Published:Updated:

"தோல்வி வந்தால், ஓடிப் போகமாட்டேன்!'' - ஜெயலலிதா சிறப்புப் பேட்டி @ 1984 #VikatanVintage

ஜெயலலிதா
ஜெயலலிதா

1980-ல் நான் அரசியலில் ஈடுபட விரும்புகிறேன் என்று மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம் கூறினேன். 'அவசரப்படாதே... நிறையப் படிக்க வேண்டும்' என்றார்.

- மதன் | ஜூனியர் விகடன் 25.1.84 இதழில் இருந்து...

போயஸ் கார்டன் 'வேதா இல்லம்' - ஜெயலலிதாவின் பங்களாவுக்குள் நுழைந்தோம். வீடு அமைதியாக இருந்தது. எதிரே சுவரில் மாலையோடு ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் படம். பக்கத்தில் உள்ள படத்தில் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை, எம்.ஜி.ஆர். சிரித்தவாறு வரவேற்கிறார். வலது பக்கச் சுவரில் ஒரு பிரமாண்டமான படத்தில் பொதுக் கூட்டத்தில் கையை உயர்த்தியவாறு ஜெயலலிதா; இன்னொரு பக்கம் அதே மாதிரி எம்.ஜி.ஆர்...

வரவேற்பறைக்குள் நுழைந்து அமர்ந்தோம். அழகான அறை. மேலே பளீரென்று ஒரு பெரிய ஷாண்ட்லியர், கார்பெட், சோபா, மேஜை விளக்குகள் எல்லாவற்றிலும் ஜெயலலிதாவின் ரசனை பளிச்சிட்டது. ஜெயலலிதா உள்ளே நுழைந்தார். குங்குமச் சிவப்பில் புடவை. அகலப் பொட்டு. அழுத்தி வாரப்பட்ட தலை. ஒரே ஒரு தடிமனான தங்க செயின். இந்த 'சிம்பிள்' இமேஜை வெற்றிகரமாக மெய்ன்டெய்ன் பண்ணுகிறார் ஜெயலலிதா.

அறையில் நுழைந்து ஒரு சோபாவில் அமர்ந்தவர். ''இங்கே இருக்கும் சோபாவில் வந்து அமருங்களேன்... பேச சௌகரியமாக இருக்கும்'' என்றார். இடம் மாறி உட்கார்ந்தபோது நம் பார்வை பக்கத்தில் இருந்த டேப் ரிகார்டர் மீது செல்ல, ''டேப் பண்ணிக்கொள்வதில் ஆட்சேபனை இல்லையே?'' என்றார். ''தாராளமாக!'' என்றோம்.

''பேட்டி போல வேண்டாம்... ரிலாக்ஸ்டாக, சாதாரணமாப் பேசலாம்!'' என்று அவரிடம் பல முறை கேட்டுக்கொண்டோம்.

ஆனால், அது நடக்கவில்லை. காரணம் - ஜெயலலிதா மேடையில் பேசுவதைப் போலவே 'தூய' தமிழில் பேசினார். போன போக்கைப் பார்த்தால், டீச்சர் மாதிரி 'கிளாஸ்' எடுப்பாரோ என்றுகூடப் பயம் ஏற்பட்டுவிட்டது!

''இப்படித் தூய தமிழ்லதான் பேசணுமா?'' என்று கேட்டபோது, ''ஏன்... இப்படிப் பேசுவது நன்றாக இல்லையா?'' என்று கேட்டுப் புன்னகைத்தார். தூய தமிழில் கேள்விக்குக் கச்சிதமாகப் பதில் சொல்வதன் மூலம் அரசியல் சாதுரியத்தை அவர் கற்றுவிட்டது தெரிந்தது.

அதே சமயம் கேள்வி எதற்கும் மறு விநாடியே தங்குதடையின்றிப் பதில் கூறினார். நடுநடுவே உதடுகளில் மட்டும் சிரிப்பு. கண்களில் சிரிப்பு இல்லை.

''திடீர்னு அரசியல்லே நுழைய என்ன காரணத்தினால் முடிவு செஞ்சீங்க..? அது எப்போது..? எம்.ஜி.ஆர். என்ன காரணத்தினால் கவர்ந்தார்?'' என்று கேட்டவுடன், நீண்ட உரை நிகழ்த்தினார் ஜெயலலிதா. அதன் சுருக்கத்தைத்தான் கொடுக்க முடியும்!

''1980-ல் நான் அரசியலில் ஈடுபட விரும்புகிறேன் என்று மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம் கூறினேன். 'அவசரப்படாதே... நிறையப் படிக்க வேண்டும்' என்றார். அதற்கு முன் நான் அரசியலில் ஆர்வம் உடையவளாக, நாட்டு நடப்புகளை உற்றுப் பார்த்து வந்தவள்தான். இன்னும் அரசியலில் தீவிரக் கவனம் செலுத்தினேன். 1982-ல் நான் அரசியலில் ஈடுபட விரும்புவதாக மீண்டும் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம் கூறினேன். அண்ணா தி.மு.க. கோட்பாடுகள் அடங்கிய புத்தகத்தை ஆழ்ந்து படிக்கும்படி கொடுத்தார். படித்தேன். அதற்குப் பிறகு இரண்டு மாதங்கள் கழித்தே அண்ணா தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.

அரசியல் படித்த மாணவி என்ற முறையில், எம்.ஜி.ஆர். என்னைக் கவர்ந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. பட், தட் இஸ் நாட் தி ஒன்லி ரீஸன்... கிராம ராஜ்யம் என்றார் காந்திஜி. விடுதலை பெற்று 36 ஆண்டுகள் ஆகியும், எந்த ஆட்சியும் எம்.ஜி.ஆரைப் போல கிராம மக்களுக்கு, எந்த நன்மைகளும் செய்யவில்லை. வட இந்தியாவில் சில கிராமங்கள், மனிதர்களே வாழ முடியாத அளவுக்கு, குடிதண்ணீர்கூட இன்றிக்கிடக்கிறது. இங்கே எம். ஜி.ஆர். கிராமத் தன்னிறைவுத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறார்... (புள்ளி விவரங்கள் சொல்கிறார்...) இப்போது இலவச சத்துணவுத் திட்டம்... மத்திய அரசு இதற்கெல்லாம் ஒரு உதவியும் செய்யவில்லை. எம்.ஜி.ஆருக்கு நிர்வாகத் திறன் போதாது என்கிறார்கள். நிர்வாக சாமர்த்தியம் உள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் எந்த முதல் அமைச்சர் இப்படிப்பட்ட திட்டங்களைக் கொண்டுவந்தார்? யார் தடுத்தார்கள்? காந்தியடிகளின் கிராம ராஜ்யத்தைப்பற்றி காங்கிரஸ் முதல்வர்களே கவலைப்படாத நிலையில் எம்.ஜி.ஆரின் இந்தச் சாதனைகள் எல்லாம் என்னைக் கவர்ந்தன!''

"தோல்வி வந்தால், ஓடிப் போகமாட்டேன்!'' - ஜெயலலிதா சிறப்புப் பேட்டி @ 1984 #VikatanVintage

கொள்கைப் பரப்புச் செயலாளர்ங்கிற பெரிய பதவிக்கு வரவேற்பு எப்படி? என்றதும், ஜெயலலிதா தனது பணிகளைப்பற்றி விவரித்தார்.

''கட்சியில் சேர்ந்தவுடன் நேரிடையாகவா அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டேன்? சாதாரண உறுப்பினராகத்தான் பணி புரிந்தேன். சத்துணவுக் கமிட்டி ஆலோசனைக் குழுவில் மும்முரமாகச் செயல்பட்டேன். கொள்கைப் பரப்புச் செயலாளராக என்னுடைய பணியைச் செய்வதற்கு, மூத்த தலைவர்கள் அன்புடன் தட்டிக் கொடுக்கிறார்கள். தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் வந்திருக்கிறது. Guide Lines கொடுத்து எங்கள் கட்சியில் ஒழுங்கான முறையில் பிரசாரம் நடப்பதற்கு வழி செய்திருக்கிறேன். கட்சிப் பேச்சாளர்கள் பட்டியலைச் சீர்ப்படுத்தி இருக்கிறேன். இப்போது தலைமைக் கழகம் ஒரு பேச்சாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் உள்ள பேச்சாளர்களைத்தான் கட்சிக்காரர்கள் தாங்கள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு பேச அழைக்க வேண்டும்.

நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

Guide Lines என்றால்..?''

''கட்சியைப் பொறுத்த வரையில் மிஸ்டர் எம்.ஜி.ஆர். சொல்வதுதான் பாலிஸி. அவர் எண்ணங்களைத்தான் நான் மேடைகளில் பேசுகிறேன். ஐ ரிஃப்ளெக்ட் ஹிஸ் திங்கிங்... அவர் நினைப்பதையே நான் பிரதிபலிக்கிறேன்... இதுதான் Guide Lines!''

''இதில் இருந்து கொள்கைகளைப் புரிஞ்சுக்கிட்டு மற்றவர்கள் ஃபாலோ-அப் பண்ணணுமா..?!''

''ஆமாம்! காரணம், சி.எம். எல்லாரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியாது. ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ். பொதுச் செயலாளர் ஊரில் இல்லாமல், திருவண்ணாமலையில் இருப்பார். இது போன்ற சமயங்களில் தலைமைக் கழகத்தில் அவர்கள் சார்பாக நான் இந்தப் பொறுப்பையும் பார்த்துக்கொள்ள நேரிடுகிறது.''

''Guide Line-ஐக் கடைப்பிடிக்காவிட்டால், உங்களுக்கு நியூஸ் வந்துடுமா?''

''வந்துடும்...''

''தென் யு வில் புல் தெம் அப்?''

''யெஸ்..! தவிர, ஜனவரி 25 வீர வணக்க நாள். எந்த ஊரில், எந்தப் பேச்சாளர் என்று குறிப்பிட்டுத் தகவல் அனுப்புவதும் என் பணியே. சொல்லப்போனால்... தொண்டர்களுக்கும் மேலிடத்திற்கும் ஒரு இணைப்புப் பாலமாகத்தான் நான் இருக்கிறேன்.''

எம். ஜி. ஆருக்கு அவ்வப்போது மூக்கை வருடிவிட்டுக்கொள்ளும் மேனரிசம் உண்டு. ஜெயலலிதாவும் பேசும்போது அவ்வப்போது மூக்கை வருடிக்கொள்ளாவிட்டாலும், வருடிவிட்டுக்கொள்வது போல கையை மூக்கின் அருகே கொண்டு செல்கிறார். எப்போதாவது ஒரு விநாடி ரிலாக்ஸ் ஆகி மேலே தலையைத் தூக்கி வாய்விட்டுச் சிரிக்கிறார்.

"தோல்வி வந்தால், ஓடிப் போகமாட்டேன்!'' - ஜெயலலிதா சிறப்புப் பேட்டி @ 1984 #VikatanVintage

''கலைஞர் உங்களைப்பற்றிக் குறிப்பிடாமல் ஒதுக்குகிறாரே.?!''

''முதலில் எல்லாம் திருச்செந்தூரில் நான் பேசியதற்குக் கருணாநிதி பதில் சொன்னார். 'வால் நட்சத்திரம்' என்று என்னைப்பற்றிக் குறிப்பிட்டார். ஆனால், அவரைச் சுற்றி இருப்பவர்கள். 'அவளுக்கு என்ன நீங்கள் பதில் சொல்வது?' என்று சொல்லி இருப்பார்கள். ஆகவே, பிறகு என்னைப்பற்றிக் குறிப்பிடுவதை நிறுத்தி இருக்கலாம். என்னுடைய பேச்சுகளுக்கு, கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவருக்குத் துணிவு இல்லை. மற்றவர்களைவிட்டு... அடியாட்களைவிட்டு... சரியாகச் சொல்வதானால் எடுபிடிகளைவிட்டுப் பதில் தரச் சொல்கிறார். இது கோழைத்தனம். என்னுடைய ஒரு கேள்விக்கும் அவரால் பதில் சொல்ல முடியாது. நான் என்றும் தனிப்பட்ட முறையில் பேசுவதே கிடையாது. தி.மு.க. பேச்சாளர்கள் என்னைப்பற்றித் தனிப்பட்ட முறையில் மிக மட்டமாக Filthy Language இல் பேசுகிறார்கள். மற்ற விஷயங்களை விடுங்கள்... ஒரு பெண்ணைப்பற்றி இந்த அளவுக்குக் கீழ்த்தரமாகப் பேசலாமா..? இதுதான் பண்பா?''

தி.மு.கழகத்தைப் பற்றிய கேள்விக்கு - ''தி.மு.கழகம் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி. இவ்வளவு தோல்விகளை வாங்கிக் கொடுத்த கருணாநிதி, தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு யாரையாவது தலைவராக அமர்த்த வேண்டும்!'' என்றார் ஜெயலலிதா.

''சரி, உங்கள் விஷயம் என்ன? அரசியலில் தோல்வி ஏற்பட்டால், அதைத் தாங்கும் சக்தி உங்களுக்கு இருக்கிறதா?''

''அதற்குக் காலம்தான் பதில் சொல்லும். எந்த மாதிரி சூழ்நிலையிலும் எம்.ஜி.ஆர். தலைமைக்குக் கட்டுப்பட்டே இருப்பேன். Most Loyal தொண்டராகவே எப்போதும் இருப்பேன். தோல்வி வந்தால், ஓடிப் போக மாட்டேன்.''

''கட்சியில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு யார்? ஜனநாயக வழிப்படி அடுத்த தலைமை உருவாவதாகவே தெரியவில்லையே..?!''

''அது உங்கள் எண்ணம். தலைவர்கள் ஏன் இல்லாமல்? நேருவுக்குப் பிறகு யார் என்று கேட்டார்கள். வரவில்லையா? அண்ணாவுக்குப் பிறகு யார் என்றார்கள். எம்.ஜி.ஆர். வரவில்லையா? அவரைத்தான் அண்ணாவின்படி நடப்பவர் என்கிறார்கள் மக்கள். இடையில் கருணாநிதி முதல்வர் ஆனதும் எம்.ஜி.ஆரால்தானே..!''

''ஆங்கிலத்தில் Extra Constitutional Authority என்று சொல்வார்கள்... உதாரணமாக, எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா காங்கிரஸையும் ஆட்சியையும் ஆட்டிப் படைத்த திரேந்திர பிரம்மச்சாரி... அவருடன் உங்களை ஒப்பிடலாமா?''

ஜெயலலிதா ஆத்திரப்படவில்லை. எக்ஸ்பிரஷன் இல்லாத ஒரு எக்ஸ்பிரஷனுடன் முகத்தை வைத்துக்கொண்டு சொன்னார், ''அவருடன் என்னை எப்படி நீங்கள் ஒப்பிட முடியும்? திரேந்திர பிரம்மச்சாரி அட்ரஸ் இல்லாதவர். இப்போது கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். நான் உழைத்தேன்... சினிமாவில் வியர்வையைச் சிந்தி, காலிலும் கையிலும் காயம் பட்டு ரத்தம் சிந்தி உழைத்துச் சம்பாதித்தவள் நான். லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தவள் அல்ல. உண்மையாகத் தொண்டு செய்யும் லட்சியத்துடன் வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் நிழலில் குளிர் காய வந்தவள் அல்ல. எந்த லாபத்திற்காகவும் இங்கே வரவில்லை. பெயரும் புகழும் எனக்கு ஏற்கெனவே நிறைய இருக்கிறது...''

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு