Published:Updated:

``என் மேல ஸ்டாம்ப் குத்துவது பிடிக்காது..." - நான் சிவகார்த்திகேயன் ஆனது எப்படி? #VikatanVintage

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போதே என் அப்பா இறந்துட்டார். சின்ன வயசுல இருந்து எந்தப் பெரிய துயரங்களையும் எதிர்கொள்ளாமல் இருந்த எனக்கு அது பெரிய அடி. அந்த சோகத்தில் இருந்து மீள மிமிக்ரியில் அதிகக் கவனம் செலுத்தினேன்.

- ந.வினோத்குமார், படம்: ஆ.முத்துகுமார் | ஆகஸ்ட் 4, 2010 ஆனந்த விகடன் இதழிலிருந்து...

"கும்பகோணம்தான் எங்களுக்குப் பூர்வீகம். இசை தொடர்புடைய குடும்பம். அப்பா, காவல் துறை அதிகாரி. அதனால, வீட்டுக்குள்ளே சும்மா விட்டத்தைப் பார்த்துட்டுப் படுத்திருக்க முடியாது. ஆனாலும், சிறப்பா எந்தத் தகுதியும் வளர்த்துக்காமலே வளர்ந்துட்டேன்.

ப்ளஸ் டூ வரைக்கும் வாழ்க்கையில் எந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களும் நடக்கலை. இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன். 'கல்லூரி கல்ச்சுரல்ஸ்ல நீ ஏதாச்சும் செய்யணும்'னு சொல்லி, பசங்க மேடை ஏத்தி விட்டுட்டாங்க. மத்தவங்கள்லாம் கிடார் வெச்சு வெஸ்டர்ன், ராப், பாப்னு அடி பின்னிட்டு இருந்தாங்க. என் முறை வந்ததும் வெறும் ஆளா மேடையில நிக்கிறேன். 'என்ன பண்ணப் போறான்'னு எல்லாரும் ஒரு நிமிஷம் அமைதியா பார்த்துட்டு இருக்காங்க. அந்த நொடி வரைக்கும் என்ன பண்றதுன்னு எனக்கும் எந்த ஐடியாவும் இல்லை. திடீர்னு பள்ளி நாட்கள்ல விளையாட்டா பசங்களோட சேர்ந்து மிமிக்ரி பண்ணது ஞாபகத்துக்கு வந்தது. உடனே, கடகடன்னு மிமிக்ரி பண்ண ஆரம்பிச்சுட்டேன். முழுசா 15 நிமிடங்கள். முடிச்சுட்டு கை கால் நடுங்க நின்னா... அரங்கமே அதிர்ற அளவுக்கு அப்ளாஸ். கீழே இருந்து பசங்க ஓடி வந்து தோள்ல தூக்கிவெச்சுக் கொண்டாடினாங்க. 'அங்கீகாரம்'னா என்னன்னு வாழ்க்கையில் உணர்ந்த நாள் அதுதான்.

'இவனுக்கு மிமிக்ரி மட்டும்தான் வரும்!', 'ஏதோ சுமாரா டான்ஸ் ஆடு வான்'னு என் மேல மத்தவங்க ஸ்டாம்ப் குத்துவது எனக்குப் பிடிக்காது.

நண்பர்கள் வட்டம் பெரிசாச்சு. கூடிக் கூடிப் பேசி மிமிக்ரிக்கு ஐடியா பிடிப்போம். எல்லா கல்லூரி கல்ச்சுரல்ஸுக்கும் என்னை அனுப்பினாங்க. படிச்சு முடிக்கிறதுக்குள்ள 65 பரிசுகள் ஜெயிச்சேன். அதுலயும் கோயம்புத்தூர் சி.ஐ.டி. கல்லூரியின் ஒரே கல்ச்சுரலில் எட்டு முதல் பரிசுகள் ஜெயிச்சது ஹைலைட். இப்பவும் மனசு பாரமா இருந்தா, அந்த நாளை நினைச்சுக்குவேன். நான் எந்தத் திசையில் பயணிக்கணும்னு எனக்கு உணர்த்திய நாள் அது.

நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போதே என் அப்பா இறந்துட்டார். சின்ன வயசுல இருந்து எந்தப் பெரிய துயரங்களையும் எதிர்கொள்ளாமல் இருந்த எனக்கு அது பெரிய அடி. அந்த சோகத்தில் இருந்து மீள மிமிக்ரியில் அதிகக் கவனம் செலுத்தினேன். மூவி ஸ்பூஃப், ஸ்டாண்ட்-அப் காமெடி, வெரைட்டி விருந்துன்னு மிமிக்ரியிலேயே பல பிரிவுகளில் ஐடியா பிடிச்சு நண்பர்களோடு ஷோ பண்ண ஆரம்பிச்சேன். எம்.பி.ஏ., படிக்கிறதுக்காக நுழைவுத் தேர்வு எழுதினேன். முடிவுக்குக் காத்திருந்தப்பதான் விஜய் டி.வி. 'கலக்கப் போவது யாரு - சீஸன் 3'க்கான அறிவிப்பு வந்துச்சு. வீட்ல சாஃப்ட்வேர் கம்பெனி இன்டர்வியூக்குப் போறேன்னு பொய் சொல்லிட்டு மதுரைக்குப் போய், ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். அங்கே மட்டும் சுமார் 1,200 பேர் கலந்துக்கிட்டாங்க. முதன்முதலா கல்லூரி மேடையில பண்ணினதை அங்கே அப்படியே செஞ்சேன். நல்ல வரவேற்பு. மேடையைவிட்டுக் கீழே இறங்கினதுமே அக்ரிமென்ட் டைக் கையில கொடுத்தாங்க.

நான் முதல் சுற்று ஜெயிச்ச நிகழ்ச்சி டி.வி-யில் ஒளிபரப்பானதும் அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம். உடனடியா அடுத்த சந்தோஷமா எம்.பி.ஏ., படிக்க சென்னையிலேயே ஸீட் கிடைச்சது. சென்னைக்கு வந்தேன். படிச்சுக்கிட்டே போட்டியில் கலந்துக்கிட்டேன். இறுதிப் போட்டியிலும் ஜெயிச்சேன். மனோரமா ஆச்சி கையால் ஐந்து லட்சம் ரூபாய் பரிசு. காசை வீணாக்காமல் எம்.பி.ஏ., படிப்புக்கு செலவழிச்சேன். நல்லபடியா படிச்சும் முடிச்சேன். அம்மாவைச் சந்தோஷப்படுத்தியாச்சு. அடுத்து என் சந்தோஷத்துக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப, 'மீடியா'வின் சக்தி என்னைச் சுண்டி இழுத்துருச்சு!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

'ஜோடி நம்பர்-1' நிகழ்ச்சியில கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, எனக்கு டான்ஸ் தெரியாது. டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்த மாதிரி ஆடினேன். 11 ரவுண்ட்களிலும் தேர்வாகி, ஒரே ஒரு முறை மட்டும் எலிமினேட் ஆனேன். ஆனாலும், வைல்ட் கார்டு மூலம் நேரடியா இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி இரண்டாவது இடம் பிடிச்சேன். போட்டி நடக்கும்போது, 'இவன்லாம் எப்படி ஜெயிப்பான். இன்னிக்கு இவன்தான் எலிமினேட்'னு என் காது படவே பேசுவாங்க. நான் எதுவும் பேசலை. ஆனா, எனக்குள் அதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு முடிஞ்ச வரைக்கும் போராடினேன். போராடாமலேதான் தோற்கக் கூடாது. போராடித் தோற்கலாம்... தப்பு இல்லை!

மிமிக்ரி, ஆடல் - பாடல்களோடு அடுத்த கட்டம் 'பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்' நிகழ்ச்சிக்கு இயக்குநர் வடிவில் வந்தது. இப்ப 'அது இது எது?' நிகழ்ச்சி நல்லா போயிட்டு இருக்கு. 'இவனுக்கு மிமிக்ரி மட்டும்தான் வரும்!', 'ஏதோ சுமாரா டான்ஸ் ஆடு வான்'னு என் மேல மத்தவங்க ஸ்டாம்ப் குத்துவது எனக்குப் பிடிக்காது. எது கொடுத்தாலும் முயற்சித்துப் பார்ப்பேன். இப்ப ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் சீஸன்-4 ஸ்க்ரிப்ட் ரைட்டிங் பண்ணிட்டு இருக்கேன். சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வந்திருக்கு."

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு