Published:Updated:

ஆலன் டொனால்டு டு ஷேன் வார்னே... பௌலிங் சூறாவளிகளை சச்சின் பதம் பார்த்தது எப்படி? #VikatanOriginals

சச்சின்
சச்சின்

சச்சின் குறித்து, தன் சுயசரிதை வழியாக சச்சினே பகிர்ந்துகொண்ட சில சுவாரஸ்யப் பக்கங்கள்...

சச்சின்... 24 ஆண்டுகள் கிரிக்கெட்டே வியந்துபார்த்த பிரமாண்டம். `இனி இப்படியொருவர் சாத்தியமா!' என விளையாட்டுலகம் வியந்துபார்த்த சகாப்தம். இன்று 47-வது பிறந்தநாள் காண்கிறார் இந்தக் கனவு நாயகன்.

எந்தத் துறையில் எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்களானாலும், விமர்சனங்கள் அவர்களைத் துரத்தாமல் விட்டதில்லை. அப்படி சச்சினுக்கெனவும் சில உண்டு. கேப்டனாகப் பெரிதாக சோபிக்காமல் போனது ஏன்? 90 ரன்கள் அடித்தபின், சதத்தை நெருங்கும் முன் அதிக பந்துகளை எடுத்துக்கொள்வது ஏன், 100-வது சதம் அடிக்க ஏன் அத்தனை தாமதம்? - இப்படி சச்சினும் பலவற்றைக் கடந்து வந்திருக்கிறார். இவையனைத்திற்கும் தன் சுயசரிதையில் விரிவாகப் பதில் சொல்லியிருந்தார் சச்சின். அந்த சுயசரிதை வெளியானபோது அதுகுறித்து ஆனந்த விகடனில் விரிவாக எழுதியிருந்தோம். அந்த சுவாரஸ்யப் பக்கங்கள், இன்று இங்கே...

13/11/2014 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

கிரிக்கெட்... கிரிக்கெட்... கிரிக்கெட்... வேறு என்ன இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையில்!

தன் வாழ்க்கையின் சிறந்த பார்ட்னர் என சச்சின் குறிப்பிடும் மனைவி அஞ்சலியுடனான காதலை, இரண்டே பாராவில் கடந்துவிட்டு கிரிக்கெட் பற்றி மட்டுமே `அ முதல் ஃ’ வரை பேசியிருக்கிறார் சச்சின். பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலும், புத்தகத்தில் `ரோஜா’ படம் பார்க்கச் சென்றபோது மாறுவேடத்தில் சென்றேன் என்பது மட்டுமே சினிமா தொடர்பாக சச்சின் குறிப்பிடும் ஒரே சம்பவம். அந்த அளவுக்கு தன் வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் கிரிக்கெட்டையே எழுத்திலும் பிரதிபலிக்கிறார் சச்சின்... `Playing it my way’ புத்தகத்தில்.

சர்வதேச கிரிக்கெட் விளையாடிய இந்த 24 வருடங்களில், சச்சின் தோராயமாக 1,500 நாட்கள் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அதாவது, சுமார் நான்கு வருடங்கள் பேட்ஸ்மேனாகவோ, ஃபீல்டராகவோ களத்தில் நின்றிருக்கிறார். மற்ற 20 வருடங்களும் அதற்கான முன்தயாரிப்புகளில் இருந்திருக்கிறார். அந்த அர்ப்பணிப்புதான், மும்பையின் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனை, கிரிக்கெட் உலகின் பிதாமகன் ஆக்கியது!

ஃபாஸ்ட், ஸ்பின், ஒருநாள் / டெஸ்ட் போட்டி, பேட்டிங் / பௌலிங்குக்குச் சாதகமான ஆடுகளம், பகல் ஆட்டம், பகல் - இரவு ஆட்டம், உள்ளூர் / வெளியூர்... என எங்கேயும் எந்த சூழ்நிலையிலும் மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான் சச்சினின் ஸ்பெஷல். அதற்குக் காரணம் ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கு எதிராகவும், ஒவ்வொரு பந்துக்கு எதிராகவும் அவர் வியூகம் வகுப்பதுதான்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்கள் நாட்டில் டெஸ்ட் தொடர்.

அப்போது ஆலன் டொனால்டு, பௌலிங்கில் சுனாமி; சூறாவளி. அவருடைய வேகத்துக்கும் பௌன்ஸுக்கும் உடம்பில் அடிவாங்காமல் அவுட் ஆகிச் சென்றாலே போதும் என பல பேட்ஸ்மேன்கள் பம்மினார்கள். `டொனால்டின் உயரம் அவருக்கு ப்ளஸ். பேட்ஸ்மேனின் நெஞ்சுக்குக் குறிவைத்து பந்து வீச அந்த உயரம் அவருக்கு உதவும். ஆனால், உயரம் குறைவான பேட்ஸ்மேன்களுக்கு அவரது பந்துவீச்சு சவாலாக இருக்காது என நினைத்தேன். அதனால் கிரீஸில் நிற்கும்போது வழக்கத்தைவிட கால்களுக்கு இடையில் அதிக இடைவெளி ஏற்படுத்திக்கொண்டு நின்றேன். இதனால் என் நிஜ உயரம் குறைய லெக் சைடில் டொனால்டின் பந்துகளை விளாசுவது எளிதானது’ என்கிறார் சச்சின். இப்படி பந்துவீச்சாளரின் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப களத்தில் சில சேட்டைகள் செய்து, பௌலரின் திட்டத்தை ஒரு ஓவருக்குள்ளேயே மாற்றவைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் இந்தியச் சுற்றுப்பயணத்தின்போது வார்னேவின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தே பயிற்சியை ஆரம்பித்துவிட்டார் சச்சின். கிரீஸில் தான் நிற்கும் முறையை மாற்றி, பேட்டை மிகவும் அகலமாக வெளிக்கொண்டுவந்து, பந்து சுழன்று எழுவதற்கு முன்னரே லெக் சைடில் அழுத்தமாக பன்ச் செய்யப் பயிற்சியெடுத்தார். சுற்றுப்பயணம் முழுக்க வார்னேவை வதம்செய்தார்!

சச்சின் - அஞ்சலி
சச்சின் - அஞ்சலி

மற்ற பேட்ஸ்மேன்கள், பௌலர் பந்துவீசிய பிறகுதான் அந்தப் பந்தை எப்படி எதிர்கொள்வது எனத் திட்டமிடுவார்கள். ஆனால் சச்சின், பௌலரின் மனநிலை, அவர் கையில் பந்தைப் பிடித்திருக்கும் விதம், மார்க்கில் இருந்து ஓடத் தொடங்கும்போது அவரது கைகளின் சுழற்சி என அந்தப் பந்து வீசப்படுவதற்கு முன்னரே அதைக் கணிக்கவேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பாராம். பௌலர் பந்தின் குறிப்பிட்ட பகுதியை எப்படிப் பிடித்திருக்கிறார் எனப் பார்த்துவிட்டாலே அது அவுட் ஸ்விங்கா, இன் ஸ்விங்கா என்பதைக் கணித்துவிடலாம். ஆனால், சில பௌலர்கள் பந்து வீசப்படும் கடைசி நொடி வரை கைகளால் பந்தை மறைத்துக்கொண்டு ஓடிவந்து வீசுவார்கள்.

நியூஸிலாந்தின் கிறிஸ்கெய்ன்ஸ் அப்படித்தான் பந்தை ஒளித்துக்கொண்டு வீசுவார். ஆனால், அதையும் சமாளிக்க ஒரு திட்டம் வகுத்தார் சச்சின். `பேட்டிங் முனையில் இருக்கும் பேட்ஸ்மேனுக்குத்தான் கெய்ன்ஸ் பந்தை எப்படிப் பிடித்திருக்கிறார் எனத் தெரியாது. ஆனால், அம்பயர் அருகில் நிற்கும் பேட்ஸ்மேனுக்கு கெய்ன்ஸ் எப்படிப் பந்தைப் பிடித்திருக்கிறார் என்பது தெரியும். அதனால் நானும் டிராவிட்டும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டோம். அதாவது அம்பயர் அருகில் நிற்கும் பேட்ஸ்மேன், கெய்ன்ஸ் பந்தைப் பிடித்திருக்கும் விதத்தைப் பார்க்க வேண்டும். அது அவுட் ஸ்விங் என்றால் தனது பேட்டை இடது பக்கமாகப் பிடிக்க வேண்டும். இன் ஸ்விங் என்றால் வலது பக்கமாகப் பிடிக்க வேண்டும். ஸ்விங் இல்லாமல் நேராக பந்து வீசப்படும் என்றால் பேட்டை நடுவில் வைத்திருக்க வேண்டும். இந்த ரகசிய சிக்னல் காரணமாக நல்ல ஃபார்மில் இருந்த கெய்ன்ஸின் பந்து வீச்சை அன்று எளிதாகச் சமாளித்தோம். ஒருகட்டத்தில் எப்படியோ எங்கள் திட்டத்தைத் தெரிந்துகொண்ட கெய்ன்ஸ் என்னைப் பார்த்து வெறுப்பில் கத்தினார்!’ என்கிறார் சச்சின்.

ஒருசமயம் அவுட் ஆஃப் ஃபார்ம் காரணமாகத் தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி. அப்போது களத்தில் வேறு எந்த விஷயத்தின் மீதும் கவனம் செல்லக் கூடாது என்பதால், பந்தின் மீதே முழுக் கவனத்தையும் பதித்திருந்தாராம் சச்சின். அதுவும் எப்படி? பௌலர் வீசிய பந்து விக்கெட் கீப்பரிடம் சென்ற பிறகு, அதை அவர் அருகில் இருப்பவருக்கு பாஸ் செய்ய, அவர் அடுத்தவருக்கு பாஸ் செய்ய... அப்படியே கைமாறி மாறி பௌலர் கைக்கு பந்து வரும் வரை அதன் மீதே கவனத்தைப் பதித்திருப்பாராம். ஓவர்களுக்கு இடையிலான இடைவெளியின்போதுதான் பார்வை மற்ற விஷயங்கள் மீது பதியுமாம். அதிக வெப்பம் நிலவும் சென்னையில் விளையாடுவது என்றால், 36 மணி நேரத்துக்கு முன்பு இருந்தே நிறையத் தண்ணீர் குடிப்பது, இரவுகளிலும் வெக்கையடிக்கும் மொகாலியில் போட்டி என்றால், முந்தின நாள் காரமான உணவுகளைத் தவிர்த்து பழங்களை மட்டும் சாப்பிடுவது... என ஒவ்வொரு போட்டிக்கும் உள்ளும் புறமுமாக சச்சின் தனது ஆன்மாவையே தயார்படுத்துவாராம்!

சச்சின் மீதான மிக முக்கியமான குற்றச்சாட்டு, ஒருநாள் போட்டிகளில் 90 ரன்களைக் கடந்த பிறகு, சதம் அடிக்கும் வரை நிறையப் பந்துகளை வீணடிப்பார் என்பது. அதுவரை பௌண்டரிகளாக விளாசுபவர், அதன் பிறகு சிங்கிள் சிங்கிளாகத் தட்டி சதம் அடிக்கும்போது அணியின் ஒட்டுமொத்த ரன்ரேட் சரிந்து, சுமார் 20 ரன்கள் குறைந்திருக்கும் என்பார்கள். அது ஒருவிதத்தில் உண்மைதான் என்பதை, சச்சின் மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார். ஆனால், அதற்கான காரணம் அவர் மீதான பிரமாண்ட எதிர்பார்ப்பே என்கிறார்.

`நான் ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, சீசனின் முதல் போட்டியிலேயே சதம் அடித்துவிடுவேன். ஆனால், சர்வதேச ஒருநாள் போட்டியில் சதம் என்பது எனக்கு அத்தனை சீக்கிரம் கிடைக்கவில்லை. அணியில் அறிமுகம் ஆகி, அதிரடி காட்டி, இந்தியா முழுக்க பிரபலம் ஆகி, உலக பௌலர்களை மிரட்டி, அணியில் நிரந்தர இடம்பிடிக்கும் வரையிலுமே நான் சதம் அடிக்கவில்லை. 90 ரன்களை நெருங்கிய பிறகும் அதிரடியைக் குறைக்காமல் பல சமயம் ஆட்டம் இழந்திருக்கிறேன். இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி நான்கு வருடங்கள், 70 போட்டிகளுக்குப் பிறகும் ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. அப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 90 ரன்களைத் தொட்டேன். இந்த முறை நிச்சயம் சதம் எடுக்க வேண்டும் என முதல்முறையாக அப்போது எனக்குள் ஒரு பதற்றம் உண்டானது. 95-க்குப் பிறகான ஐந்து ரன்கள் எடுக்கும் வரை என் உயிர் என்னிடம் இல்லை. அந்த சதப் பதற்றம், பிறகு ஒவ்வொரு சதத்தின்போதும் என்னைத் துரத்தியது. ஏனென்றால், நான் 99 ரன்கள் குவித்து அவுட்டானால், ரசிகர்கள் அதைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை. `சச்சின் சென்ச்சுரி மிஸ் பண்ணிட்டார்ல’ என்றே சொல்லிவந்தனர். அதுவும் டெஸ்ட்டிலும் ஒன்-டேவிலும் மொத்தமாக 99 சதங்களை எடுத்துவிட்டு 100-வது சதத்தை அடிப்பதற்குள் நான் வெறுப்பின் உச்சத்துக்கே சென்றேன். காயம், அவுட் ஆஃப் ஃபார்ம் காரணங்களால் ஒரு வருடத்துக்கும் மேலாக 100-வது சதம் அடிப்பது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. எங்கு சென்றாலும் விமர்சனங்கள், விசாரிப்புகள், அறிவுரைகள். ஒருவழியாக பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் 80 ரன்களைக் கடந்தேன். அதன் பிறகு நிதானமாக விளையாடி 98 ரன்கள் வரை வந்தேன். அதன் பிறகு மேலும் இரண்டு ரன்கள் எடுப்பதற்குள், அதுவரையிலான என் 22 வருட அனுபவத்தின் அத்தனை பக்குவத்தையும் நான் உபயோகிக்க வேண்டியிருந்தது. `எந்த ஹீரோயிசமும் வேண்டாம். ஒழுங்குமரியாதையாக இந்தச் சதத்தைப் பூர்த்தி செய்’ என எனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன். உச்சக்கட்ட உஷார், பதற்றம், பயத்துடன் சிங்கிள் தட்டி, சதத்தைத் தொட்ட பிறகுதான் என் மனநிலை இயல்புக்குத் திரும்பியது. உடனடியாக 50 கிலோ எடை குறைந்ததுபோல உணர்ந்தேன். இனி எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை எனத் தோன்றியது. அந்த அளவுக்கு அந்த 100-வது சத எதிர்பார்ப்பு என்னை அழுத்தியிருந்தது!’ என சதம் அடிப்பதுகுறித்த நினைவுகளை விரிவாகவே பகிர்ந்துகொண்டிருக்கிறார் சச்சின்.

`நான் கேட்ட அணியை எனக்கு எப்போதும் கொடுக்கவே இல்லை. தேர்வாளர்கள் விரும்பிய அணியை வைத்துக்கொண்டு என்னால் மேஜிக் செய்ய முடியவில்லை. அதிலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்டில் 120 ரன்களைக்கூட குவிக்க முடியாமல் 80 ரன்களில் சுருண்டதுதான் என் கேப்டன் வாழ்வில் மிக மோசமான நாள்!’ - கேப்டன் பதவியில் ஜொலிக்க முடியாதது குறித்து அப்போதைய அணி மற்றும் தேர்வாளர்கள் குறித்து பெரும் வருத்தம் சொல்கிறார் சச்சின். மிகவும் சீனியர் பிளேயர்கள், அப்போதுதான் அறிமுகமான பிளேயர்கள்... இரு தரப்புக்கும் இடையே புரிதலைக் கொண்டுவர முடியாமல் தடுமாறி, பேட்டிங் ஃபார்மும் பாதிக்கப்பட்டு வருந்தியிருக்கிறார் சச்சின்.

சச்சின்
சச்சின்

பாகிஸ்தான் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின்போது கடுமையான முதுகுவலியுடன், சென்னை டெஸ்ட்டின் நான்காவது இன்னிங்ஸில் பேட் செய்தார் சச்சின். 271 ரன்கள் இலக்கு. 82 ரன்களுக்கே 5 விக்கெட் என இந்திய அணி தடுமாறிய நிலையில், மோங்கியாவைத் துணைக்கு வைத்துக்கொண்டு, முதுகுவலியைப் பொருட்படுத்தாமல் வெற்றிக்கு 17 ரன்களே தேவை என்ற நிலைக்கு அணியை அழைத்து வந்துவிட்டார். அதற்கும் மேல் வலி பொறுக்க முடியாமல், சுருண்டுவிழுவோம் எனத் தோன்றியிருக்கிறது சச்சினுக்கு. அதற்குள் ஜெயிக்க வேண்டுமே என அதிரடியாக விளையாடியபோது அவுட் ஆகிவிட்டார் சச்சின். அதன் பிறகு மூன்று விக்கெட்கள் இருந்தபோதும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா. `நினைத்து நினைத்து பெருமிதம்கொள்ளும் பேட்டிங். ஆனால், இன்னமும் முள்ளாகக் குத்தும் தோல்வி’ என அந்த இன்னிங்ஸைக் குறிப்பிடுகிறார் சச்சின்.

சார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு சதங்கள் (மணல் புயலுக்கு இடையில் ஒன்று!), உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான 98 ரன்கள், ஒருநாள் போட்டியின் முதல் 200 ரன்கள் எனத் தனது அபார இன்னிங்ஸ்களைப் பற்றி சுருக்கமாக முடித்துக்கொள்கிறார். ஆனால், ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராகக் குவித்த ரன்கள், முதுகுவலியுடன் விளையாடிய போட்டிகள் குறித்து சிலாகித்துப் பேசுகிறார். அதுதான் சச்சின். அவர் சதம் அடித்தால்தான் நன்றாக விளையாடியதாக விமர்சகர்களும் ரசிகர்களும் நம்ப, `அப்படியெல்லாம் இல்லை. மிக மோசமான சூழலில், வலுவான பௌலிங்குக்கு எதிராக 35 ரன்களைக் குவித்து அது அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தால், அதுதான் எனக்குப் பெருமை. சதம் அடிப்பதோ, உலக சாதனை புரிவதோ சந்தோஷம் அளிக்காது!’ என்கிறார்.

புத்தகத்தில் பயிற்சியாளர் கிரேக் சாப்பல் தவிர எவர் மீதும் கடுமையான விமர்சனம் வைக்காத சச்சின், ராகுல் டிராவிட் மீதான வருத்தத்தை மட்டும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் 194 ரன்களில் விளையாடிக்கொண்டிருந்தபோது கேப்டன் ராகுல் டிராவிட் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது, தன்னை மிகவும் கோபமூட்டியது என்கிறார். `அது போட்டியின் முதல் இன்னிங்ஸ்தான். ஷேவாக் அசுர வேகத்தில் 309 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். நான் சீரான வேகத்தில் சதம் அடித்து 180 ரன்களைக் கடந்துவிட்டேன். அன்றைய தினம் ஆட்டம் முடிவதற்கு சில மணி நேரம் முன்பாக 15 ஓவர்களை மிச்சம் வைத்து டிக்ளேர் செய்யலாம் என டீ பிரேக்கில் என்னிடம் சொல்லியிருந்தார் ராகுல். நானும் அதற்குள் இரட்டை சதத்தை எட்டிவிடலாம் என விளையாடிக்கொண்டிருந் தேன். ஆனால், ஆச்சர்ய அதிர்ச்சியாக நான் 194 ரன்களில் இருந்தபோது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு ஒரு ஓவருக்கு முன்னதாகவே டிக்ளேர் செய்துவிட்டார் ராகுல். போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும் நான்காவது நாள் அல்ல அன்று. மேலும் ஒரு ஓவர் நாம் விளையாடுவதால் போட்டியில் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படப் போவது இல்லை. ஆனாலும் தேவை இல்லாத அவசரத்துடன் டிக்ளேர் செய்ததுதான் என்னை மிகவும் ஆத்திரமடையச் செய்தது. கோபத்தில் வார்த்தைகளைச் சிந்திவிடக் கூடாது என நான் யாரிடமும் எதுவும் பேசவில்லை. ஆனால், என் கோபம் உணர்ந்து ராகுல் என்னிடம் வந்து சமாதானப்படுத்துவதுபோல பேசினார். நான் அவரிடம் என் கோபத்தை அப்படியே வெளிப்படுத்திவிட்டேன்!’

`போட்டிக்கு முந்தைய நாள் வாத்து முட்டை சாப்பிட மாட்டேன். வாத்து முட்டை என்பது 'டக் அவுட்’டைக் குறிக்கும்’, `தங்கியிருக்கும் அறையில் மினி பூஜை அறையை உருவாக்கி, சாமி கும்பிட்டுவிட்டே போட்டிக்குச் செல்வேன்’, `மனைவி அஞ்சலி நான் பேட்டிங் செய்வதை, நேரில் பார்க்கவே மாட்டார்’, என பேட்டிங் குறித்து பல சென்டிமென்ட்களைக் குறிப்பிடுகிறார். 1990-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முதல் சதத்தைப் பதிந்து இந்திய அணி தோல்வியைத் தவிர்க்கச் செய்தார் சச்சின். `மேன் ஆஃப் த மேட்ச்’ பரிசாக அப்போது அளிக்கப்பட்ட ஷாம்ப்பெயினை, எட்டு வருடங்கள் கழித்து தன் மகள் சாராவின் முதல் பிறந்தநாளின்போதுதான் திறந்திருக்கிறார். பார்ட்டி, பியர், ஹீரோயின் கிசுகிசு போன்ற கிரிக்கெட்டின் கவர்ச்சிக் கொண்டாட்டங்களில் சச்சினை எங்கேயும் காண முடியாது.

100 கோடி மகிழ்ச்சி...100 கோடி கண்ணீர்...100 கோடி கனவு... சச்சின் எனும் உணர்வு! #HBDSachin

கிரிக்கெட்டுக்கு அடுத்து சச்சினை அதிகம் ஈர்த்தது உணவு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விதவிதமான சாப்பாடு குறித்துப் பேசுகிறார். ரசனையான உணவுப் பிரியர்களுடன் உடனடி நட்பு ஆகிறார். மாதக்கணக்கில் சுற்றுப் பயணங்களில் இருந்ததால் குழந்தைகள் சாரா, அர்ஜுன் வளர்வதை அருகில் இருந்து பார்க்க முடியாத வருத்தம் இப்போதும் இருக்கிறது அவரிடம். அப்பாவின் இழப்பு சச்சினை வெகுவாகப் பாதிக்க, அந்தத் துயரத்தில் இருந்து மீள்வதற்கும் உடனடியாகத் திரும்பி கிரிக்கெட்தான் விளையாடியிருக்கிறார் சச்சின்.

தனது கேரியர் முழுக்கவே ஒரு வருடம் அவுட் ஆஃப் ஃபார்மில் அவதிப்பட்டால், அதற்கு அடுத்த இரண்டு வருடங்கள் அடி பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சச்சின். `எண்டுல்கர்’ என்ற விமர்சனத்துக்குப் பிறகுதான் ஒருநாள் போட்டியில் முதல் ஆளாக இரட்டைச் சதம் அடித்தார் சச்சின். கிரிக்கெட் மீது அவருக்கு இருந்த அபரிமிதமான காதலே அந்த சாகசத்துக்குக் காரணம். ஆனால், 2012-க்குப் பிறகு விளையாடச் செல்லும்போது உண்டாகும் உற்சாகம் குறைவதை சச்சின் உணர்ந்திருக்கிறார். தொடர் காயங்கள் காரணமாக உடலும் வலுவிழப்பதைப் புரிந்துகொண்டவர், மிகவும் கடினமான மனநிலையுடன் ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார். ஓய்வு முடிவை எடுத்த பிறகான மனநிலையை பக்கம் பக்கமாக உணர்ச்சிகரமாக விவரிக்கிறார். கிரிக்கெட் இல்லாத தன் வாழ்க்கையை எதைக்கொண்டு நிரப்புவது என்ற பயமும் பதற்றமுமான ஆதங்கம் அது!

சச்சின், வெறுமனே அணிகளுக்கு எதிராக மட்டும் விளையாடவில்லை; ஆலன் பார்டருடன் விளையாடத் தொடங்கி, லாராவுடன் மல்லுக்கட்டி, ஷேவாக்குக்கு சமமாகத் தோள்கொடுத்து, கோஹ்லி காலம் வரை சுமார் நான்கு தலைமுறை பிளேயர்களுடன் சரிக்குச் சரியாகப் போட்டி போட்டிருக்கிறார். இதற்கு முன் எந்த பேட்ஸ்மேனும் நிகழ்த்தாத சாதனை இது. தனது ஒவ்வோர் ஆட்டத்தையும் சிம்பொனி நோட்ஸ் கணக்காகத் திட்டமிட்டு ரசித்து அனுபவித்து விளையாடியவர் சச்சின். சச்சின் கிரிக்கெட்டை மிஸ் செய்வதைவிட, கிரிக்கெட் சச்சினை மிஸ் செய்யும் என்பதையே, சச்சினின் இந்தச் சுயசரிதை பளிச்சென உணர்த்துகிறது!

எழுத்து: கி.கார்த்திகேயன்
அடுத்த கட்டுரைக்கு