Election bannerElection banner
Published:Updated:

2009 மே, 18-ம் நாள்...``அய்யோ என்ரை தெய்வமே!" - ஓர் அகதியின் கடைசி கதறல் #VikatanOriginals

ஓர் அகதியின் கடைசி கதறல்
ஓர் அகதியின் கடைசி கதறல் ( #VikatanOriginals )

இது உல்லாசப் பயணமில்லை; ஊர் சுற்றி பார்க்கப் புறப்பட்டதுமல்ல. `மரணதேவதை இயற்கையாய் வந்து `வருக’ என்னும் வரைக்கும் இவ்வுலகில் மூக்கும் முழியுமாய் வாழவே பிறந்தோம்’ என்பதற்கிணங்கவே இந்தத் தீமிதிப்பு நடை!

நாடுகளும், காரணங்களும் வேறு வேறு இருக்கலாம்; ஆனால், உலகெங்கும் வாழும், வாழத் தவிக்கும் அத்தனை அகதிகளின் கதையும், வலியும் ஒன்றுதான். உரிமைகள் மறுக்கப்பட்டு, ஏதேனும் ஒரு அரசியலால் ஒதுக்கப்பட்டு, ஒருநாள் திடீரென தாய்நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்படுகிறவர்கள் அவர்கள். கடல்கள், நாடுகள் தாண்டி இன்றும் இப்படி உலகம் முழுவதிலும் அகதிகளின் இடப்பெயர்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி துயரங்களின் வலி சுமந்து, தேசங்களின் எல்லைகள் கடந்த ஒரு அகதியின் ஒரு கதை இது...

நான் அகதியானது

- ரவி அருணாச்சலம்

நான்கு நாடுகளைத் தீ மிதித்து நடந்ததுபோல நடந்து கடந்து ஜெர்மனி வந்தேன். நான் அப்போது நின்ற நாடு, உக்ரைன். 1996 - யூன் ஏழாம் நாள், உக்ரைனி லிருந்து என் புறப்பாடு இருந்தது. இலங்கைத் தமிழர் நாங்கள் எட்டு பேர். ஒரு வாகனத்திலும் பின்னர் நடையிலுமாக பிலருஸ் நாட்டை அடைகிறோம். இரண்டு நாள்கள் அதற்குப் பிடித்தன. வழி தெளிவாக வேண்டுமென்று நான்கு நாள்கள் அங்கு காத்திருந்தோம். பிறகும், அதே காடு வழி நடை! சென்றுசேர்ந்த நாடு ருமேனியா.

ருமேனியாவின் எல்லை கடந்தபோது, அது போலந்து என்று சொன்னார்கள். அதன் தலைநகர் வார்சாவில் நான்கு நாள் தங்கல். அங்கிருந்து தொடருந்து ஏறி போலந்தின் எல்லைக்கிராமம் ஒன்றில் நாங்கள் தங்கிய நாள்கள் ஒரு கிழமைக்கும் மேலே. அந்த எல்லைக்கிராமத்தைத் தாண்டினால் ஜெர்மனி. அதை நாங்கள் காடுகளினால் தாண்டவில்லை; நதி! ஆற்றினைக் கடந்து ஜெர்மனியில் கால்வைத்தோம். அந்த நாளை யோசித்தேன்; மணிக்கூட்டில் நேரம் பார்த்தேன். 1996, யூலை ஆறாம் திகதி, சாமம் ஒன்றரை மணி. ஒருமாத உலைவு மற்றும் மனஉளைவு!

இது உல்லாசப் பயணமில்லை; ஊர் சுற்றி பார்க்கப் புறப்பட்டதுமல்ல. `மரணதேவதை இயற்கையாய் வந்து `வருக’ என்னும் வரைக்கும் இவ்வுலகில் மூக்கும் முழியுமாய் வாழவே பிறந்தோம்’ என்பதற்கிணங்கவே இந்தத் தீமிதிப்பு நடை!

ஜெர்மனியில் பதின்மூன்று மாத வாழ்க்கை. அது என் உயிரைத் தின்னத் தொடங்கியது. சீரழிவின் உச்சங்களைத் தொட்டேன். இன்னும் இருந்தால் அழிவுதான். மீண்டும் அதே தீமிதிப்பு நடை! ஜெர்மனியிலிருந்து ஒல்லாந்து தாண்டி, பிரான்ஸ் வந்து சில நாள்கள் தரித்து, கடல் கடந்து இங்கிலாந்தை அடைந்தேன். வந்த நாள் மிக முக்கியமான நாள். 1997 ஓகஸ்ட் 31-ம் நாள். இளவரசி டயானா இறந்த இரவின் விடியல்!

இந்த விவரிப்பெல்லாம் எதற்கு? இலங்கையின் இரண்டு பல்கலைக் கழகங்களில் (யாழ்ப்பாணம், கொழும்பு) கல்வி பயின்றேன். என் உத்தியோகம் உயர் நிலையுடைத்து. ஏன் எனக்கு இந்த ஓட்டம்? ஒரேயொரு காரணம்; இலங்கைத்தீவில் தமிழைப் பேசுவதன்றித் தவறொன்றும் நான் செய்யவில்லை.

நான் இங்கிலாந்தில் செய்யாத வேலைகள் இல்லை. வானொலி, தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக இருந்தது மகிழ்வு, மதிப்பு. ‘லோன்றி’யில், பெட்ரோல் நிரப்பு நிலையத்தில், ‘சூப்பர் மார்க்கற்றில்’, உணவு விடுதியில் செய்த வேலைகளைக் குறைவாக நான் மதிப்பிடவில்லை. மதிப்பிட்டோர் உண்டு!

ஒரு நம்பிக்கை இருந்தது, நான் என் தேசத்துக்குத் திரும்பப் போவேன். பழைய வேலை கிடைக்குமோ இல்லையோ, என் மண்ணை மிதித்து என் வாழ்வு உயிர்க்கும். என் மண்தான் எனக்கு உரப்பு. நான் மாத்திரம் அவ்வாறு உணர்ந்தேனல்லன். அவ்வாறு உணர்ந்தவர் பலர்.

2009! இல்லை, அந்த ஆண்டைச் சொல்லக் கூடாது. 2006! போர் தொடங்கியது. நான்கோ ஐந்தோ கட்ட ஈழப்போர். நாங்கள் நம்பியபடி, பார்த்தபடி இருக்கிறோம். இந்தப் போர் வெல்லப்படும். இறுதியில் ஏதோ ஒரு தீர்வு கிடைக்கும். தமிழீழம் அல்லது சுயாட்சி! என்போன்று லட்சக்கணக்கானோர் அதை நம்பியுமிருக்கலாம். காலம் அப்படியே கரைந்துகொண்டேபோகிறது.

இலங்கை
இலங்கை
#VikatanOriginals

2008-ல் ஒன்று புரிகிறது, இங்கு நடப்பது போர் அல்ல. அழிப்பு ஒன்று நிகழப்போகிறது! வெற்று வார்த்தைகளை மனம் நம்பியும் நம்பாமலும் விடுகிறது. அடி மனசு சொல்கிறது, `வெல்லுவம்!’ இன்னொரு மனசு அதை மறுப்பதையும் உணர்கிறேன். போர் உச்சத்துக்குப் போய்விட்டது. மானுடரின் மரணத்துக்கு அளவே இல்லை!

நான் லண்டன் மாநகரில் இருக்கிறேன். இங்கிருந்து என்ன செய்ய முடியும்? இங்கு நிகழ்ந்த போராட்டங்களுக்கு அளவே இல்லை. மூன்று முறை பென்னாம்பெரிய ஊர்வலம்! அந்த ஊர்வலங்களை வழிநடத்துவோரில் நானும் ஒருவன். லண்டன் மாநகர் அப்படி ஓர் ஊர்வலத்தைக் கண்டதில்லை. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள்.

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மனிதர்களின் ஊர்வலத்தை ஒருபோதும் லண்டன் கண்டதில்லை. 2009 ஜனவரி 31-ம் நாள், சனிக்கிழமை ஊர்வலம்! லண்டனின் வரலாற்றில் நிகழாதவாறு பிப்ரவரி இரண்டாம் நாள் பெரும் பனிப்பொழிவு. ஏதோ ஓர் ஊடாட்டம் இரண்டினிடையேயும் உண்டு.

இங்குள்ள பத்திரிகைகள் அவ்வூர்வலங்களுக்கு ஆச்சர்யக்குறி போட்டன. நாள்தோறும் பாராளு மன்றத்தின் முன்னுள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தோர் பலர். நாள்தோறும் நான் போனேன். இது என் கடமைகளில் ஒன்று என எனக்குத் தெரிந்தது. பணி முடித்து வந்த அன்றைய நாள்களின் பின்னேரங்கள் எனக்குச் சாம்பல் கலந்த வர்ணம். என் பயணம் தரும் தொடருந்துகள்கூடச் சோம்பலுற்றுப் போயிற்று. துக்கத்தின் குறியீடாக அதை நான் பார்த்தேன். ‘வெள்ளை’கள் வெகு இயல்பாகத் திரிகிறார்கள். எங்கள் முதுகில் அல்ல; மனதில் மிகுந்த சுமை!

2009 மே, 18-ம் நாள். அஃது ஒரு திங்கட்கிழமை. அமெரிக்கத் தூதரகத்தின் முன்னே போராட்டம். நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு `வைத்திய விடுமுறை’ அறிவித்துவிட்டு அப்போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். அப்போது வந்த செய்திகள் உவப்பானவையல்ல. வெள்ளைக்கொடி ஏந்தியோர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி அது. தோற்றுக்கொண்டே போகிறோமா? மதியம் மாத்திரம் அல்ல; இரவும்கூடச் சாப்பிட முடியாமல் போயிற்று.

ஆனால், அடுத்த அடுத்த நாள் வந்த செய்திகள், ``அய்யோ என்ரை தெய்வமே” என்று என்னைக் கதறப் பண்ணியது. எங்களுக்கான தெய்வம் எங்களிடம் இல்லாமல் போனார். அது எனக்கு முற்றுமுழுதாகத் தெரிந்தது. அது முதலும் கடைசியுமான என் கதறல்!

01/05/2019 விகடன் தடம் இதழில் வெளிவந்த கட்டுரை

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு