பினர் எனப் பொறுப்புகள் தொடர்ந்தாலும் இத்தனை ஆண்டுகாலத்தில் அடித்தட்டு மக்களுக்காக உழைத்தேன், அற்புதமான மனிதர்களுடன் பழகினேன் என்பதில்தான் மகிழ்ச்சியும் மனநிறைவும் அதிகமாகி வருகிறது. விவசாயிகள் இன்று அனுபவிக்கும் பல்வேறு சலுகைகள், நான் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தோழர்களின் போராட்டத்தால் கிடைத்தவை. பசிக்குச் சாப்பாடும், படுக்கக் கொஞ்சம் இடமும் தவிர, வேலையாட்களுக்கு எந்தச் சலுகையும் கிடைக்காத நிலையில், பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்து கூலி நிர்ணயத்துக்குப் போராடியது எங்களது கட்சி. அடித்தட்டு மக்களுக்காக வாதாடினோம் என்பதைவிட வென்று காட்டினோம். வாழ்ந்த காலத்தில் அந்த உரிமையை மக்கள் அனுபவிப்பதைக் கண்ணால் பார்ப்பதுதான் அரசியல் எங்களுக்கு வழங்கிய சொத்தாக நினைக்கிறேன்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

என்னுடைய 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்தேன். கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய? தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டேன். கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இருந்தால் அலவன்ஸ் கொடுப்பார்கள். எனக்கு 2,500 ரூபாய் வருகிறது. என் மனைவி அற்புதம் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியமாக 4,500 ரூபாய் வருகிறது. இதுதான் எங்களது வாழ்க்கைச் செலவுக்கான தொகை. அப்பா காலத்து வீடு, ஊரில் இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கொஞ்சத்தை விற்றது போக பாக்கி மிச்சம் இருக்கிறது. இவை போதும் எனக்கு. இதற்கு மேல் வைத்திருந்து என்ன செய்யப் போகிறேன்?

நாங்கள் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்த அரசியல் வேறு. இன்று எல்லாம் மாறிவிட்டது. பணம் கொழிக்கும் தொழிலாகவும், அதிகாரம் அனுபவிக்கும் இடமாகவும் உருமாறிவிட்டது. மிக மோசமானவர்கள் இதில் முளைத்திருக்கலாம். ஆனால், அப்படிப்பட்டவர்களையும் உருத்தெரியாமல் அழிக்கவும் அரசியலால்தான் முடியும். அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் சக்தி இந்த அரசியலுக்குமட்டும் தான் இருக்கிறது. ஆள்வது யார் என்பதை விட யாருக்காக இந்த அரசாங்கம் இருக்கிறது என்ற கேள்வியில்தான் அரசியல் என்ற வார்த்தை அடங்கி இருக்கிறது.

``கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய?" - தோழர் நல்லகண்ணு #VikatanVintage

அதிகார மமதையில் ஆடியவர்களை, வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பிவைக்கும் சக்தி இந்த அரசியலுக்கு மட்டும்தான் இருக்கிறது. நான் சொன்ன எல்லா வார்த்தைகளிலும் அரசியல் இருக்கிறது. அதில் இல்லாதது எதுவும் இல்லை!''

| ஆனந்த விகடன் - செப்.9, 2009 இதழில் 'எனக்கு அரசியல் பிடிக்கும்!' என்ற தலைப்பிலான கட்டுரையில் இருந்து. |

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன.

உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு