Published:Updated:

`நகைச்சுவை என்றால் உங்களுக்கு வேப்பங்காயா?'- மக்களின் கேள்விகளுக்கு ஜெ. பதில்கள் #VikatanOriginals

ஜெயலலிதா
ஜெயலலிதா ( Photo: Vikatan )

1998-ம் ஆண்டில் `ஜுனியர் விகடன்' மூலமாக மக்கள் கேட்ட கேள்விகளுக்கு, ஜெயலலிதா கொடுத்த சுவாரஸ்ய பதில்கள்...

1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் `ஜுனியர் விகடன்' இதழ் புதுப்பொலிவோடு வெளியானது. அதையொட்டி இதழில் சில சிறப்புப் பகுதிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று, `மக்கள் பேட்டி.' இதில், ஜூவி வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பிரபலங்கள் பதிலளிப்பார்கள். இதற்காக முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா. இந்தப் பகுதிக்காக அவர் அளித்த பதில்கள் தொடர்ந்து நான்கு இதழ்களில் வெளிவந்தன. அவற்றிலிருந்து சில சுவாரஸ்யமான கேள்வி - பதில்கள் #VikatanOriginals-ல் இங்கே...

1998-ம் ஆண்டு ஜூனியர் விகடன் இதழிலிருந்து...

``திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் இருண்டகாலம் என்பது சரியா?"

பொ.பொன்ராஜ் குமார், பொள்ளாச்சி.

``ஜாதி, மத அடிப்படையில் வளர்ந்த மூட நம்பிக்கைகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்னும் இருளை விரட்டி, ஒளி பிறக்கச் செய்ததே திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம்தான்."

``அரசியலில் இருவேறு துருவங்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டும் அரசியல்வாதிகளை வடக்கில் மட்டுமே பார்க்க முடிகிறது. இந்த `கல்ச்சர்' ஏன் தமிழ்நாட்டுக்கு வரவில்லை! நீங்களாவது இதைச் சரிசெய்ய முயற்சி எடுத்திருக்கலாமே?"

குலோத்துங்கன், சென்னை - 47

``தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியலில் இரு துருவங்கள் என்று அழைக்கப்படக்கூடிய இருவரில் ஒருத்தி நான். மற்றொருவர் யார் என்பது உங்களுக்கே தெரியும். இந்த `கல்ச்சரை' தமிழ்நாட்டில் புகுத்த நான் விரும்பினாலும் மூத்த துருவம் அதற்கு இடம் கொடுத்தால்தானே?"

``தங்களுக்கு `நகைச்சுவை' என்றால் வேப்பங்காயா? ஏனென்றால், எப்போதுமே ராணுவக் கட்டுப்பாட்டுத் தனமாகவே பேசுகிறீர்களே?"

ந.வந்தியக்குமரன், சென்னை - 41

``உங்கள் கேள்வியைப் பார்க்கும்போது பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசியதை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு கேட்பதுபோல் தெரிகிறது. இதே பத்திரிகையாளர் சந்திப்பில் பலமுறை நகைச்சுவையாகப் பேசி எல்லோரும் பல சந்தர்ப்பத்தில் சிரித்த நிகழ்ச்சிகளும் உண்டு. ஏனோ தெரியவில்லை. அந்தப் பகுதிகளை வெட்டிவிட்டு, `சீரியஸாக' பதில் அளிக்கும் காட்சிகளையே காட்டுகிறார்கள்."

2.9.1998 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழிலிருந்து...
2.9.1998 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

``உங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் நிரூபணமானால், கட்சித் தலைமையிலிருந்து ராஜினாமா செய்வீர்களா..?"

செங்குன்றம் ஜமால், சென்னை - 52

``அத்தைக்கு மீசை முளைக்கப் போவதுமில்லை. உங்கள் ஆசை நிறைவேறப் போவதுமில்லை."

`` `அ.தி.மு.க தலைவி' ஜெயலலிதா, `தமிழக முதல்வர்' ஜெயலலிதா - என்ன வேறுபாடு..?"

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்

`` `தலைவி' என்பது நிரந்தரம்; `முதல்வர்' என்பது தற்காலிகம்.

``தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய நம்பிக்கை துரோகமென்று எதைக் கருதுகிறீர்கள்..?"

கே.ஸ்டாலின், கள்ளிப்பாடி

``ஒன்றா இரண்டா, வார்த்தைகளில் சொல்ல..."

``தங்களுக்குள் ஒரு `சர்வாதிகாரி' ஒளிந்திருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா..?"

ஆர்.விஷாலி, அசூர்

``எந்த ஒரு பெரிய இயக்கத்தின் தலைவரும் வலிமை உள்ளவராக இருந்தால்தான் தலைமைப் பொறுப்பை வெற்றிகரமாக வகிக்க முடியும். ஒரு ஆண் அப்படி விளங்கினால் `வலிமையானவர்' என்று போற்றுவீர்கள். அவ்வாறே ஒரு பெண் விளங்கினால் அது மட்டும் `சர்வாதிகாரமா?'

``பெற்றோர்கள் உங்களுக்குக் கொடுத்த பொருள்களில், இன்றும் நீங்கள் பாதுகாத்து வரும் பொருள் ஏதும் உண்டா?"

ராஜி, கமுதி

``தெய்வ பக்தி."

``உங்களுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை ஏற்க தகுதி உடையவர்கள் என்று யாரைக் கருதுகிறீர்கள்..? ஏன்..?"

பெ. பச்சையப்பன், கம்பம்

``தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். கழக உடன்பிறப்புகள் அதை முடிவு செய்வார்கள்."

6.9.1998 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழிலிருந்து...
6.9.1998 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

``தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத தாயாரின் நினைவுகள் பற்றி?"

எஸ்.பிரபாகரன், விருத்தாசலம்

``அம்மா இருந்திருந்தால் இந்தக் கேள்விக்கே இடமிருந்திருக்காது. ஏனென்றால், என்னை அரசியலில் நுழைய அனுமதித்திருக்கவே மாட்டார்."

``இது ஒரு ஒப்பீடு அல்ல... இருந்தாலும் பெரும்பாலானவர்கள் கவனித்த விஷயம்... தமிழக முதல்வராக கருணாநிதி பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் அளவுக்கு நீங்கள் முதல்வராக இருந்தபோது சந்தித்ததில்லையே ஏன்? பொதுவாகவே நீங்கள் `மீடியா'விடம் அத்தனை நெருக்கமாக - வெளிப்படையாக இல்லை. இதற்கு என்ன காரணங்கள்?"

டி.சீதாராமன், சென்னை -85

``நான் முதல்வராக இருந்தபோது, கர்ம சிரத்தையுடன் ஆட்சிப் பணியில், நிர்வாகத்தில் தீவிர கவனம் செலுத்தி அதற்காகவே பெரும்பான்மையான நேரத்தை ஒதுக்கியதால் பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் போதிய நேரம் கிடைக்கவில்லை. ஆனால், திரு.கருணாநிதி உண்மையில் ஆட்சிப் பணியைக் கவனிக்காமல், எப்போது பார்த்தாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மக்கள் தொடர்பு சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். அதன்மூலம் உண்மையாக உழைப்பதுபோல் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார். இந்தத் தந்திரம் எனக்குப் புரியாமல் போய்விட்டது. உண்மையாக உழைத்தால் அதற்கு மதிப்பில்லை. ஆனால், உழைப்பதுபோல் நடித்தால் அதற்குத்தான் மதிப்பு என்பதை உங்கள் கேள்வியில் இருந்தே நான் புரிந்துகொண்டேன்."

``பின்வருவனவற்றில் உங்கள் முதல் நாள் அனுபவம் பற்றிக் கூறுங்கள்:

அ. சர்ச்பார்க்கில் பள்ளி மாணவியாக.

ஆ. படப்பிடிப்புத் தளத்தில் நடிகையாக.

இ. அரசியல் பேச்சாளராக, அ.இ.அ.தி.மு.க. மேடையில்.

ஈ. ராஜ்யசபா உறுப்பினராக.

உ. சேவல் சின்னத்தில் வென்ற சட்டமன்ற உறுப்பினராக.

ஊ.தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முதல்வராக.

எ. சென்னை சிறையில் கைதியாக."

கோ.மாதேஸ்வரன், புளியம்பட்டி

அ. பல ஆண்டுகள் அம்மாவைப் பிரிந்து பெங்களூரில் படித்துவந்த நான், சென்னை வந்து நிரந்தரமாக அம்மாவுடன் தங்கி, இங்கேயே சர்ச்பார்க் பள்ளியில் படிக்கப்போகிறோம் என்று உற்சாகம் பிறந்தது.

ஆ. நான் நடித்த முதல் காட்சி அம்மாவுடனேயே படமாக்கப்பட்டதால், வீட்டிலேயே இருப்பது போன்ற ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.

இ. 1982 ஜூன் மாதம் கடலூரில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க மாநில மாநாட்டு மேடையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் `பெண்ணின் பெருமை' பற்றி 30 நிமிடம் உரையாற்றி அனைவரது பாராட்டையும் பெற்றபோது அதைக் கண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அடைந்த பேருவகையைப் பார்த்து நான் பரவசமடைந்தேன்.

ஈ. பேரறிஞர் அண்ணா அவர்கள் அமர்ந்திருந்த அதே இருக்கை எண்: 185 எனக்கு ஒதுக்கப்பட்டது கண்டு பெருமைப்பட்டேன். முதல் நாள் கன்னிப்பேச்சிலேயே ஒட்டுமொத்த மாநிலங்களவை கவனத்தையும் ஈர்த்து, அன்னை இந்திராகாந்தியின் பாராட்டையும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாராட்டையும் பெற்றதில் பேரின்பம் அடைந்தேன்.

உ. முதன்முதலாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரட்டை இல்லைச் சின்னத்தில் வெற்றிபெற முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், புத்தம் புதிய சேவல் சின்னத்தில் நின்று வெற்றிபெற்று சாதனை படைத்துவிட்டோமே என்று எண்ணும்போது சந்தோஷமாக இருந்தது. அதோடு, நானே தேர்ந்தெடுத்த ஒரு புதிய சின்னத்தை 15 நாள்களுக்குள் மக்கள் மனதில் பதியவைத்து தமிழகத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை அடையும் அளவுக்கு மக்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதில் பெருமை பெற்றேன்.

ஊ. முன்பு எப்போதும் இல்லாத வகையில் கருணாநிதி அமலுக்குக் கொண்டுவந்த அரசே சாராயத்தை தயாரித்து நடத்திய மலிவு மதுக்கடைகளை ஒழித்து முதல் கோப்பில் கையெழுத்து போடும்போது கோடிக்கணக்கான தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்துவிட்டோமே என்ற நிம்மதி ஏற்பட்டது.

எ. வாழ்க்கையில் இதுவரை இந்த அனுபவம்தான் நான் பெறவில்லை. இந்த அனுபவத்தையும் பெற்றுவிட்டோமே என்ற பூரிப்பு. என்னைப்போல் எத்தனையோ கழக உடன்பிறப்புகள் இதே சிறைக்கொடுமையை எனக்காகத் தாங்கிக்கொண்டிருக்கும்போது இந்த கஷ்டம் எனக்கு ஒன்றும் பெரிதல்ல என்ற தளராத மன உறுதி ஏற்பட்டது."

அடுத்த கட்டுரைக்கு