Published:Updated:

``எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம், என் எதிரிக்குக்கூட ஏற்படக்கூடாது!" - தேவா உருவான கதை #VikatanOriginals

தம்பிகளுடன் தேவா
தம்பிகளுடன் தேவா

சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான காலத்தில் தான் சந்தித்த அவமானங்களையும், சவால்களையும் பகிர்ந்து கொள்கிறார் `தேனிசைத் தென்றல்' தேவா. 1997-ம் ஆண்டு விகடனுக்கு அவர் அளித்த நேர்காணல்... #VikatanOriginals-ல்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

06/04/1997 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

இசையமைப்பாளர் தேவா, தான் வளர்ந்த கதையைச் சொல்கிறார் -

``ஆர்மோனியம் மட்டும்தான் வாசிக்கத் தெரியும். ஆனா, பெரிய இசையமைப்பாளரா வரணும்னு ஆசைப்பட்டேன். இதை ஒரு பேராசையா அப்ப நான் நினைக்கலே... பதினாலு வருடப் போராட்டம்... 1976-ல், டி.வி.யில் ஃப்ளோர் அசிஸ்டென்டாக நானூற்று அறுபது ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தப்பவும் இந்த ஆசை போகலே... முதல் தேதி செக் கொடுப்பாங்க. டி.வி. ஸ்டேஷனிலிருந்து சைக்கிளில் பாங்குக்குப் போய், புத்தம் புது நோட்டுகளாக வாங்கி, அதில் அறுபது ரூபாய் மட்டும் எனக்கு வைத்துக்கொண்டு, நானூறு ரூபாயை மனைவிகிட்டே கொடுத்துடுவேன்!

1978-ல் ஒருநாள் டி.வி. ஸ்டேஷனுக்கு என் நண்பன் கவி வந்தான். கோடம்பாக்கம் கவரைத் தெருவில், ஒரு தயாரிப்பாளரைச் சந்திக்க அழைத்தான். டி.வி. ஸ்டேஷனிலிருந்து மதியம் இரண்டு மணிக்கு வெயிலில், சைக்கிளில் கவியை ஏற்றிக்கொண்டு நான் புறப்பட்டேன். `அத்தான்' என்ற பெயரில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தான் கவி.

`உங்களுக்கு இசையமைப்பாளராக சான்ஸ் தர்றேன். ஆனா, ஒரு கண்டிஷன்... கொஞ்ச நேரத்தில் ஒரு பாடகர் மோட்டார் பைக்கில் வருவாரு. அவர் எப்படிப் பாடினாலும் பிரமாதமா இருக்குனு சொல்லணும்' என்றார் தயாரிப்பாளர். `சரி, நமக்குத்தான் இசையமைப்பாளர் சான்ஸ் கிடைக்குதே... அதுதானே முக்கியம்'னு இருந்தேன். மோட்டார் பைக் நபர் வந்தார். பாட்டுப் பாடினார். சந்திரபாபு பாடிய `நான் ஒரு முட்டாளுங்க' பாட்டை முடிஞ்ச அளவுக்குக் கொலைபண்ணாரு. `எதுக்குடா இப்படி ஒரு ஆளுக்கு வக்காலத்து வாங்கறாங்க'னு பார்த்தேன்... அப்புறம்தான் தெரிஞ்சது, அந்த ஆளுக்கும் அதான் முதல் பாட்டு சான்ஸ். அவர் செலவில்தான் முதல் பாட்டையே `ரிக்கார்டிங்' செய்யப் போறாங்கனு. பாட்டை எழுதினது தயாரிப்பாளர்!

ரிக்கார்டிங் ஆரம்பமாச்சு. `நான் ஏன் பிறந்தேன்..? ஆணிலும் நான் பாதி... பெண்ணிலும் நான் பாதி... புரியாத புதிர்தானே என் பிறவி'னு பாட்டில் எல்லா வரியுமே பயங்கரமான அபசகுனம்... `என்னடா, நம்ம முதல் பாட்டே இப்படி அமைஞ்சு போச்சே'னு ஒரு நெருடல் இருந்தது. இருந்தாலும், `எப்படியோ... சினிமாவுக்குள்ளே புகுந்துட்டோம்டா சாமி'னு தாங்க முடியாத சந்தோஷம்!

06/04/1997 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
06/04/1997 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

அதுவரை அட்வான்ஸ் எதுவும் எனக்குக் கொடுக்கலை. தீபாவளிக்கு ஒருநாள் முன் தருவதாகச் சொல்லி, வரச் சொல்லியிருந்தார் தயாரிப்பாளர். சைக்கிளை எடுத்துக்கிட்டுக் கவரைத் தெருவை நோக்கிப் புறப்பட்டேன். கிடைக்கிற அட்வான்ஸில் பாதியை வடபழனி முருகன் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு, மீதமுள்ள பணத்தில் புகாரி ஓட்டலில் போய் ஆனந்தமாகச் சாப்பிடலாம்னு திட்டம்!

தயாரிப்பாளர் தடபுடலாக `வாங்க, வாங்க'ன்னார்! பர்ஸைத் திறந்து, இரண்டு எட்டணாவை எடுத்து எனக்கு ஒரு எட்டணா, என் ஃப்ரெண்ட் கவிக்கு ஒரு எட்டணாவைக் கொடுத்து, `இப்ப திருப்திதானே...?" அப்படின்னாரு. நாங்களும் சிரிச்சுக்கிட்டே அதை வாங்கிக்கொண்டோம். வேண்டிக்கிட்ட மாதிரியே, வடபழனி முருகன் கோயிலுக்குப் போய் எட்டணாவை உண்டியலில் போட்டேன். கவிக்குக் கொடுத்த எட்டணாவுக்குப் பக்கத்துக்குக் கடையில் டீ குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இடைவெளியில் `பாடும் பறவைகள்' படத்துக்கு இசையமைக்க வாய்ப்புக் கிடைத்தது. முதல் நாள் டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.ஜானகி பாடினாங்க. `ஜேஜே' என்று ரிக்கார்டிங் ஆரம்பமாகி, ரெண்டு பாட்டுக்கூடப் பதிவாயிடுச்சு. `கூட வந்த ஆர்க்கெஸ்ட்ராவுக்குப் பணம் செட்டில் பண்ணனும்'னு தயாரிப்பாளர்களைத் தேடினால், பையன் வந்து சொல்கிறான். - `அவங்க கிளம்பிப் போய் ரொம்ப நேரமாச்சுங்க'னு! என் தம்பிங்க நாலு பேரும் அங்கேயே கதறி அழுதுட்டானுங்க. நானும் என் சகோதரர்களும் கோடம்பாக்கத்திலிருந்து நடந்தே மயிலாப்பூருக்கு வந்து சேர்ந்தோம்.

`எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம், என் எதிரிக்குக்கூட ஏற்படக்கூடாது' என்று என் இதயதெய்வம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியிடம் வேண்டிக்கிட்டேன்.

தம்பிகளுடன் தேவா
தம்பிகளுடன் தேவா

அதுக்கப்புறம்தான் பக்திப் பாடல்களில் முழுக்கவனம் செலுத்தினேன். சுமார் இருநூற்றைம்பது பக்திப் பாடல்களுக்கு நான் மியூஸிக் போட்டேன். தொழிலுக்காக இல்லாம, நிஜமாவே அன்னிக்கு நான் மனசு உருகப்பாடிய இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் பாடல்கள்தான் எனக்கு இன்று இந்த வாழ்க்கை கிடைக்கக் காரணம்னு நினைக்கிறேன்!"

நிருபர்: செல்லா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு