Published:Updated:

"இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா... அதை எதிர்க்கப்போறவன் நான்தானே?'' - பெரியார் #VikatanVintage

பெரியார்
பெரியார்

பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி, இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?''

- சாவி | ஆனந்த விகடன் | 1965

திருச்சி பெரியார் மாளிகைக்குள் காலடி எடுத்துவைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், ''ஐயா உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கனு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க'' என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார்.

உள்ளே... கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியாரைப் பார்த்ததும், ''வணக்கம் ஐயா!'' என்று கும்பிடுகிறோம்.

''வாங்க... வாங்க, ரொம்ப சந்தோசம்...'' எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே ''இப்படி உட்காருங்க'' என்கிறார்.

சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். அந்த முனைகள் இரண்டும் அவ்வப்போது தளர்ந்துபோகும் நேரங்களில் கைகள் தாமாகவே அவற்றை இறுக்கிவிடுகின்றன. நாய் ஒன்று வீட்டுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் அலைகிறது, சிற்சில சமயங்களில் பலமாகக் குரைத்து வீட்டையே அதிரவைக்கிறது. பெரியாரின் பேச்சு எதனாலும் தடைபடவே இல்லை.

''ராஜாஜியோடு தங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது எப்போது?''

''அதுவா? அந்தக் காலத்துலே ஈரோட்லே பி.வி.நரசிம்மய்யர்னு எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் ஒருத்தர் இருந்தார். ஈரோட்லே நான் சேர்மனா இருந்தப்போ, குடியானவங்க வழக்கெல்லாம் என்கிட்டே நிறைய வரும். அந்த கேஸ் எல்லாம் அவருக்கு அனுப்புவேன். யாருக்கு? நரசிம்மய்யருக்கு. நான் சேர்மனா வர்றது சில பேருக்குப் பிடிக்கலே. பொறாமையினாலே எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதிப் போட்டாங்க. சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி எலெக்ஷன்ல ஜெயிச்சதும் நேராப் போயி சேர்ல உட்கார்ந்துட முடியாது. கலெக்டர் சிபாரிசு செய்யணும்னு வெச்சிருந்தாங்க. அந்தச் சமயத்துலே சர் பி.ராஜகோபாலச்சாரிங்கிறவர் சப்-கலெக்டரா இருந்தார். அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியுமானதாலே, பெட்டிஷனைப் பொய்னு தள்ளிட்டு என்னை சேர்மனாக்கிட்டார்.''

"இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா...  அதை எதிர்க்கப்போறவன் நான்தானே?'' - பெரியார் #VikatanVintage

''ஆமாம்; ராஜாஜி உங்களை எதுக்கு காங்கிரஸுக்கு இழுத்தார்?''

''ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு எதிரா காங்கிரஸ் வளர்றதுக்கு காங்கிரஸ்ல நான்பிராமின்ஸ் இருக்காங்கன்னு காட்டிக்க வேண்டியிருந்தது.''

''உங்களோடு வேறு யாரும் இல்லையா?''

''இருந்தாங்க... திரு.வி.க-வும் வரதராஜுலு நாயுடுவும் இருந்தாங்க. எங்க மூணு பேரையும்தான் எந்தக் கூட்டத்துலேயும் முதல்லே பேச விடுவாங்க. வரதராஜுலு நாயுடு பேச்சில் வசவு இருக்கும். திரு.வி.க. பேச்சு தித்திப்பா இருக்கும். நல்ல தமிழ் பேசுவார். என் பேச்சில் பாயின்ட் இருக்கும். பாயின்ட்டாப் பேசி கன்வின்ஸ் பண்ணுவேன். நாங்க மூணு பேரும் பேசினப்பறம்தான், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரி எல்லாம் எழுந்து பேசுவாங்க...''

'காந்தியை நீங்க சந்திச்சிருக்கீங்களா?''

''எங்க வூட்டுக்கே வந்து தங்கியிருக்காரே. சட்டசபைப் பிரவேசத்துக்கு காங்கிரஸை அவர் அனுமதிச்சபோது நான் 'கூடாது'னு தடை பண்ணினேன்; எதிர்த்தேன்; வாதாடினேன். அப்ப அவர் சொன்னார்: ''நீ என்ன இப்படிச் சொல்றே? மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் இவங்களையெல்லாம் நினைச்சுப் பாக்கணும். அவங்களையெல்லாம் விட்டுட முடியுமா? உனக்கு வேணாம்னா, பேசாம இருந்துக்கோ''ன்னாரு. ஏன் அப்படிச் சொன்னாருங்கிற ரகசியம் எனக்குத்தான் தெரியும். என்ன ரகசியம்னா, காங்கிரஸ், சட்டசபைக்குப் போகலேன்னா ஜஸ்டிஸ் கட்சியே நிலைச்சு இருந்துடுங்கிற பயம்தான்!''

''அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீங்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?''

காதை வலது கையால் அணைத்து நான் சொல்வதை உற்றுக் கேட்டுக்கொண்ட பெரியார் கோபத்தை வெளியே காட்டாமல், ''அப்படியா? மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்கறேன். சொல்லுங்கோ?''

''இந்திதான் ஆட்சி மொழியா வந்துட்டுதே...''

''எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலீஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா, பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி, இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?''

''ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?''

''நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே விழுவானா? அப்படியே ஒருவேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா... அதை எதிர்க்கப்போறவன் நான்தானே?''

''மத்திய சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும், உத்தியோகத்துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே...''

''படிச்சிட்டுப்போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப்போறவங்க 'சர்வே' படிப்பு படிக்கிறதில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே, நஷ்டம்? அவன் நேரத்துலே அவன் கொடுக்கிற சம்பளத்துல, நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப்போறே... இது லாபம்தானே?''

* 1965-ல் ஆனந்த விகடன் இதழுக்காக பெரியாரிடம் சாவி எடுத்த பேட்டியின் சில துளிகளே இவை. விரிவான பேட்டியை மூன்று பகுதிகளில் வாசிக்க...

> பெரியார் பேசுகிறார் - பகுதி 1 https://www.vikatan.com/oddities/miscellaneous/91088-

> பெரியார் பேசுகிறார் - பகுதி 2 https://www.vikatan.com/oddities/miscellaneous/91178-

> பெரியார் பேசுகிறார் - பகுதி 3 https://www.vikatan.com/oddities/miscellaneous/91492-

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், ப்ரைம் கன்டென்ட்டுகளின் அப்டேட்களையும் தவறாமல் பெறுவதற்கு, விகடன் டிஜிட்டல் சந்தா செலுத்துங்கள். உங்களுக்காகவே இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

விகடன் சந்தா மூலம் நீங்கள் பெறக்கூடிய சிறப்புப் பயன்கள்: 2006 முதல் இப்போது வரை விகடன் இதழ்களில் வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளை வாசிக்க எப்போதும் வலம் வரலாம். | வெப் ப்ரவுசர், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம். | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்து விகடன் இதழ்களை வாசித்து மகிழலாம்.

அடுத்த கட்டுரைக்கு