Published:Updated:

கருணாநிதி Vs ஆர்.வி: தீராத கோபங்கள்... தீர்க்கப்பட்ட கணக்குகள்! அரசியல் அப்போ அப்படி - 3

அந்த அளவுக்கு ஆர்.வி மீது கருணாநிதி கோபம்கொள்ள என்ன காரணம்..? அப்படி எந்தக் கசப்புணர்வு அவரை இப்படி நடந்துகொள்ள வைத்தது..? இதைத் தெரிந்துகொள்ள 1990-ம் ஆண்டின் ஃப்ளாஷ்பேக்குக்குள் செல்ல வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அது 90-களின் பிற்பகுதி. 1987 முதல் 1992 வரை இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்திருந்த ஆர்.வெங்கட்ராமன் சென்னையில் செட்டிலாகியிருந்தார். சென்னையில் ஒரு முக்கிய வி.ஐ.பி வீட்டுத் திருமணம். `ஆர்.வி’ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட ஆர்.வெங்கட்ராமன் வந்திருந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார். மணமக்களை வாழ்த்திவிட்டுக் கிளம்பிய அவர், அருகிலிருந்த வெங்கட்ராமனைக் கண்டுகொள்ளாமல் `விறுவிறு’வென்று உடன் வந்த கட்சியினருடன் நடக்கத் தொடங்கினார்.

அவருக்குப் பின்னாலேயே, ``மிஸ்டர் கலைஞர்... மிஸ்டர் கலைஞர்...’’ எனக் குரல் கொடுத்தபடியே ஆர்.வி., ஏறக்குறைய ஓட்டமும் நடையுமாக வர, கருணாநிதி காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் நடையைக் கட்டினார். ஆர்.வி கூப்பிட்டது நிச்சயம் அவரது காதில் விழுந்திருக்கும்தான். ஆனால், அவருக்குள் ஆர்.வி மீது இருந்த பல ஆண்டுக்கால கசப்புணர்ச்சிதான், கல்யாண வீடு என்றும் பாராமல் அவ்வாறு நடந்துகொள்ள வைத்தது. காரணம் என்ன என்பது அவருடன் வந்திருந்த உடன் பிறப்புகளுக்கும், அங்கிருந்த சில வி.ஐ.பி-களுக்கு மட்டுமே தெரியும். திருமணத்துக்கு வந்த மற்றவர்களுக்குத் தெரியாது அல்லவா..? அவர்கள், ``என்ன இது... ஜனாதிபதியாக இருந்த ஒருவர் அழைத்தும் கருணாநிதி இப்படித் துளியும் கண்டுகொள்ளாமல் போகிறாரே..?!’’ என ஆதங்கமும் கோபமுமாகக் குமுறித் தீர்த்தனர்.

கருணாநிதி - ஆர்.வி.
கருணாநிதி - ஆர்.வி.
ஆர்.வி மீதான கருணாநிதியின் கசப்புணர்வு வெளிப்பட்ட இன்னொரு நிகழ்வும் உண்டு

. குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிவடைந்ததும், தனது ஓய்வு காலத்தை சென்னையில் கழிக்க எண்ணி சென்னை வருகிறார் ஆர்.வி. இதற்காக அப்போது ஆட்சியிலிருந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு, அவருக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள வி.வி.ஐ.பி பிரமுகர்களுக்கான பகுதியில் `பொதிகை' என்ற பங்களாவை ஒதுக்குகிறது.

இத்தனைக்கும் சென்னை கோட்டூர்புரத்தில், ஆடம்பரமான பகுதியில் வெங்கட்ராமனுக்குச் சொந்தமாக மூன்று வீடுகள் இருக்கின்றன. ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக வெங்கட்ராமனுக்கு கிரீன்வேஸ் சாலை வீடு வழங்கப்படுவதாகக் கூறிய தமிழக அரசு, அந்த வீட்டை அழகுப்படுத்தவும் புதுப்பிக்கவும் பொதுப்பணித்துறை தரப்பிலிருந்து 15 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

இதற்கு தி.மு.க மற்றும் திராவிடர் கழகம் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதி, `இது வீண் செலவு’ என்றும், `பாதுகாப்புதான் பிரச்னை என்றால், வெங்கட்ராமனுக்குச் சொந்தமான வீடுகளில் பாதுகாப்பை பலப்படுத்தலாம்’ என்றும் கூறி அறிக்கை வெளியிட்டார்.

அந்த அளவுக்கு ஆர்.வி மீது கருணாநிதி கோபம்கொள்ள என்ன காரணம்..? அப்படி எந்தக் கசப்புணர்வு அவரை இப்படி நடந்துகொள்ள வைத்தது..? இதைத் தெரிந்துகொள்ள 1990-ம் ஆண்டின் ஃப்ளாஷ்பேக்குக்குள் செல்ல வேண்டும்.

இப்போது பாஜக... அப்போது காங்கிரஸ்!

இன்று புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து போனதன் பின்னணியில், இதற்கு முன்னர் ஆளுநராக இருந்த கிரண் பேடியையும், தற்போதைய தற்காலிக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனையும் கைகாட்டுகிறது காங்கிரஸ். ஆனால், மத்தியில் காங்கிரஸ் கோலோச்சிய காலத்திலும் இதே கூத்துகள்தானே அரங்கேறின?

``ஆட்டுக்கு தாடி எதற்கு... நாட்டுக்கு ஆளுநர் எதற்கு..?" என அண்ணா காலத்திலிருந்து ஆளுநர் பதவிக்கு எதிராகத் தமிழகம் எதிர்ப்புக்குரல் கொடுத்துவருகிறது. ஆனாலும், ஆளுநர்கள் என்றாலே மத்திய அரசின் ஆட்சிக் கவிழ்ப்பு ஏஜென்ட்டுகள் போலச் செயல்படுபவர்களாகத்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள் என்பதுதான் இந்தியா முழுமைக்குமான குற்றச்சாட்டாக இருக்கிறது. இதில் வெகு சிலர் விதிவிலக்காக இருந்திருக்கிறார்கள்.

சுர்ஜித் சிங் பர்னாலா
சுர்ஜித் சிங் பர்னாலா

அப்படியான விதிவிலக்கு ஆளுநராகச் செயல்பட்டவர்தான் சுர்ஜித் சிங் பர்னாலா. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் 1977-ல் ஆட்சியை இழந்ததிலிருந்து 13 ஆண்டுக்கால வனவாசத்துக்குப் பின்னர், வாராது வந்த மாமணியாக 1989-ல் ஆட்சி அதிகாரம் மீண்டும் கருணாநிதி கைக்கு வந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 இடங்களில் தி.மு.க 142 இடங்களில் வெற்றிபெற்று, கருணாநிதி முதல்வரானார்.

எமர்ஜென்சியில் ஆட்சியை இழந்தது போன்று இந்த முறை எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் மிகுந்த கவனமாக ஆட்சித் தேரை செலுத்திக்கொண்டிருந்தார் கருணாநிதி. ஆனால், கருணாநிதி அப்படி நினைத்தாலும், காலத்தின் கணக்கு வேறாக இருந்தது.
ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், அவர் மீதான போஃபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இதனால், 1989-ம் ஆண்டு இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

தேதி குறிக்கப்பட்ட தி.மு.க ஆட்சி!

மத்தியில் தேசிய முன்னணி வி.பி.சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. பா.ஜ.க வெளியிலிருந்து ஆதரவளித்தது. இந்தச் சமயத்தில்தான், தமிழகத்தில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள், கருணாநிதி ஆட்சிக்கு வில்லங்கத்தைக் கொண்டு வந்து சேர்த்தன.

கருணநிதி
கருணநிதி

ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை நாடு திரும்பியது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, ``இலங்கையில் என் தமிழ் மக்களைக் கொன்றுவிட்டு வரும் இந்திய ராணுவத்தை நான் வரவேற்கச் செல்ல மாட்டேன்" என்று கூறி, வரவேற்க மறுத்துவிட்டார். இதை அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிடித்துக்கொண்டு, தி.மு.க அரசுக்கு எதிராகப் பெரும் பிரச்னைகளைக் கிளப்பின.

இந்தப் பிரச்னையின் தீவிரம் அடங்குவதற்குள், அடுத்து நடந்த நிகழ்வுதான் கருணாநிதி ஆட்சிக்கு மீண்டும் நாள் குறிக்கவைத்தது.

அது நாள் வரை டெலோ அமைப்பை ஆதரித்துவந்த தி.மு.க., அவ்வமைப்பின் தலைவர் சபாரத்தினம் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டப் பின்னர், ஒருகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. இதனால் கடும் எதிர்ப்புகளை அந்தக் கட்சி எதிர்கொள்ள நேரிட்டது. இந்தநிலையில்தான், இலங்கைத் தமிழ் போராளிக் குழுக்களுக்கு இடையேயான மோதலின் எதிரொலியாக, சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட 15 பேர் 19.6.90 அன்று, புலிகள் இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அவ்வளவுதான், அ.தி.மு.க உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் தி.மு.க-வுக்கு எதிராக அணி திரண்டன. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்ட கருணாநிதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தின. பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவோ உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார். இங்கு இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவளித்த பா.ஜ.க, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த முடிவெடுத்ததைத் தொடர்ந்து தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அதையடுத்து மத்திய அரசு கவிழ்ந்தது. உடனே, தேசிய முன்னணியில் இடம்பெற்றிருந்த சந்திரசேகர் தலைமையில் அரசு அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடிபணிய மறுத்த பர்னாலா... ஆட்டத்தை முடித்த ஆர்.வி!

அதற்குப் பிரதிபலனாக தமிழகத்தில் தி.மு.க அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தியது. 1990-ம் ஆண்டு, ஜூலை மாதம் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசிய ராஜீவ் காந்தி, ``தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், தி.மு.க-வுக்கும் இடையே கூட்டு இருக்கிறது. முதலமைச்சரின் ஆசீர்வாதத்தோடு தி.மு.க ஏற்கெனவே ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது. கடலுக்கு அப்பாலிருந்து அதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. புலிகள் இயக்கத்தின் முயற்சி வெற்றி பெற்றால், இங்கே தி.மு.க-வினர் பிரிவினை இயக்கத்தைத் தொடங்குவார்கள் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன" என தி.மு.க-வுக்கு எதிராகத் திரி கொளுத்தினார்.

ஆர்.வி.
ஆர்.வி.

அந்தச் சமயத்தில் குடியரசுத் தலைவராக இருந்தவர்தான் ஆர்.வெங்கட்ராமன். தி.மு.க அரசுக்கு எதிராக வி.பி.சிங் ஆட்சியில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட பர்னாலாவை டெல்லிக்கு அழைத்து அறிக்கை கொடுக்குமாறு கேட்டபோது, அப்படி அறிக்கை அளிக்க பர்னாலா மறுத்துவிட்டார். மேலும், வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் வெங்கட்ராமனைச் சந்தித்து `ஜனநாயக விரோதமாக நடவடிக்கை எடுக்காதீர்கள்’ என்று கேட்டுக்கொண்டனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்காரரான வெங்கட்ராமன் எப்படி தி.மு.க-வுக்கு ஆதரவாக நடந்துகொள்வார்? பர்னாலா அறிக்கை அளிக்க மறுத்தபோதிலும், அரசியல் சட்டம் 356-வது பிரிவில் இடம்பெற்ற 'Otherwise' (ஆளுநர் அறிக்கை அடிப்படையிலோ அல்லது வேறு வகையிலோ) என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தி, தி.மு.க அரசைக் கலைத்தார். `தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அதற்கு தி.மு.க ஊக்கமளிக்கிறது' என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 1989 நவம்பரில் ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் ஆட்சி, 1991 ஜனவரியில் கலைக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்தார் ஆளுநர் பர்னாலா. மாநில அரசுமீது ஆளுநர் அறிக்கை கொடுக்காமல் ஆட்சி கலைக்கப்பட்டது இதுவே முதன்முறை.

தீராத கோபங்கள்... தீர்க்கப்பட்ட கணக்குகள்

மேற்கூறிய இந்த நிகழ்வுதான், ஆர்.வி மீதான கருணாநிதியின் தீரா கசப்புக்குக் காரணம். அதேசமயம், `வெங்கட் ராமனுக்கும் கருணாநிதியுடன் தீர்க்கப்படாத கணக்கு ஒன்று இருந்தது. அதை ஆட்சிக் கலைப்பில் காட்டி, கணக்குத் தீர்த்துக்கொண்டார்’ என்ற ஒரு பேச்சும் தி.மு.க வட்டாரத்தில் உண்டு.

``1977, ஜூலை முதல் குடியரசுத் தலைவராக பதவிவகித்த நீலம் சஞ்சீவ ரெட்டியின் பதவிக் காலம் 1982 ஜூலையில் முடிவடையவிருந்தது. அதற்கு முன்னதாக, அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் தீவிரமடைந்திருந்தன. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அழைப்பை ஏற்று, டெல்லி சென்றார் கருணாநிதி. அடுத்த குடியரசுத் தலைவராக நரசிம்ம ராவ் அல்லது ஆர்.வெங்கட்ராமன் இரண்டு பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது இந்திராவின் விருப்பமாக இருந்தது.

இந்திரா காந்தி, கருணாநிதி
இந்திரா காந்தி, கருணாநிதி

ஆனால், கருணாநிதி அந்த யோசனையை ஏற்க மறுத்தார். ஆந்திராவைச் சேர்ந்த நரசிம்மராவ் ஏற்கெனவே பதவியில் இருந்துவருபவர். மீண்டும் ஆந்திராவைச் சேர்ந்தவர் வந்தால், தேவையில்லாமல் வடநாட்டவர்களின் ஒட்டு மொத்த வெறுப்புக்கும் ஆளாக நேரிடும். அதேபோல ஆர்.வெங்கட்ராமன் வருவதிலும் கருணாநிதிக்குத் துளியும் விருப்பமில்லை. அதற்கான காரணம் 1980 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க-வின் தோல்விக்கு ஆர்.வெங்கட்ராமன் பேசிய பொறுப்பற்ற பேச்சுகளும் ஒரு காரணம் என்று கருணாநிதி கருதினார். ஆனால், அதைக் காரணமாக இந்திராவிடம் சொல்லாமல், `பிரதமராகிய நீங்களும் உயர்சாதி, ஆர்.வெங்கட்ராமனும் உயர் சாதியாக இருப்பதால் தேவையற்ற விமர்சனங்கள் எழும். எனவே, பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்த, சிறுபான்மை மதத்தையும் சேர்ந்தவராகவும் இருக்கும் கியானி ஜெயில்சிங்கை குடியரசுத் தலைவர் ஆக்கலாம்' எனக் கூறினார்.

இந்திராவும் அதை ஏற்றுக்கொண்டார். அவரை தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளும் ஆதரித்த நிலையில், அவர் ஜனாதிபதியானார். இந்த விஷயம் பின்னர் ஆர்.வெங்கட்ராமனுக்கு எப்படியோ தெரியவந்திருக்கலாம். அது அவரது மனதில் நீங்கா வடுவாக இருந்தது. அப்போதிருந்தே அவருக்கு கருணாநிதி மற்றும் தி.மு.க மீது ஏற்பட்ட வெறுப்புதான், தி.மு.க ஆட்சிக் கலைப்புக்கு கூடுதல் காரணமாக அமைந்தது. இதன் மூலம், தனது எட்டு ஆண்டுக்கால மனக் காயத்தை ஆற்றிக்கொண்டார் ஆர்.வி" என்பதுதான் அப்போதைய தி.மு.க-வினரிடையேயான பேச்சாக இருந்தது.

இதோ... இப்போது புதுச்சேரியில் நாராயணசாமியின் ஆட்சிக் கலைப்பின் பின்னணியிலும், பல பழிதீர்க்கும் படலங்கள் இருக்கலாம்... யார் கண்டது?

தொடரும்...

பகுதி 2, படிக்க...

அரசியல் அப்போ அப்படி: பக்தவத்சலத்துக்கு எருக்கன்சேரி; கருணாநிதிக்கு சர்க்காரியா; எம்.ஜி.ஆருக்கு ரே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு