Published:Updated:

`ஆடியோ காஸெட் புரட்சியை இங்கே தொடங்கிவைத்ததே இளையராஜாதான்!' 90-களின் மியூசிக் ரவுண்டப் #VikatanOriginals

இளையராஜா
இளையராஜா ( #VikatanOriginals )

90-களில் திடீரென ஏற்பட்ட `ஆடியோ காஸெட் புரட்சி' அன்றைய சினிமா பிசினஸில் எப்படியெல்லாம் தாக்கம் செலுத்தியது?

OTT பிசினஸிற்கும், தியேட்டர் பிசினஸிற்கும் இடையே சிக்கி நிற்கிறது தமிழ்த் திரையுலகம். நேற்றுவரை கைகொடுத்த தியேட்டர் பிசினஸ் தற்போது வேறு வழியின்றி துவண்டுபோயுள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் சுணங்கிப்போகாமல் இருக்க தோள்கொடுக்க வந்திருக்கின்றன OTT பிளாட்ஃபார்ம்கள். இந்தப் பிரச்னை எவ்வளவு நாட்கள் நீடிக்கும், OTT பிளாட்ஃபார்ம்கள் வருங்காலத்தில் திரையரங்கங்கள் அளவுக்கு தயாரிப்பாளர்களுக்கு வருமானம் தருமா, OTT-யின் ஆதிக்கம் அதிகரித்தால் தியேட்டர் பிஸினஸ் என்னாகும் என நிறைய கேள்விகளுக்கு தற்போது நம்மிடம் விடையில்லை. ஆனால், இந்த மாற்றம் தவிர்க்கவே முடியாத ஒன்று. எப்படி தியேட்டர் பிசினஸைத் தாண்டி, சாட்டிலைட் உரிமை, டப்பிங் உரிமை போன்றவை தயாரிப்பாளர்களுக்கு முக்கியமான வருவாயாக மாறியதோ, அதேபோல இந்த டிஜிட்டல் உரிமையும் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் வளரும். திரையரங்கில் பிரமாண்ட ஸ்கீரினில் படம் பார்த்த தலைமுறை, இன்று ஸ்மார்ட்போன் ஸ்கீரின்களுக்கு தங்களை மாற்றிக்கொண்டதால் ஏற்பட்ட மாற்றம் இது. இவற்றையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது 2020-ல்.

இதேபோலத்தான் 90-களிலும் தமிழ் சினிமா பிசினஸில் பெரியதொரு மாற்றம் வந்தது. திரையரங்குளைத் தாண்டி வீடுகளுக்குள்ளேயும் டேப் ரிக்கார்டர்கள் மூலம் இசை கேட்டு மகிழ்ந்தது அந்தத் தலைமுறை. அதனால் ஏற்பட்ட மாற்றம் அது. அந்த மாற்றம் ஆடியோ காஸெட் பிசினஸ். அதற்கு முன்பே, ஆடியோ காஸெட் பிசினஸ் தமிழகத்தில் செழிப்பாக இருந்தாலும், அதனால் தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் யாரும் பெரிதாகப் பயனடையவில்லை. அந்தக் குறையைத் தீர்த்து, தமிழ் ஆடியோ காஸெட் பிசினஸில் ஒரு புரட்சியையே தொடங்கி வைத்தார் இளையராஜா. இந்த மாற்றம் எப்படி நடந்தது? இந்த பிஸினஸ் தமிழ்த் திரையுலகில் அப்போது ஏற்படுத்திய தாக்கம் என்ன? விரிவாகப் பேசுகிறது இந்தக் கட்டுரை. 30/04/1995 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த அந்தக் கட்டுரை அப்படியே இங்கே...

30/04/1995 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

̀ முப்பது லட்சம்... ஐம்பது லட்சம்... ஒரு கோடி' - இது சினிமாப் படங்களின் விலையல்ல! சினிமாப் பாடல்கள் அடங்கிய ஆடியோ காஸெட்டுகளை வெளியிடும் உரிமைக்கான விலைதான் இப்படி லட்சங்களைத் தாண்டிக் கோடியைத் தொட்டுக் கொஞ்ச நாள்களாகின்றன!

``சினிமாத் தொழில் செத்து விடுமோ என்று திகிலடைந்து போயிருந்த தயாரிப்பாளர்களுக்கு இந்த ஆடியோ காஸெட் பிசினஸ்தான் ஊக்க டானிக்காக இருக்கிறது" என்று சிலர் சொல்ல... ``இந்த பிசினஸில் புரளுகிற பணமே சினிமா மியூஸிக்கின் நம்பர் ஒன் இடத்தைத் தீர்மானிக்கிறது!" என்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள்!

சரி, ஆடியோ பிசினஸில் ஏற்பட்டிருக்கும் இந்தத் திடீர் புரட்சிக்கு என்னதான் காரணம்?

இந்த பிசினஸ் புரட்சியைத் தமிழில் ஆரம்பித்து வைத்தவர் இளையராஜாதான்! ஒரு காலத்தில் இந்திப் பாடல்களுக்கு மட்டும்தான் தமிழ்நாட்டிலேயே நல்ல பிசினஸ் இருந்து வந்தது! ராஜா வந்த பிறகுதான் பட்டிதொட்டியெல்லாம் தமிழ் சினிமாப் பாடல்கள் புயல் வேகத்தில் பரவின! நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் படங்களை ராஜா தந்துகொண்டே போக, காஸெட் பிசினஸும் நிமிர்ந்து உட்கார்ந்தது...
என்கிறார் எக்கோ ரெக்கார்டிங் கம்பெனியின் சேர்மனான ரங்கசாமி பார்த்தசாரதி!

தயாரிப்பாளர், டி.சிவா சொன்னார்... ``இந்த பிசினஸில் புரளும் பணத்தை எங்களுக்குப் புரிய வைத்ததே ராஜா சார்தான். காஸெட் விற்கும் தொகையில் `ஐம்பது சதவிகிதம் தயாரிப்பாளருக்கு, ஐம்பது சதவிகிதம் இசையமைப்பாளருக்கு...' என்ற ஓர் ஒழுங்கு முறையும் கொண்டுவந்தார்! அப்போது வரை ஐந்நூறுக்கும் ஆயிரத்துக்கும் காஸெட் உரிமையைத் தாரைவார்த்து வந்த தயாரிப்பாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கிடைக்க வழி செய்தார்!"

டேப் ரிக்கார்டர்கள் புயல் வேகத்தில் விற்க ஆரம்பித்ததும் இன்னொரு காரணம் என்றார் ரங்கசாமி பார்த்தசாரதி.

``1989-ல் நாங்கள் ஒரு சர்வே நடத்தியதில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி டேப் ரிக்கார்டர்கள் இருப்பது தெரியவந்தது! இப்போது எத்தனை மடங்கு பெருகியிருக்கும்னு யோசியுங்க..!" என்றார் அவர்.

30/04/1995 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
30/04/1995 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

பெயரைக் குறிப்பிட விரும்பாத ஆடியோ நிறுவன ஊழியர் ஒருவர் சொன்னார்...

``முப்பது ரூபாயிலிருந்து முப்பதிரண்டு ரூபாய் வரை கடையில் விற்கும் ஆடியோ காஸெட் ஒன்றின் தயாரிப்புச் செலவு என்ன தெரியுமா? பிசினஸின் எல்லா மட்டங்களிலும் `பில்' கொடுத்து வாங்கிச் சட்டரீதியாகச் செயல்பட்டால் ஒரு காஸெட் தயாரிக்க பதின்மூன்று ரூபாய் செலவாகிறது! அதுவே பில் இல்லாமல், கொஞ்சம் `முன்னே பின்னே' தயாரித்தால் ஒன்பதிலிருந்து பத்து ரூபாயில் தயாரித்து விடமுடியும்" என்ற அவர் தொடர்ந்தார்.

``கம்பெனிக்காரர்களிடமிருந்து காஸெட்டுகள் நேரடியாக டீலர்களுக்குப் போகும். அந்த டீலர்களிடம் ஒரு காஸெட் 22 ரூபாய்க்குக் கிடைக்கும். அதுவே சில்லரை விற்பனையில் 32 ரூபாய்க்குக் கிடைக்கிறது. எல்லா மட்டங்களிலும் நல்ல லாபம் இருப்பதால் பிசினஸ் கொடிகட்டிப் பறக்கிறது."

இப்படி எல்லோரும் லாபம் சம்பாதிக்கிற இந்த பிசினஸில் தயாரிப்பாளர்கள் இன்னும் பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று நிரூபித்துக் காட்டியவர், தயாரிப்பாளர் ஜீ.விதான் என்கிறார்கள். `` `தளபதி' படத்தின் ஆடியோ உரிமையை இருபத்தைந்து லட்ச ரூபாய்க்கு அவர் விற்றபோது திரையுலகமே ஆச்சர்யத்தில் துள்ளியது.." என்று பலரும் சொல்ல, ஜீ.வி-யைச் சந்தித்தோம்...

இப்போது சினிமா இண்டஸ்ட்ரிக்கு ஈடாக காஸெட் இண்டஸ்ட்ரியும் முன்னேறியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத நிஜம். `பம்பாய்' படத்தின் இந்தி உரிமை எண்பது லட்சம் ரூபாய்க்கும், தமிழ்ப்பட காஸெட் உரிமை இருப்பத்தைந்து லட்சம் ரூபாய்க்கும் விற்றிருப்பதே இதற்கு சாட்சி. சொல்லப்போனால் எதிர்காலத்தில் ஒரு படத்தைவிட காஸெட் உரிமை விலை அதிகமானாலும் வியப்பதற்கில்லை
என்று சொன்னார் ஜீ.வி!

எல்லாத் தயாரிப்பாளர்களும் காஸெட் கம்பெனிகளுக்கு ஆடியோ உரிமையை விற்று வந்த பிசினஸ் பாரம்பர்யத்தை வெற்றிகரமாக உடைத்தவர் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்!

`ஜென்டில்மேன் ஆடியோஸ்' என்ற பெயரில் தானே ஒரு கம்பெனி தொடங்கி, ̀காதலன்' படத்தின் ஆடியோ காஸெட்டுகளை வெளியிட்ட குஞ்சுமோனைச் சந்தித்தோம்...

``காஸெட் கம்பெனிக்காரர்கள் தயாரிப்பாளருக்கு உரிய லாபம் தராமல் ஏமாற்றிவிடுகிறார்கள்! அதனால்தான் என் பட காஸெட்டை நானே வெளியிடலாம்னு முடிவு செய்தேன். அது `ரிஸ்க்'தான்! எனக்கு எப்பவுமே `ரிஸ்க்' எடுக்கப் பிடிக்கும்! ஏ.ஆர்.ரஹ்மானோட மியூஸிக் மேல எனக்கு அபாரமான நம்பிக்கை இருந்தது. அவரை நம்பி ` ரிஸ்க்' எடுத்தேன். ஜெயிச்சேன்! சினிமாவில் தயாரிப்பாளருக்கு எத்தனை வழியில் வருமானம் வர வாய்ப்பிருக்கோ அத்தனை வழியிலும் அந்த வருமானம் வரணும்" என்றார் அவர் அழுத்தம் திருத்தமாக.

தயாரிப்பாளரும் டைரக்டருமான கேயார் சொன்னார்... ``இந்தியாவில் திருட்டு ஆடியோ காஸெட்டுகள் தமிழகத்தில்தான் அதிகமாகத் தயாராகின்றன. எப்படித்தான் முயற்சி செய்தாலும் இந்த பைரஸி காஸெட்டுகளை ஒழிக்க முடியவில்லை. இது ஒரு பிரச்னை என்றால், பிரபல காஸெட்கம்பெனிக்காரர்களே கால்வாசி ஒரிஜினலாகவும் மீதம் எழுபத்தைந்து சதவிகிதம் டூப்ளிகேட் காஸெட்டுகளாகவும் தயாரித்து வருகிறார்கள். இந்த டூப்ளிகேட் காஸெட்டுகளை உருவாக்குவதில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும் பங்கு அதிகம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு தீர்மானம் வைத்திருக்கிறோம். அதன்படி தமிழகத்தில் காஸெட்டுகள் வெளியிடும் கோ ஆபரேட்டிவ் சொஸைட்டியைத் தொடங்கி, அந்த சொஸைட்டியின் மூலமே எல்லா காஸெட்டுகளும் வெளியிடப்பட வேண்டும். தனியார் காஸெட் நிறுவனங்களை நாடக்கூடாது. இப்படிச் செய்தால் ஒரு காஸெட்டுக்கு மட்டும் பத்து ரூபாய் வரை தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். இந்த சொஸைட்டி உருவானால் தமிழ் சினிமா உலகத்துக்கே புது வாழ்வு கிடைக்குமே!" என்று தனது ஐடியாவை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் கேயார்.

30/04/1995 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
30/04/1995 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

``தமிழ் சினிமாப் பாட்டு பிசினஸில் `ரோஜா' ஒரு மைல்கல்! ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இளைஞரின் ஸ்வரங்களில் லட்சக்கணக்கான காஸெட்டுகள் விற்றுத்தீர்த்த `ரோஜா' பாடல்கள் தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டன! `ரோஜா' இந்திப் பாடல்களின் மொத்த விற்பனை ஏழரை கோடி ரூபாயைத் தொட்டது. இது இந்திய சினிமா வரலாற்றில் ஒரு சாதனை! ரஹ்மான் புதிதாக வந்த ஒரு இசையமைப்பாளர்... அவருக்கு காஸெட் உரிமையில் பாதி தரவேண்டியதில்லை. வெளிநாட்டு காஸெட் உரிமையைத் தரத் தேவையில்லை!

அவரது பாடல்கள் இளைய தலைமுறையைக் கிறுகிறுக்க வைக்கின்றன. தமிழ் தவிர இன்னும் இரண்டு மொழி பிசினஸைப் பரபரக்க வைக்கின்றன என்பது புரிந்ததும் இசைஞானியின் `கேம்ப்'பிலிருந்து பலர் ரஹ்மானுக்குத் தாவினார்கள்!" என்றார் முன்னணி இசைக்கலைஞர் ஒருவர்.

``ரஹ்மானும் ரொம்ப காஸ்ட்லிதான்! ராஜா சாருக்கு ஆகிற ஆர்க்கெஸ்ட்ரேஷன் பில்லைவிட ரொம்ப அதிகமாக சார்ஜ் செய்கிறார் ரஹ்மான். ராஜாவோடு ஒப்பிட்டால் ரஹ்மான் ரொம்ப `ஸ்லோ'! காத்திருந்து காத்திருந்து படப்பிடிப்பைத் தள்ளிப்போட்டவர்கள் நிறைய பேர். அவரது ரீ ரிக்கார்டிங்குக்காக ரிலீஸ் தேதியையே தள்ளிப் போட்டவர்களும் இருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் பண விஷயத்திலும் தயாரிப்பாளர்களை அட்ஜஸ்ட் செய்துகொண்டு, தேவைப்பட்ட நேரத்தில் வேலை செய்து கொடுக்கிற இசையமைப்பாளர்கள் வெற்றி காண ஆரம்பித்தார்கள். இதில் முதல் மார்க் வாங்கியவர் தேவா!

தேவாவின் வெற்றியோடு சிற்பி, மகேஷ், ஆதித்யன், வித்யாசாகர் என்று புதுப்புது இசையமைப்பாளர்கள் சினிமாவுக்கு வந்ததும் இந்த ஆடியோ பிசினஸால்தான்!" என்றார் திரையுலக முக்கியப்புள்ளி ஒருவர்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்
#VikatanOriginals

``ராஜா சார் ஏதோ புதுசாக உரிமையில் பங்கு கேட்கிறார் என்பதுபோல் பேசுவது சரியில்லை! இன்று இப்படிப் பேசும் இதே தயாரிப்பாளர்கள் ஒரு காலத்தில் அவரது தயவுக்காகக் காத்திருந்து, காஸெட் உரிமையில் அதிக பங்கு தரவும் தயாராக இருந்தார்கள். இதை யாரும் மறந்துவிட முடியாது!

தரமான மியூஸிக் வேண்டும் என்று விரும்பும் தயாரிப்பாளர்கள், இப்போதும் இளையராஜாவிடம்தான் இருக்கிறார்கள்! அவரது பாடல்களின் நளினமும், புயல்வேக ரீ ரிக்கார்டிங் தரமும் வேறு யாராலும் தர இயலாதவை. ராஜாவின் இடத்தை யாராலும் அசைக்க முடியாது!" என்று உறுதியாகச் சொல்கிறார் டி.சிவா!

ஆனால், ஜீ.வி-யிடம் கேட்டபோது கிடைத்த பதில்...

``இது ரஹ்மான் சீஸன். ரஹ்மான் கம்ப்யூட்டரிலேயே இசையமைக்கிறா சொல்றவங்களுக்கு அதிலுள்ள கஷ்டம் தெரிவதில்லை. இந்திப் பட உலகைக் கலக்கும் டைரக்டர் சுபாஷ் கெய் போன்றவர்களே ரஹ்மானைத் தேடி வந்து கால்ஷீட் கேட்கிறார்கள் என்றால் அவரது திறமையை நாமே புரிந்துகொள்ளலாமே! என்றார் ஜீ.வி.

``சாக்கரின் சுவை ரொம்ப இனிக்கும். ஆனால், அது நல்லதில்லை. சர்க்கரை எப்பவுமே இனிக்கும். ஆனால், ரொம்பவும் நல்லது. இதில் சாக்கரின் ரஹ்மான். சர்க்கரை இளையராஜா! இளையராஜாவின் காலம் முடிந்துவிட்டது என்று சொல்பவர்களுக்கு என் பதில்... இதுவரை ராஜா சார் மியூஸிக் போட்டது எழுநூறு படங்களில். தோல்வி கண்டவை ஒருசிலதான். அவரை நேற்று வந்தவர்களோடு ஒப்பிடுவதே சரியில்லை!" என்று முடித்தார் கேயார்.

எப்படியோ, நமது இந்தக் கோடம்பாக்க ` ரவுண்ட்-அப்'பில் எல்லாருமே பொதுவாக ஒப்புக்கொண்ட விஷயம் இது:

``தமிழ் சினிமாவில் இளையராஜா இதுவரை அமர்ந்திருந்த இசை சிம்மாசனத்தில் இனி அவர் உட்பட யாருமே உட்காரமுடியாது!"

- நமது நிருபர்
அடுத்த கட்டுரைக்கு