Election bannerElection banner
Published:Updated:

``இவங்களா எங்க ஹெட்மிஸ்ட்ரஸ்..?" - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் #VikatanVintage

எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு சின்ன காட்சிதான். ஆனா, இது எனக்குள்ள விதைச்ச தத்துவங்கள் நிறைய. நீங்களும் யோசிச்சுப் பாருங்களேன்...

"அறிவு சொல்றபடி கேக்குறவன் ஆண்.. உள்ளுணர்வு சொல்றதை கேட்குறவ பெண். நீங்க கவனிச்சிருக்கீங்களா? பெண்களுக்கு பார்த்த உடனே ஒருத்தரைப் பிடிச்சிடும்.. அதுக்குக் காரணம் சொல்லத் தெரியாது. அதேமாதிரி யாரையாவது பிடிக்காம போயிடும்.. அதுவும் ஏன்னு அவங்களுக்குத் தெரியாது'' - ஆண் பெண் உளவியலை மிக இயல்பாக அடுக்குகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

''என்னை வியக்க வச்ச பெண்கள் எல்லாரும் ரொம்ப சாதாரணமானவங்க. அவங்க யாரு... பேர் என்ன... எதுவுமே எனக்குத் தெரியாது. யோசிச்சுப் பார்த்தா முகம் கூட ஞாபகத்துக்கு வராது. ஆனா, என் கண் முன்னாடி அவங்க செஞ்ச சின்ன செயல், என்னை ரொம்ப யோசிக்க வைக்கும்.

ஒரு மழை நாள்ல ரோட்டோரத்துல நான் பார்த்த காட்சி இது. நடுங்குற கையில குடை பிடிச்சுக்கிட்டு ஒரு பாட்டி நடந்து போறாங்க. பேரப் பிள்ளைங்க ரெண்டு பேரு அவங்க குடையிலயே ஒண்டிக்கிட்டு நனையாம வர்றாங்க. குடை பிடிச்சிருக்குற பாட்டி அதை லேசா அசைச்சாக்கூட யாராவது ஒருத்தர் நனைஞ்சுடுவாங்க. ஆனா, அந்தப் பாட்டிக்குக் கை நடுங்குதே தவிர, குடை அசையலை.

பிரதோஷம் அன்னிக்கு கோயிலுக்குப் போய் பார்த்திருக்கீங்களா? பெண்கள் கூட்டத்துல ஒரே தள்ளுமுள்ளா இருக்கும். அந்தக் கூட்டத்துல கிட்டத்தட்ட பாதிப்பேர் ஒரு புகாரோடதான் கடவுளைப் பார்க்க வர்றாங்க.

நான் யோசிச்சுப் பார்த்தேன்... இந்த மழை மட்டும் இல்லைன்னா இந்தப் பசங்க பாட்டியோட இவ்வளவு நெருக்கமா சேர்ந்து நடப்பாங்களா? நிச்சயமா இல்லை. இது அந்தப் பாட்டிக்கும் தெரியுது. நனையாம இருக்கத்தான் நம்மளோட ஒட்டுதுங்க... அந்த நினைப்பு வீணாயிடக் கூடாதேனுதான் அத்தனை கவனமா குடை பிடிக்கிறாங்க பாட்டி. பேரப் பிள்ளைங்க ரெண்டு பேருமே குடை பிடிக்கிற அளவுக்கு வளர்ந்தவங்கதான். ஆனா, அவங்க யாரும் குடையை வாங்கலை. அவங்களுக்கே தெரியும்... யாரும் நனைஞ்சுடக் கூடாதுங்கற பொறுப்பு - அந்த சுயநலம் கடந்த பொறுப்பு பாட்டிக்கு மட்டும்தான் வரும்னு!

இது ஒரு சின்ன காட்சிதான். ஆனா, இது எனக்குள்ள விதைச்ச தத்துவங்கள் நிறைய. நீங்களும் யோசிச்சுப் பாருங்களேன்... ஒரு குடும்பத்தை நிர்வாகம் பண்றதும் குடை பிடிக்கிறதும் கிட்டத்தட்ட ஒண்ணு மாதிரி தோணலை..?

இதேமாதிரி இன்னொரு காட்சி.. என்னோட சின்ன வயசுலயே என்னை ரொம்பவும் பாதிச்ச காட்சி அது.

ஸ்கூல் பிள்ளைகளுக்கெல்லாம் பிரதம மந்திரி கூட பெருசில்லை. தன் ஸ்கூல் டீச்சரும் அந்த டீச்சரையே அதட்டுற ஹெட்மிஸ்ட்ரஸூம்தான் வானம் அளவுக்கு உயர்ந்தவங்களா தெரிவாங்க. அப்படித்தான் எங்க ஹெட்மிஸ்ட்ரஸூம் எனக்குத் தெரிஞ்சாங்க. மடிப்பு கலையாத புடவை, கண்ணாடி, வாட்ச்னு யாரைப் பார்த்தாலும் ஹெட்மிஸ்ட்ரஸாவே தெரிவாங்க எனக்கு. அப்படி இருக்கும்போது, ஒரு லீவ் நாள்ல எதேச்சையா அவங்க வீட்டுக்கு நான் போக வேண்டியிருந்தது.

ஓவியம்
ஓவியம்

அதிர்ந்துட்டேன். சாயம் போன சாதாரண புடவையோட.. தன்னோட மாமியார் அதட்டலுக்கு நடுங்கிக்கிட்டு.. கை உரல்ல அரிசியைப் போட்டு மாவாட்டிக்கிட்டு.. தலை, கை, காலெல்லாம் மாவோட.. சே இவங்களா எங்க ஹெட்மிஸ்ட்ரஸ்..?

*

பிரதோஷம் அன்னிக்கு கோயிலுக்குப் போய் பார்த்திருக்கீங்களா? பெண்கள் கூட்டத்துல ஒரே தள்ளுமுள்ளா இருக்கும். அந்தக் கூட்டத்துல கிட்டத்தட்ட பாதிப்பேர் ஒரு புகாரோடதான் கடவுளைப் பார்க்க வர்றாங்க. 'என் புருஷன் குடிக்கிறான்.. என் மாமியார் அடிக்கிறா.. என் மருமக விரட்டுறா'னு ஏதோ ஒரு புகார் அவங்க மனசுல இருக்கு. அதைத்தான் கோயில்ல பிரார்த்தனையா வந்து கொட்டுறாங்க. ஆனா, இந்தப் புகார்களுக்காகத்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்களைத் திறந்து வச்சிருக்காங்க. அங்க இப்படி கூட்டம் வந்து பார்த்திருக்கீங்களா? இருக்காது!

ஏன்னா, பெண்களுக்குத் தெரியும்.. புகாரால குடும்பப் பிரச்னைகள் பெருசாகுமே தவிர, தீராது. பிரார்த்தனையாலதான் அது தீரும். இந்தத் தெளிவு பெண்களுக்கு இருக்குறதாலதான் ஆண்களையும் பெண்களையும் சுமந்துக்கிட்டு சுத்துற பூமி அமைதியா இருக்கு!'' - ஒரு சிறுகதையின் முடிவைப் போலவே பேசி முடித்தார் எஸ்.ராமகிருஷ்ணன்.

| அவள் விகடன் செப்.12, 2008 இதழின் 'நான் வியக்கும் பெண்மை' பகுதியில் இருந்து. |

- சந்திப்பு: ரா.கோகுலவாச நவநீதன் | படம்: எம்.உசேன்

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக இப்போது ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய க்ளிக் செய்க > http://bit.ly/2MuIi5Z

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு