Published:Updated:

`மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?' த்ரிஷாவை மிஸ் சென்னை ஆக்கிய அந்தப் பதில்! #VikatanOriginals

`மிஸ் சென்னை' த்ரிஷா
`மிஸ் சென்னை' த்ரிஷா ( #VikatanOriginals )

`மிஸ் சென்னை' தேர்வில் நடுவர் குழுவில் சினிமா உலகைச் சேர்ந்த ஆர்.வி.உதயகுமார், கதிர், குஷ்பு எல்லாம் இருந்தார்கள். ஆனால், இவர்களெல்லாம் சேர்ந்து தேர்ந்தெடுத்த த்ரிஷாவுக்கு சினிமா ஆசையில்லை.

தென்னிந்திய சினிமாவின் `செல்ல' ஹீரோயின் த்ரிஷா. கோலிவுட், டோலிவுட் என எல்லா `வுட்'டிலும் கலக்கிவிட்டு, இத்தனை ஆண்டுகள் கழித்தும், இன்னும் டாப் நாயகிகள் பட்டியலில் அப்படியே இருக்கிறார். இத்தனை வருடங்களில் த்ரிஷா நடித்த படங்களின் பட்டியலைத் திரும்பிப் பார்த்தால்... `கில்லி' தனலட்சுமியோ, `96' ஜானுவோ... நிச்சயம் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு கேரக்டராவது நம்மை நினைக்க வைக்கும். த்ரிஷாவின் இந்தப் பயணங்களுக்கெல்லாம் முதல் அடியாக அமைந்தது 1999-ம் ஆண்டு நடந்த `மிஸ் சென்னை' நிகழ்ச்சி... அதுதான் த்ரிஷாவின் மாடலிங், சினிமா எல்லாவற்றுக்குமே பிள்ளையார் சுழி.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விகடன் நிருபர் எடுத்த த்ரிஷாவின் பேட்டி இது...

10.10.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

ந்திரம் போல, `த்... ரி... ஷா..' என்கிற பெயரை நிறுத்தி நிதானமாக உச்சரித்தார் நிகழ்ச்சி அறிவிப்பாளர். தேவதை போல நிதானமாகப் படியிறங்கி வந்து பொக்கே மற்றும் பரிசுகளோடு விபா - பஜாஜ் ஸ்பிரிட் இணைந்து வழங்கிய `மிஸ் சென்னை 99' கிரீடத்தையும் வாங்கிக்கொண்டார் த்ரிஷா.

அடுத்தநாள் காலையில் வீட்டில் போய் பார்த்தால், `சர்ச் பார்க் கான்வென்டில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறேன். காமர்ஸும் கம்ப்யூட்டரும் படித்துக்கொண்டே மாடலிங் பண்ணுகிறேன்" என்று த்ரிஷா அழகு தமிழில் பேசியது இன்ப அதிர்ச்சி.

அப்பா கிருஷ்ணன் சென்னையிலேயே சொந்த பிசினஸ். அம்மா உமாகிருஷ்ணன். இருவருமே த்ரிஷாவுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்க்ள்.

``பெற்றோரின் கண்டிப்பு பயத்தை ஏற்படுத்தும். ஆனால், அவர்கள் தரும் சுதந்திரம் நமக்குள் பொறுப்பை வளர்க்கும். பயத்தைவிட பொறுப்புதான் இளைஞர்களை நல்வழிப்படுத்தும்" என்று பேசிய `த்ரிஷானந்தா'வின் விருப்பம் - இசை, நடனம், கதைகள்.

போட்டியின் கடைசி சுற்றில் `மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?' என்ற ரேஞ்சில் வந்த கேள்விக்கு த்ரிஷா சொன்ன பதில் - நேர்மை.

``எது இல்லையோ... எது தேவைன்னு அந்த கணத்தில் எனக்குத் தோன்றியதோ அதைத்தான் சொன்னேன். நூறு சதவிகித நேர்மையுடன் வாழும் மனிதன் யார்..? ஆனால், அப்படி வாழும் நிமிடங்கள் சந்தோஷமானவை தெரியுமா.." என்று நேர்மையாக வாழ்வது பற்றி சிறுகுறிப்பு வரைந்தார்.

அம்மா உமாகிருஷ்ணனுடன் த்ரிஷா
அம்மா உமாகிருஷ்ணனுடன் த்ரிஷா
#VikatanOriginals

பள்ளிப் படிப்பு முடிந்து மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசையில் இருக்கும் த்ரிஷாவுக்கு அதே அளவுக்கு மாடலிங் மற்றும் விளம்பரத்துறையிலும் ஆர்வம் இருக்கிறது.

`மிஸ் சென்னை' தேர்வில் நடுவர் குழுவில் சினிமா உலகைச் சேர்ந்த ஆர்.வி.உதயகுமார், கதிர், குஷ்பு எல்லாம் இருந்தார்கள். ஆனால், இவர்களெல்லாம் சேர்ந்து தேர்ந்தெடுத்த த்ரிஷாவுக்கு சினிமா ஆசையில்லை.

``அதுபற்றி நான் யோசிக்கவே இல்லை. பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் மறுத்துவிட்டேன். நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. சினிமா என்ற தனி உலகத்தில் அதெற்கெல்லாம் நேரம் இருக்காது" என்றார் த்ரிஷா.

த்ரிஷாவைச் சந்தித்த முதல் நொடியிலிருந்து ஒரு கேள்வி உறுத்திக்கொண்டேயிருந்தது. ``அதென்ன பெயர்... த்ரிஷா... அதற்கு என்ன அர்த்தம்?"

``தெரியலை. ஆனால், அது ஒரு ரஷ்யப்பெயர். அப்பா அமெரிக்காவில் இருந்தபோது இந்தப் பெயரில் பலரைச் சந்தித்திருக்கிறார். அதனால் இந்தப் பெயரை எனக்கு வைத்துவிட்டார்" என்றார்.

10.10.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
10.10.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

இதுவரை படித்தது `மிஸ் சென்னை' த்ரிஷாவின் நேர்காணல். இனி அடுத்து வருவது சினிமா என்ட்ரி கொடுத்த சில வருடங்களிலேயே தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக மாறிய `ஹீரோயின்' த்ரிஷாவின் நேர்காணல். 2002-ம் ஆண்டு அவர் அளித்த கேஷுவல் பேட்டி.

17.3.2002 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

`த்ரிஷாவைப் பற்றி எழுத இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா என்ன..?' என்று ஆச்சர்யப்படுபவர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ்... த்ரிஷாதான் இன்று கோலிவுட்டின் இளம் சென்சேஷன்.

ராஜு சுந்தரம், பிருந்தா மாஸ்டர் இருவரிடமும் நடனப் பயிற்சி, நடிகை ஷோபனாவிடம் முகபாவனைகளுக்காக ஸ்பெஷல் டியூஷன், கூடுதல் நேரம் ஏரோபிக்ஸ் என்று இந்த இளம் ஹார்லிக்ஸ் அம்மா... ரொம்ப பிஸி!

வரிசையாக மூன்று படங்கள். ஷாமுடன் `கண்மணி நீ வரக் காத்திருந்தேன்'. கிட்டத்தட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது! தருண்குமாருடன் `எனக்கு 20 உனக்கு 18' பூஜை போட்டிருக்கிறார்கள். சூர்யாவுடன் `மௌனம் பேசியதே'!

``ப்ரியதர்ஷன் சார் டைரக் ஷனில் `கண்மணி நீ வரக் காத்திருந்தேன்' படத்தில் அறிமுகமாவது எனக்குப் பெருமை. `உன் இயல்புப்படி இரு... நடிக்கணும்னு ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதே!'னு அடிக்கடி சொல்வார். அடுத்து, ஏ.எம்.ரத்னம் சார் படம் `எனக்கு 20 உனக்கு 18'. அவர் மகன் ஜோதிகிருஷ்ணா டைரக்ட் பண்றார். பூஜையும் போட்டோ செக்ஷனுமே, ஒரு காலேஜ் யூத் ஃபெஸ்டிவலுக்குப் போற மாதிரி ஏகக் கலாட்டாவா இருந்தது!" என்று மாறி மாறிப் பாராட்டினார்.

`கண்மணி நீ வரக் காத்திருந்தேன்' ரிலீஸுக்குப் பிறகு தமிழ்கூறும் நல்லுலகமே `பாலா பாலா' என்று த்ரிஷாவைக் கொண்டாடப் போகிறது. படத்தில் அவரது கேரக்டர் பெயர் அதுதான்!

``பாலா துறுதுறுன்னு ஓடிட்டே இருப்பா... யாரையாவது வம்பிழுக்கறதே அவளுக்குப் பிரதான வேலை! என் நிஜ கேரக்டருக்குக் கொஞ்சம் மாறுபட்ட பெண்தான் என்றாலும் படம் முடியும் தறுவாயில் நான் பாதி பாலாவாக ஆகிவிட்டேன்!" என்றார் குஷியாக.

17.3.2002 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
17.3.2002 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

முதல் படத்தில், முதல் ஷாட்டில் சொதப்பாமல் நடித்து எல்லோரது கைத்தட்டலையும் வாங்கிவிட்டார் த்ரிஷா. ``எனக்கொண்ணும் கேமரா புதுசு இல்லையே... விளம்பரப் படங்களில் நடிக்கறதுக்காகப் பல தடவை கேமரா முன்னாள் நின்றிருக்கேனே! ஆனால், ஒரு விஷயம்... விளம்பரப் படம்னா ரெண்டு நாளில் முடிஞ்சிடும். நம்ம கேரக்டரும் மறந்துடும். சினிமாவில் கிட்டத்தட்ட அந்த கேரக்டராகவே வாழ வேண்டும். அதுதான் வித்தியாசம்!" என்றார்.

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தமிழ் தெரிந்த தமிழ்ப்பொண்ணு... வா செல்லம்!

நிருபர்: சி.முருகேஷ் பாபு | படங்கள்: சு.குமரேசன், கே.ராஜசேகரன்
அடுத்த கட்டுரைக்கு