Election bannerElection banner
Published:Updated:

``எந்தக் கஷ்டமும் தொடர்ந்து இருந்தால் பழகிவிடும்!" - மாதுரி தீட்சித் 90'ஸ் எக்ஸ்க்ளூசிவ் #VikatanOriginals

மாதுரி தீட்சித்
மாதுரி தீட்சித் ( #VikatanOriginals )

இன்று, மாதுரி தீட்சித்தின் பிறந்தநாள். அதையொட்டி, 1996-ல் வெளிவந்த மாதுரி தீட்சித்தின் பிரத்யேகப் பேட்டி இங்கே... #VikatanOriginals-ல்...

17/11/1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...

சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஓவியர் எம்.எஃப். உசேனில் தொடங்கி நேற்று பிறந்த அரை டிரௌசர் வரை ரசித்துக்கொண்டிருக்கிற நடிகை... மின்னல் வேக நாட்டியத் தாரகை, மாதுரி தீட்சித்.

மிகச் சமீபத்தில், `ஸ்டார் டஸ்ட்' பத்திரிகை இவரை எடுத்த சிறப்புப் பேட்டியின் தொடக்கத்தில் இப்படி குறிப்பிட்டது -

``ஒவ்வொரு வருடமும் இந்திப் பட உலகத்துக்கு இளசான புதுமுகங்கள் படை ஒன்று நுழையும்போது, அவர்களுடன் சளைக்காமல் ஈடுகொடுத்துத் தன் பொசிஷனைக் காப்பாற்றிக் கொள்கிறார் மாதுரி. தனது ஸ்டைல், அணுகுமுறை, நடிப்பாற்றல் போன்றவற்றைக் கூர்தீட்டிக்கொண்டு புத்தம் புதியதொரு பொலிவுடன் ஜொலிக்கிறார். இந்திப் பட உலகில் இவர் ராணித் தேனீ!"

கடந்த பத்து வருடங்களாக ஃபீல்டில் இருக்கிறார் மாதுரி. ஆனால், 1996-ம் வருடம் போல் அவருக்கு மிகவும் மோசமான வருடம் இதுவரை வந்ததில்லை என்றே பம்பாய் பட உலகம் சொல்கிறது.

பம்பாய் பத்திரிகைகளின் அட்டையைப் புது வரவுகள் ஆக்கிரமிப்பு செய்ய, உள்பக்கங்களுக்குத் தள்ளப்பட்டார் மாதுரி! அதன் விளைவு - மிக கவனமாகத் திட்டமிட்டு, முழுவீச்சுடன் புதியதொரு போராட்டத்துக்கு அவர் தயாரகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருங்கியவர்கள்.

``இது உண்மைதானா மாதுரி?" - மும்பை நட்ராஜ் ஸ்டூடியோவில் `மஹாந்தா' பட ஷூட்டிங்கில் சஞ்சய் தத்துக்கு ஜோடியாக நடித்துக்கொடிருந்த மாதுரியிடம் கேட்டோம்.

``யெஸ்! உண்மையை ஒப்புக்கொள்வதில் என்ன தப்பு? இப்போது எனக்கு போட்டி பலமாக இருக்கிறது. அதனால் என் போராட்டமும் பலமாகத்தான் இருக்க வேண்டும். ஆஃப்டர் ஆல் நானும் ஒரு நடிகைதானே, கடவுள் இல்லையே!" என்று சிரித்தார்.

தொடர்கிறது அவரது பேட்டி...

``நம்பர் ஒன் ஹீரோயின் என்ற நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதா? அது உங்களைவிட்டு நழுவுகிறது என ஒப்புக்கொள்கிறீர்களா?"

``நான், கடந்த சில மாதங்களில் வரிசையாக `அவுட்-டோர்' ஷூட்டிங் போய்வருகிறேன். மும்பையில் அதிகம் இருக்க முடிவதில்லை. விளைவு, பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, போட்டோ செஷனுக்கு நேரம் ஒதுக்கவோ முடியாமல் போய்விட்டது. உடனே, `மாதுரிக்கு முக்கியத்துவம் குறைகிறது. பத்திரிகைகள் அவரைப் புறக்கணிக்கின்றன' என்று பேச்சு எழுகிறது. ஒருசிலர், `மாதுரியை தோல்வி காம்ப்ளெக்ஸ் வாட்டுகிறது. அவர் தன்னை ஒரு கூட்டுக்குள் அடைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். அதனால் பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதில்லை' என்றுகூட பேசுகிறார்கள். இதில் எதுவுமே நிஜமில்லை!"

17/11/1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
17/11/1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

``பலரும் பாலிவுட்டிலிருந்து எங்கள் கோடம்பாக்கத்துக்கு வருகிறார்கள். நீங்கள் ஏன் இன்னும் வரவில்லை?"

``நல்ல அற்புதமான டைரக்டர்கள், நடிகர்கள் தமிழில், தென்னிந்தியாவில் இருக்கிறார்கள். எனக்கும் அங்கே வந்து நடிக்க ஆசைதான். வாய்ப்பு வந்தால் பார்ப்போம். `கூடாது' என்ற சபதமெல்லாம் சத்தியமாக இல்லை!"

``ஓவியர் எம்.எஃப். உசேன் உங்களை நாயகியாக வைத்து இயக்கும் `கஜகாமினி' படம் எந்த நிலையில் இருக்கிறது?"

``இன்னும்கூட டிஸ்கஷன் நிலையில்தான் இருக்கிறது. படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. அற்புதமான கலைப்படமாக அந்தப்படம் வெளிவரும். பேசப்படுவதாக அமையும்!"

``நீங்களும் ஊர்மிளாவும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறீர்கள் போலிருக்கிறது. இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் மூலம் உங்களுக்கு முக்கியத்துவம் குறையாதா?"

``அப்படியில்லை. இன்னும் அற்புதமாக நம் திறமையை வெளிப்படுத்த - ஓர் ஆரோக்கியமான - போட்டி உணர்வுதான் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டில் ஏற்படுகிறது. ஸோ... அது ஒரு வகையில் நல்லதே!"

மாதுரி தீட்சித்
மாதுரி தீட்சித்
#VikatanOriginals

`` எப்போது திருமணம்?"

``தகுதியான சரியான நபரைச் சந்திக்கும்போது அவசியம் திருமணம் செய்துகொள்வேன்."

``காதல் கல்யாணமா?"

``அதெல்லாம் எதற்கு? நிச்சயமாக ரகசியத் திருமணமாக இருக்காது. ஊரறிய, உலகறிய அழைப்பு விடுத்து என் கல்யாணம் நடக்கும்!"

``கிசு கிசுக்கள் உங்களைப் பாதிக்கிறதா?"

``சஞ்சய் தத்துடன் சேர்த்து என்னைப் பேசினார்கள். இப்போது அவருடன் இன்னொரு படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறேன். வதந்திகளைக் கண்டு ஆரம்பத்தில் மனசுக்கு கஷ்டமாக இருக்கும். ஆனா, எந்தக் கஷ்டமும் வாழ்க்கையில் தொடர்ந்து இருந்தால் பழகிவிடும் அல்லவா? அந்த மாதிரிதான், கிசுகிசுக்கள் பற்றி இப்போதெல்லாம் நான் கவலைப்படுவதில்லை!"

``மீண்டும் பேட்டியின் முதல் கேள்விக்கே வருகிறோம். நம்பர் - ஒன் நாற்காலிக்கு உங்கள் போட்டியாக இன்றைய புதிய ஹீரோயின்களில் யாரை அடையாளம் காண்கிறீர்கள்?"

இந்தக் கேள்விக்கு வழுக்கவே இல்லாமல் பளிச்சென்று மாதுரி பதில் தந்தார் -

`` சந்தேகமின்றி `கஜோல்' பெயரைத்தான் சொல்வேன்! பார்த்த மாத்திரத்திலேயே உற்சாகம் தொற்றிக்கொள்ளும் முகம். நல்ல நடிப்பு. மிக அழகான உடல் அமைப்பு. அவர் மளமளவென்று உயர்ந்து வருவார் என நினைக்கிறேன்!"

நிருபர்: ரமேஷ் பாலசுப்ரமணியன்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு