Published:Updated:

மெட்ராஸ் வரலாறு: கிராமங்கள் நிறைந்த சென்னை தெரியுமா? - கத்தி பாரா முதல் கோடோ பாக் வரை | பகுதி 12

கத்தி பாரா

குதிரை லாயம் இருந்த இடத்தை உருது மொழியில் (?) `கோடோ பாக்’ என்பார்கள். அங்கு இருக்கும் ரயில் நிலையத்தில் நிறைய குதிரை வண்டிகள் நிற்கும். அதுதான் கோடம்பாக்கம் என்று ஆகிவிட்டது.

மெட்ராஸ் வரலாறு: கிராமங்கள் நிறைந்த சென்னை தெரியுமா? - கத்தி பாரா முதல் கோடோ பாக் வரை | பகுதி 12

குதிரை லாயம் இருந்த இடத்தை உருது மொழியில் (?) `கோடோ பாக்’ என்பார்கள். அங்கு இருக்கும் ரயில் நிலையத்தில் நிறைய குதிரை வண்டிகள் நிற்கும். அதுதான் கோடம்பாக்கம் என்று ஆகிவிட்டது.

Published:Updated:
கத்தி பாரா

ஓர் இடம் தொன்மையானது என்பது அதன் காரணப் பெயரால் அறியப்படும். பள்ளத்தூர், குன்றத்தூர், குளத்தூர், மேட்டூர், பனையூர், ஆத்தூர், நெல்லூர் போன்ற சிற்றூர்கள் முதல் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, காஞ்சி போன்ற பல பேரூர்களுக்கும் அத்தகைய பெயர்க் காரணங்கள் உண்டு. பிற்காலச் சோழர்கள் காலந்தொட்டு அரசர்கள் பெயரை ஊர்களுக்கு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சுந்தர சோழபுரம், ராஜராஜேச்வரம், கங்கைகொண்ட சோழபுரம் எனப் பெயர்கள் வைத்ததாகச் சொல்வார்கள்.

பிரிட்டீஷார் காலத்தில் சில ஊர்கள் சிதைந்தன. திருவல்லிக்கேணி ட்ரிப்ளிகேன் ஆனது, தஞ்சாவூர் டேன்சூர், திருச்சிராப்பள்ளி ட்ரிச்சி என பிரயோகிக்கப்படுவது நாகரிகமாகிவிட்டது.

வந்தவாசியில் கவிஞர் அ.வெண்ணிலா ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். வந்தவாசி என்றால் என்ன என்று கேட்டேன். அவர் சொன்ன காரணம் வித்தியாசமானது.

வெள்ளையர் ஆட்சிக்காலத்தின்போது, ஒரு வெள்ளைக்காரர் அந்த ஊரின் பக்கம் வந்தார். அவருக்கு ஊரின் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசை. அங்கே குளத்தில் நின்றபடி மாட்டு வண்டியைக் கழுவிக்கொண்டிருந்தவரிடம் 'ஊரின் பெயர் என்ன?' என ஆங்கிலத்தில் கேட்டார்.

நீ என்ன செய்கிறாய் என்று கேட்டதாக அர்த்தம் பண்ணிக்கொண்டு, 'வண்டி வாஷ்' என்றாராம் அரைகுறை ஆங்கிலத்தில். ஆங்கிலேயரும் ஊரின் பெயரை `வண்டிவாஷ்’ என்று குறித்துக்கொண்டு போனாராம். அதுதான் வந்தவாசி என்று ஆனதாம்.

ஊர்கள், ஊர்ப் பெயர்கள் பிறந்த கதை நெடிய பின்னணியும் வரலாற்று சுவாரஸ்யமும் கொண்டவை. சென்னைக்கு வருவோம்...

கத்தி பாரா
கத்தி பாரா

சென்னை கிண்டியில் மேம்பால ஏரியாவை, `கத்தி பாரா’ என்கிறார்கள். அங்கே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் சேர்ந்து நேரு சிலையைத் திறந்துவைத்தனர். கத்தி பாரா நேரு சிலை சென்னையின் முக்கிய அடையாளமாக இருந்தது. புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின் இத்தகைய சந்திப்புகளில் பிரதானமாக இருந்த பல சிலைகள் ஓர் ஓரமாக ஒதுங்கிவிட்டன... ஒதுக்கப்பட்டன.

விவகாரம் சிலை பற்றியது அல்ல. கத்தி பாராவைப் பற்றியது.

கத்தி பாரா என்றால் என்ன அர்த்தம்? என்று நிறைய பேர் கேட்டார்கள். பத்திரிகை, திரைத்துறை என்று கலக்கிக்கொண்டிருக்கும் ஜெ.ரூபன் அதில் ஒருவர். முக்கியமானவர். சிறந்த படிப்பாளி. அவருக்கே தெரியாத ஒரு விஷயத்தை நாம் தனி ஒரு ஆளாகத் தீர்த்துவைக்கப்போகிறோம் என்பதே சவாலான விஷயம்தான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கத்தி பாரா என்பது `கத்தி பரேட்’ என்ற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. கத்திப் பாரா என்பது மிலிட்டிரி கன்டோன்மென்ட் ஏரியா. அங்கு கத்திவைத்த துப்பாக்கியைப் பிடித்தபடி பரேடு (Parde) நடக்கும். அதைத்தான் கத்தி பாரா என்கிறார்கள். இது ஒரு வாதம்.

பாரா என்றால் பந்தோபஸ்து. பாராவின் மொழி மூலம் தெரியவில்லை. அந்த மிலிட்டரி பகுதியில் கத்திவைத்தபடி பந்தோபஸ்து பணியில் ஈடுபடுவார்கள். அதனால் கத்தி பாரா என்றும் சொன்னார்கள்.

சென்னையில் பல இடங்களுக்கு இப்படி பெயர்க் காரணம் சொல்கிறார்கள். நுங்கு அதிகம் விளைந்த இடம் நுங்கம்பாக்கம். சையது என்பவர் வியாபாரம் செய்துவந்த இடம் சையது பேட்டை ஆகி, சைதாப்பேட்டை ஆகிவிட்டது.

குதிரை லாயம் இருந்த இடத்தை உருது மொழியில் (?) `கோடோ பாக்’ என்பார்கள். அங்கு இருக்கும் ரயில் நிலையத்தில் நிறைய குதிரை வண்டிகள் நிற்கும். அதுதான் கோடம்பாக்கம் என்று ஆகிவிட்டது.

தென்னை மரங்கள் அதிகம் இருந்த தென்னம்பேட்டைதான் தேனாம்பேட்டை என மருவியது. மயில்கள் ஆடும் ஊர்தான் மயிலாப்பூர் ஆனது. பிரம்புக்காடுகள் இருந்த இடம் பெரம்பூர். பூவரசன் மரங்கள் நிறைந்த இடம் (பூவரசன் பாக்கம்) புரசைப்பாக்கம் ஆகி, புரசைவாக்கம் ஆனது.

இவை எல்லாமே உண்மையாக இருக்கக்கூடும்.

மெட்ராஸ் வரலாறு: கிராமங்கள் நிறைந்த சென்னை தெரியுமா? - கத்தி பாரா முதல் கோடோ பாக் வரை | பகுதி 12

சென்னை நிறைய கிராமங்களை விழுங்கிய நகரம். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதி லேக் ஏரியா. முகப்பேர் ஏரித்திட்ட குடியிருப்பு. அயப்பாக்கம், அயனம்பாக்கம், கொளத்தூர், புளியந்தோப்பு, வண்ணாரப் பேட்டை, மண்ணூர் பேட்டை, கொண்டித் தோப்பு, எண்ணூர், திருவொற்றியூர், திருநின்றவூர், நங்கநல்லூர் போன்ற பல அழகிய கிராமங்களை நகரம் விழுங்கிவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் அருகே மண்ணடி என்று ஓர் இடம் உண்டு. அந்த இடத்திலுள்ள ஈஸ்வரன் கோயில் இப்போது பாதியளவு புதைந்து கிடக்கிறது. காரணம் அந்த இடத்தை உயர்த்துவதற்காக வண்டி வண்டியாக மண் அடிக்கப்பட்டது. மண் அடிக்கப்பட்ட இடம் மண்ணடி. மண் எங்கே இருந்து கொண்டுவரப்பட்டது? அது அருகேயுள்ள தீவுத்திடலிலிருந்து கொண்டுவரப்பட்டது. அங்கே இருந்த குன்றின் பெயர் நரிமேடு. அது நரிகள் அதிகமாக வாழ்ந்த இடம் என்று சொல்லத் தேவையில்லை. அங்கு ஏறி நின்று பார்த்தால் நகரி மலை நன்றாகத் தெரியும் என்கிறார் சென்னை நகரின் வரலாற்றை எழுதிய மா.சு.சம்பந்தன் அவர்கள்.

ஒரு முறை ரயிலில் திருவள்ளூர் சென்றுகொண்டிருந்தபோது என் எதிரே அப்பாவும் மகனும் இப்படிப் பேசிக்கொண்டு வந்தார்கள்.

ஆவடி ரயில் நிலையம்
ஆவடி ரயில் நிலையம்

அப்பா: ஆவடின்னு இந்த இடத்துக்கு ஏன் பெயர் வந்தது தெரியுமா?

மகன் (நான்காம் வகுப்பாக இருக்கலாம்): தெரியலையேப்பா.

அப்பா: ஆர்ம்டு வெயிக்கிள் அண்டு அம்யூனிஷன் டெப்போ. ராணுவத்துக்கான எந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் இடம் என்பது அர்த்தம். அதன் முதல் எழுத்துகளைச் சுருக்கி 'ஆவடி' என்கிறார்கள்.

பையனுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. ரயில் ஆவடி தாண்டி பட்டாபிராம் வந்து நின்றது.

பையன்: பட்டாபிராம் என்பதன் ஃபுல் ஃபார்ம் என்னப்பா?

அப்பா: விட்டா செவ்வாய்பேட்டை-க்கெல்லாம் எக்ஸ்பான்ஷன் கேட்பே போலருக்கே... பேசாம வாடா..!

அடுத்து சென்னை ஏரிகள்...