Published:Updated:

``கடந்த காலக் காதல்களைப்போல் நிகழ்காலக் காதல்கள் இல்லை!" - இயக்குநர் ராம் #VikatanOriginals

இயக்குநர் ராம்
இயக்குநர் ராம் ( Photo: Vikatan Archives )

``எப்போதும் பெய்கிறது உனக்கான என் பெரு மழை. நீ குடை கொண்டு வர மறந்த நாளில் மட்டுமே என் மழை உனக்குப் புரிகிறது. உன்னை நனைக்கிறது. என்ன செய்ய... நீ இன்று குடையோடு போகிறாய்."

17/02/2010 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் `எழுதிக் கிழித்த கடிதம்' என்ற தலைப்பில் வெளியான இயக்குநர் ராமின் கடிதம்...

அப்பா, அம்மா, உடனிருந்த, இருக்கிற நண்பர்கள், ஆசிரியர்கள், உடன் பணிபுரிந்தவர்கள், என்னிடம் பணிபுரிந்தவர்கள், விமர்சகர்கள் அடிக்கடி நேரடியாகவும், மறைமுகமாகவும், புரணியாகவும் என்னிடம் கேட்கிற கேள்வி, என்னைப் பற்றிச் சொல்கிற விஷயம் இதுதான்... ``நீ என்ன பெரிய இவனா?'', ``உன்னைப்பத்தி நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க? பெரிய பருப்பா நீ?''

இன்று கடல் உன் தலைக்குப் பின் விரிந்துகொண்டே போக நிலவு எழும்பிய நேரத்தில் இதையேதான் நீயும் கேட்டாய், உன் ஆங்கிலத்தில் `what the hell you think about yourself? `இனி வாழ்வில் உன் முகத்தையும் பார்க்க விரும்பவில்லை' என மணல் தெறிக்க நீ நடந்தபோது, கட்டுமரம் ஒன்று அலையில் உயர்ந்து உயர்ந்து கடலுள் மறைந்தது.

சுத்தம் செய்யப்படாத என் படுக்கையில் வீச்சம் அடிக்கும் போர்வையின் கீழ் அசுத்தங்களும், பாவங்களும், துரோகங்களும், துக்கங்களும், எச்சில் ஒழுக உறங்க, நான் பலநாள் உறங்காமல் பரிசுத்தமான உறக்கத்துக்காகக் காத்திருக்கிற என் அறைக்குத் திரும்பினேன், உன்னை ரயிலேற்றிவிட்ட பின்.

துயரத்தைப் போர்த்திவிட்டேன், கதவிடுக்கில் கசிந்து வரும் கடந்த காலக் குளிருக்கு. யாருமற்ற இவ்விரவில் நட்சத்திரங்கள் களவாடப்பட்ட இக்கடல்புரத்து நகரின் வானத்தில் தனியே திரியும் நிலவைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். பனியின் நிறத்தையத்த புகை எழும்பியது, உனை நினைக்கையில் புகைக்க மறந்த சிகரெட்டில் இருந்து. மின்சார ரயிலின் ஊதல், நகரைப் பிரித்தவாறே கரைந்துபோனது.

ரயில் எனக்குப் பிடிக்கும்; பேருந்து பிடிக்காது. பேருந்து ஒரு சர்வாதிகாரி மாதிரி. இரண்டே கதவுகள். சிறிய சன்னல்கள். நடக்க முடியாது. கால் நீட்ட முடியாது. புகைக்க முடியாது. கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால், சன்னல் இருக்கை கிடைக்கும். அதிர்ஷ்டத்தோடு இணைந்து வருவது துரதிர்ஷ்டம் என்கிற உண்மையை நிரூபிக்கும் வகையில், சன்னல் இருக்கை கிடைத்தாலும் பருமனான ஒரு ஜீவன் நம் பக்கத்து இருக்கையில் அமர்ந்து சன்னலோடு நம்மை அழுத்தும்.

துருப்பிடித்த சன்னல் தகரம் நம் கால் சராயை எந்த நொடியும் கிழிக்கும். குழியில் விழுந்து எழுந்து ஆதிகாலத்தில் குதிரையில் சவாரி செய்யும் ஆதி மனிதனாக நாம் ஆகியிருப்போம். A time machine travel என்று நீயும் நானும் சென்ற பேருந்துப் பயணத்தின்போது நீ சொல்லியிருக்கிறாய்.

Representational Image
Representational Image

குழந்தைகளுக்கும் பேருந்து பிடிக்காது என்பதை கற்களைப் பேருந்தின் பின்புறத்தில் எறிந்துவிட்டு மாயமாக மறைந்துபோகிற சிறார்களின் ஓட்டத்தில் நீ அறிந்திருக்கக்கூடும். ஆனால், சிறார்கள் ரயில் மீது கல் எறிவது இல்லை. மாறாகக் கை அசைக்கிறார்கள். எண்ணற்ற கதவுகளோடும், சன்னல்களோடும், நடக்க இடமோடும், நாற்றமடித்தாலும் இயற்கையின் அழைப்புக்குப் பதில் சொல்ல ஒரு தனி அறையோடும், ரயில் போலீசுக்குத் தெரியாமல் புகைக்கப் பல பெட்டிகளோடும், எவரின் சுதந்திரத்தையும் சிறைப்படுத்தாமல் போகிறது ரயில். ஆனால், இவையெல்லாம் அல்ல... எனக்கு ரயில் பிடித்ததற்கான காரணங்கள். எனக்கு உன்னைப் பிடிக்கும். எனவே, ரயில் பிடிக்கும். இந்த ரயில் உலகத்துக்குள் என்னை அழைத்துச் சென்றவள் நீதான்.

தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்த உன் ஊருக்கு உன்னோடு நான் வந்த ரயிலே நான் முதன்முதலில் ஏறிய ரயில். நகரங்களையும், பாலங்களையும், மனிதர்களையும், கொட்டும் வெயிலில் கடந்து உன் அருகே என்னை அமரச் செய்தது அந்த என் முதல் ரயில்.

பெயர் தெரியாப் பாலத்தின் அடியில் பெயர் தெரிந்த ஆறு ஒடியது. நிலவு விழுந்த ஆற்றில் நாணயம் வீசினார்கள். நீயும் வீசி என்னையும் வீசச் சொன்னாய். அவ்வாற்றில் நாணயம் வீசினால் விருப்பம் பலிக்கும் என்பது ஐதீகம் என்றாய். ஆறு கடப்பதற்கு முன் அவசர அவசரமாகப் பாலத்தின் இரும்பில் சத்தம் தெளித்து ஆற்றுக்குள் போனது, நீ என் வாழ்வில் வேண்டும் என்ற என் விருப்பமும் ஒரு ரூபாய் நாணயமும். ``என்ன நினைத்து வீசினாய்?'' என்றாய். எதுவும் சொல்லாமல் சிரித்தேன்.

ரயில் வளைந்த திருப்பத்தில், நாணயங்கள் நிறைந்த நதி சன்னலில் மீண்டும் ஓடியது. பால் வெளியில் தன் விருப்பம் நிறைவேற யாரோவிட்டு எறிந்த நாணயமாக நிலா நட்ட நடு ஆற்றில் நீந்திக் கொண்டு இருந்தது. என்றாவது ஒருநாள் இந்த நதிக்கரைக்கு உனைஅழைத்துப் போய் உனக்காக நான் வீசிய நாணயம் இது என நதியின் அடியில் புதைந்த அதை மீட்டெடுத்து உன் கையில் கொடுத்தால், எத்தனை மகிழ்வாய் இருக்கும் என நினைத்தபோது ரயில் உன் ஊர் சேர்ந்தது. இன்னமும் நதியடியில் புதைந்து கிடக்கிறது என் நாணயமும், விருப்பமும், காதலும்.

இயக்குநர் ராம்
இயக்குநர் ராம்
Photo: Vikatan Archives

நீ இன்று நான் வேண்டாம் எனக் கடைசி ரயில் ஏறினாய். கடற்கரையின் மிச்ச மண், நீ ரயில் ஏறியபோது உன் செருப்பில் இருந்து கீழே விழுந்தது. ``நீ எங்கிருந்தாலும், எவரோடு இருந்தாலும், நான் உன் அருகிலேயே இருப்பேன். கடவுளா, சாத்தானா என்பதை நீதான் முடிவுசெய்ய வேண்டும்'' என்றேன். ``எனக்காக எதுவும் இழக்காத கடவுளும் சரி, சாத்தானும் சரி... எனக்கு வேண்டாம்'' என்றாய்.

என் சுதந்திரத்தைப் பறிக்காத ரயில் எனக்குப் பிடிக்கும். என்னை அடைத்து மூட்டையாக்குகிற பேருந்து எனக்குப் பிடிக்காது. நீ கேட்பவை என்னைப் பேருந்துப் பயணத்துக்குக் கட்டாயப்படுத்தும் கட்டளைகள் என்பதைப் புரிந்துகொள்ள நீ சிறிதும் முயலவில்லை. ``நீ என்னை நேசிக்கவே இல்லை! நீ என்ன பெரிய இவனா? எனக்காக எதையும் இழக்காத உன் காதல் என்ன காதல்? உன்னிடம் நான் பிச்சை கேட்க வேண்டுமா? Do you think have you jumped from heaven? என்ற குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் வீசிய உன்னோடு ரயில் கிளம்பியது.

எப்போதும் பெய்கிறது உனக்கான என் பெரு மழை. நீ குடை கொண்டு வர மறந்த நாளில் மட்டுமே என் மழை உனக்குப் புரிகிறது. உன்னை நனைக்கிறது. என்ன செய்ய... நீ இன்று குடையோடு போகிறாய்.

குதிரையாக உன் நினைவு, அதன் மேல் சவாரி செய்யும் நோஞ்சான் வீரனாக நான். சன்னல் விளிம்பில் இருந்து நிலவு மேலே நகர்ந்து இருந்தது. 30 நிமிடங்கள்தான் இந்தச் சன்னலில் வாழ்கிறது ஒவ்வோர் இரவும் நிலா. ஒரு வாரம் இருக்கும். எப்படியோ வெட்டப்படாமல் விடப்பட்ட ஒரே ஒரு வேப்ப மரத்தின் அடியில் உனக்காக நான் நின்றிருந்தேன். நீ இருக்கும் உயர்ந்த கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்து பார்த்திருந்தாயானால், மரமும் என் தலையும், தார்ச் சாலையில் கொட்டிய சருகும் காற்றின்றி நகராது கிடப்பது தெரிந்திருக்கும், உன் ரகசியம் காக்கும் கண்ணாடி போர்த்திய சன்னலின் வழி.

கறுப்புச் சாலையின் மீது கடந்து போகும் தப்பிப் பறக்கிற பறவையின் நிழல், அடையாள அட்டை இல்லாதோருக்கு அனுமதி இல்லை என்ற பெயர்ப் பலகை, எவரும் ஒரு நொடியும் சட்டை செய்யாத ஒரு செயற்கை நீரூற்று, உள்ளும் வெளியிலும் வருகிற, போகிற கார்களினுள் இருக்கும் மனித முகங்களின் கொண்டாட்டம்... இவற்றோடு உன் கட்டடம் நுழையும் நவீன ஜீவிகள் உதிர்த்துப்போகும் `bro, buddy, honey, sweet heart' தரித்த வாக்கியங்களோடு அவர்களின் நல்ல வாசனை அவர்கள் போன பின்னும் நிற்கிறது.

இரும்பின் நிறமேயான கடந்த கால மிதிவண்டி. அதில் கடந்த காலத் தாத்தா பழுப்பேறிய வேட்டி -சட்டையில் கடந்து போகிறார். தாத்தா போனபோதுதான் நீ வந்தாய். எனக்கும் நான் உள் வர முடியாத உன் கட்டடத்துக்கும் ஆன இடைவெளியை உன்னுடைய ஆறாவது மாடிக் கழுகுப் பார்வையில் பார்த்து, என் தோல்வி என்றாய். ``எழுதுவதை நிறுத்து. தொழில் செய், வாழ், நன்றாக வாழ்பவரைப் பார்த்து பொறாமைப்படாதே, தாடி எடு'' என அடுக்கினாய். ``நான் எழுதியவைக்காக என்னை நேசித்தவள்தானா நீ? பரவாயில்லை, நான் தோற்றவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். நீயாவது ஜெயித்தாயா?'' என்றேன். ``You are sick'' என்று உன் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுப் போயே போனாய், நான் நுழைவதற்கு அனுமதி இல்லாத அப் பன்னாட்டு நிறுவனக் கட்டடத்தினுள்.

``ஒரு வாரத்துக்கு மூணு தடவையாவது குளி, சாக்ஸைத் துவைச்சுப் போடு, நகம் கடிக்காதே, கடவுளை வேண்டிக்கோ'' என்று சொன்ன அதே பெண்தானா நீ? எங்கு தொலைத்தாய் உன்னை நீ? எதுவும் புரிபடாமல் இதே வீச்சமடித்த போர்வையினுள் சுருண்டேன் அன்றும். சன்னல் வழிக் கனவொன்று வந்தது என் போர்வைக்குள். உன்னிடம் இருந்து கைப்பேசியில் அழைப்பு. ``மலை மேல்தான் இருக்கிறேன். வா'' என்றாய்.

``பெரும் மலை ஏற முடியுமோ தெரியவில்லை” என்றேன் நான். ''பெரும் மலை மூச்சிரைக்கத்தான் செய்யும். முட்டிகூடக் கழலலாம். தாவும் எடுக்கும். கால்கள் நடுங்கும். உயரம் பயமுறுத்தும். என்னவானால் என்ன, காதலோடு காத்திருக்கிறோம் உச்சியில் பெரும் காற்றும், நானும்” என்றாய் நீ. கடும் சவால். மூச்சிரைக்க ஏறுகிறேன். ஏறிய பின் வெறும் காற்றில் அசையும் புற்களும் நானும். நீ இல்லை. கனவு அறுந்தது.

சன்னலில் இருண்ட வானம். நிலவு வாழ்ந்த 30 நிமிடங்கள் முடிந்திருந்தன. வெளியே கிளம்பினேன்.

நான் உறங்கும் முன் உறங்குபவர்களும், நான் விழிக்கும் முன் விழிப்பவர்களும் வாழும், உறங்கும் நகரில் உறங்காமல் திரிந்தேன். உன் கைப்பேசியை அழைத்தவாறு இருந்தேன். நீ என் அழைப்பை செவி மடுப்பதாக இல்லை. ஓரிரு முறை ஒரே பாட்டு கேட்டது. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் உன்னை விட அந்தப் பாட்டு மென்மையானதாகவும், அன்பானதாகவும் இருந்தது. அப்படித்தான் இருக்கவும் முடியும். அந்தப் பாட்டுக்காகச் சந்தா கொடுத்து உன் கைப்பேசியைப் பாடவைத்த நீ, அதற்குப் பிறகு எப்போது கேட்டாய் அந்தப் பாட்டை? உன்னை அழைப் பவருக்குத்தானே அந்தப் பாட்டு! உனக்கு அல்லவே? எனவேதான், அந்தப் பாடல் நீயாக அல்லாமல், என்னோடு விழித்திருந்த இரவைப்போல் பிரியத்தோடு உறவாடியது. பின் என்ன ஆயிற்றோ உன் கைப்பேசி. என் ஓயாத மணியோசைத் தொல்லை பொறுக்காமல் பேசியை அமர்த்தினாயோ... தொடர்பு எல்லைக்கு அப்பால் போனது உன் கைப்பேசியும், நெகிழ்வான அந்தப் பாட்டும். இம்முறையாவது உன் கைப்பேசி பாடும் எனப் பல முறை அழைத்தழைத்து பொத்தான்கள் தேய்ந்தன, நிலவோடு சேர்ந்து.

17/02/2010 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
17/02/2010 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

இதோ பொல பொலவென இன்றைய நாள் உனக்கென விடிகிறது. அழைக்கிறேன். அட, தொடர்பு எல்லைக்குள் பாடல் அதே ரம்மியத்துடன் கேட்கிறது. சட்டென்று அறுந்து போய் கர்ணகடூரமான குரல். நீதான் பேசினாய். வேலையும், பணமும், மகிழ்வும், கூடிப் பேசவும் கும்மாளமிடவும் வகையின்றிப்போன நானும் என் எழுத்தும், என்ன உன்னுடைய பகலில் பேச? உறங்கப் போகிறேன் என்று வைத்துவிடுகிறேன். அன்று தொடர்பு எல்லைக்கு வெளியேயான அந்த அன்பான பாடல் நீயா? நானா?

இந்த இரவு உன் ரயில் எங்கு ஓடிக்கொண்டு இருக்கிறது? மீண்டும் அழைக்கிறேன். தொடர்பு எல்லைக்கு வெளியில் உன் கைப்பேசியும் நீயும். நீ கேட்டதற்குப் பதில் சொல்ல எத்தனித்தபோதெல்லாம், ``போதும் உன் விளக்கம்! You and your stupid reasons, I care a damn'' என்று ஒரு சொல்லும் கேட்காமல், உன் அதீத ஆங்கிலத்தில் தவிர்த்தாய். நீ கேட்கிறாயோ இல்லையோ, எனக்கு நானே பதில் சொல்வதுதான் நாளைய பகலை நான் பார்ப்பதற்கான ஒரே வழி.

நான் அப்படி என்ன பெரிய இவன்? நான் நானாக இருக்கிறேன். என்னை நான் ரசிக்கிறேன், இகழ்கிறேன். பரிகசிக்கிறேன். காதலிக்கிறேன். ஏனெனில், நான் ஒரு கலைஞன் (யாருடைய சான்றிதழும் தேவையில்லை எனக்கு என்பதில் உனக்கு என்ன வருத்தம்?). கற்பனாவாதி. என் மனதில் பிம்பங்கள் எழுந்தவாறே இருக்கின்றன. இருக்கும். எனக்கும் என் கலைக்கும் அகப்படாதது இன்னொரு கலைஞனுக்கு மட்டுமே அகப்படுமேயன்றி உனக்கு படாது. இப்படி நான் நினைப்பதால்தானே சரியான கிறுக்கன் என்று சொன்னாய் (you are sick, you are weird)

உன்னைப்போலன்றி என் வாழ்வின் போக்கு ஒரு தேசாந்திரியுனுடையது. பெருத்த தேசத்தின் பெருவாரியான இடங்களில் சுற்றி அலைந்திருக்கிறேன். மனுசர்களை மனுசிகளைச் சந்தித்து அளவளாவியும், அன்பாய் இருந்தும், கிடைத்தும் இருந்திருக்கிறேன். இருந்தும் அனைத்தும் அலுப்பூட்டுவதாக ஆகையில், நீ வேறு வாழ்வின் அதிசயங்களையும் பண முக்கியங்களையும் சொல்லியும், கோரியும் என்னை இம்சிக்கிறாய். கோபப்படாமல் கொஞ்சவா முடியும்?

காதல்
காதல்

ஆனால், என் ஆழ்மனதில் உன் மீதான என் பிரியங்களும், மரியாதைகளும் ஆற்றடி மணலாய், மென்மையாய், நகராமல் ஓர் அழகான ஓவியமாய் இருக்கின்றன. அடி நீச்சல் அடிக்கத் தெரிந்தால், நீ அந்த மணலைக் காணலாம். மங்கிய சூரிய ஒளியில் பாசத்துடன் கலந்திருக்கும் அதனை ஒரு கைப்பிடியில் அள்ளிப் போகலாம். உனக்கு நீச்சல் தெரியாதது எப்படி என் குற்றமாகும்? நீ என்னை செருக்குடையவன் எனப் பெயரிட்டுப் பரிகசித்தாய். சரி, இருந்துவிட்டுப் போகட்டும். செருக்காய் இருப்பதில் என்ன தவறு? சொல்லப்போனால் செருக்கும் கோபமும் உன்னால் எனக்கு வந்தது.

பொறுப்பற்றவன், தோற்றவன், கேவலமானவன், கோபக்காரன், செருக்கானவன் என்று எத்தனையோ சொல்லிவிட்டுப் போ! உன் முதுமையில், வாழ்வின் கக்கடைசியில் நீயும் எனைப் போன்றவள்தான் என்பதை உணர்வாய் என்பது எனக்குத் தெரியும்.

காதலைப்பற்றி நீ என்னதான் நினைக்கிறாய் என்று முன்பு ஒரு காலத்தில் நீ தமிழில் கேட்ட கேள்விக்கு எனக்கு இப்போது பதில் தெரிகிறது. கடந்த காலக் காதல்களைப்போல் நிகழ்காலக் காதல்கள் இல்லை என்பதே கடந்த காலத்திலும் கண்ட உண்மை. ஆக, காதல் கடந்த பின் இனிக்கிறது; கடக்கும்போது கசக்கிறது.

உன் ஊர் நெருங்கிக்கொண்டு இருக்கும். என் நாணயமும் என் காதலும் புதைந்த நதியை இந்நேரம் கடந்துகொண்டு இருக்கும் உன் ரயில். அது எழுப்பும் பெரும் ஊதலில் ஒருவேளை நீ என் குரலைக் கேட்கக்கூடும், உன் குடையை மடித்து வைத்திருந்தாயானால். இக்கடல் நகரில் இன்னமும் மிச்சம் இருக்கின்ற பறவைகள், இன்னமும் மிச்சம் இருக்கிற என் காதுகளுக்காக இரைகின்றன. காலை வரப்போகிறது!

``நம்மையே மீறுகிற ஒரு சாகசம்தான் காதல்!" - கவிஞர் மனுஷ்யபுத்திரன் #VikatanOriginals
அடுத்த கட்டுரைக்கு