Published:Updated:

மெட்ராஸ் வரலாறு: சென்னையில் காணாமல் போன தியேட்டர்களின் கதை! | பகுதி 9

மெட்ராஸ் வரலாறு

அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலைக்குச் செல்வதற்குள் நாம் கடக்கும் திரையரங்குகள்... சபையர், புளூ டைமண்ட், எமரால்டு, ஆனந்த், லிட்டில் ஆனந்த், அலங்கார், வெலிங்க்டன், தேவி பாரடைஸ், சித்ரா, கெயிட்டி, காசினோ, பாரகன்..

மெட்ராஸ் வரலாறு: சென்னையில் காணாமல் போன தியேட்டர்களின் கதை! | பகுதி 9

அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலைக்குச் செல்வதற்குள் நாம் கடக்கும் திரையரங்குகள்... சபையர், புளூ டைமண்ட், எமரால்டு, ஆனந்த், லிட்டில் ஆனந்த், அலங்கார், வெலிங்க்டன், தேவி பாரடைஸ், சித்ரா, கெயிட்டி, காசினோ, பாரகன்..

Published:Updated:
மெட்ராஸ் வரலாறு

சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, கிருஷ்ணவேணி, சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிகண்ட், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி, மேகலா, உமா ராக்ஸி, சரவணா, பாலாஜி, சரஸ்வதி, லட்சுமி, அலங்கார், சபையர், ஆனந்த் போன்றவை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயசங்கர், ரவிசந்திரன், கமல், ரஜினியின் ஆரம்ப காலங்கள் வரை இந்தத் திரையரங்குகள் படு பிஸியாக இருந்தவைதான். இதில் மேகலா, சரவணா, சித்ரா, வெலிங்டன், பிராட்வே திரையரங்குகள் எம்.ஜி.ஆர் படங்களை ரிலீஸ் செய்யும். சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்கள் எப்போதும் சிவாஜி திரைப்படங்களை வெளியிடும். வெகு சில நேரங்களில் மட்டும்தான் இது மாறும்.இதில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸாகவோ, அல்லது குடோனாகவோ, பூட்டியோ கிடக்கின்றன.

நாங்கள் அப்போது ஓட்டேரி பகுதியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டைச் சுற்றி தியேட்டர்கள்தான். சரஸ்வதி (இ), மகாலட்சுமி, புவனேஸ்வரி (இ), வசந்தி (இ), ராக்ஸி (இ), மேகலா (இ), உமா (இ). (இ என குறிப்பிடப்பட்டவை எதுவும் இப்போது இல்லை.) அத்தனை இல்லைகள். பலவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகிவிட்டன. அயனாவரத்தில் இருந்த சயானி திரையரங்கும் அடுக்குமாடி குடியிருப்பாகிவிட்டது.

மெட்ராஸ் வரலாறு: சென்னையில் காணாமல் போன தியேட்டர்களின் கதை! | பகுதி 9

சென்னையை அலங்கரித்த இந்த கலைக் கூடங்களில் இப்போது 90 சதவிகித தியேட்டர்கள் உயிருடன் இல்லை. அவற்றுக்கு உயிர் இருந்தது என்று ரசிகன் நம்பினான். சென்னை புரசைவாக்கத்தில் இருந்த ராக்ஸி இப்போது சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை ஆகிவிட்டது. கே. பாலசந்தர் இயக்கிய படங்கள் அங்கே ரிலீஸ் ஆகும். மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் என எல்லா படங்களும் அங்கே வெளியாகின. பாக்யராஜ், டி.ராஜேந்தர் படங்கள் கடைசியாக சக்கை போடு போட்டன. ஏனோ அது இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் தந்த திரையரங்காகவே என்னுள் பதிந்திருக்கிறது.

அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலைக்குச் செல்வதற்குள் நாம் கடக்கும் திரையரங்குகள்... சபையர், புளூ டைமண்ட், எமரால்டு, ஆனந்த், லிட்டில் ஆனந்த், அலங்கார், வெலிங்க்டன், தேவி பாரடைஸ், சித்ரா, கெயிட்டி, காசினோ, பாரகன்... இந்த தியேட்டர்களில் எஞ்சி நிற்பது தேவி காம்ப்ளக்ஸ், காசினோ மட்டும்தான். சாந்தி தியேட்டருக்கும் நாள் குறித்துவிட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ப்ளூ டைமண்ட் தியேட்டரில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் படத்தில் சென்று அமரலாம் என்ற சிஸ்டம் இருந்தது. படம் முடிய பத்து நிமிடம் இருக்கும்போதுகூட போய் அமரலாம். அடுத்த காட்சி ஆரம்பிக்கும்போது அப்படியே தொடர்ந்து அமர்ந்திருக்கலாம். டால்ஸ்டாயின் அன்னா கரீனினா போன்ற படங்கள் அதில் எந்த நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும். முதல் காட்சியில் உள்ளே போய் இரவுக் காட்சி முடிந்து வெளியே வருபவர்களும் உண்டு. அது ஒரு வித்தியாசமான சிஸ்டம்.

கெயிட்டி, சென்னையின் பழைய திரையரங்கம். 1930-களில் இருந்து இருக்கும் தியேட்டர். அந்த தியேட்டருக்கு என விசேஷமான ரசிகக் கூட்டம் உண்டு. கடைசி கால கட்டத்தில் செக்ஸ் பட தியேட்டர் ஆகி, அஞ்சரைக்குள்ள வண்டி, சாரி டீச்சர் போன்ற படங்களை வெளியிட்டு, ரகசிய ரசிகர்களை நம்பி காலத்தை ஓட்டினார்கள்.

மெட்ராஸ் வரலாறு: சென்னையில் காணாமல் போன தியேட்டர்களின் கதை! | பகுதி 9

ராயப்பேட்டையில் ஒடியன், உட்லண்ட்ஸ், லியோ, பைலட் தியேட்டர்களில் இப்போது ஊசலாட்டத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது உட்லண்ட்ஸ் தியேட்டர். மற்றவை மூடப்பட்டுவிட்டன. மயிலாப்பூரில் காமதேனு தியேட்டர் இருந்தது. தி.நகரில் ராஜகுமாரி, கிருஷ்ணவேணி திரையரங்குகள். நடிகை டி.ஆர். ராஜகுமாரியின் இந்த திரையரங்கம் இப்போது மெகா மார்ட் கடையாகிவிட்டது. நாகேஷ் திரையரங்கம் கல்யாண மண்டபமாகிவிட்டது.

வட சென்னை பகுதியில், மின்ட் பகுதியில் இருந்து திருவொற்றியூர் வரை வரிசையாக 15 திரையரங்குகளுக்கு மேல் இருந்தன. ஶ்ரீ கிருஷ்ணா, கிரௌன் இரண்டும் மின்ட் பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்தன. சற்று தள்ளி முருகன் திரையரங்கம் இருந்தது. இதில் தியாகராஜ பாகவதர் படங்கள் எல்லாம் திரையிடப்பட்டன. இவை மூன்றும் இப்போது இல்லை. பாண்டியன், அகஸ்தியா, மகாராணி, தமிழ்நாடு, பத்மநாபா தியேட்டர்களில் பாதி இப்போது இல்லை. இந்தத் தியேட்டர்கள் எல்லாமே கடந்த 15 ஆண்டுகளுக்குள் காணாமல் போனவை.

15 ஆண்டுகளுக்குள் திரையரங்குகளுக்கு என்ன ஆனது? டி.வி-யின் வருகை பாதித்திருக்கலாம். திருட்டு விசிடி ஆபத்து நெருக்கி இருக்கலாம். சினிமாவின் வர்த்தகத்தில் ஏற்பட்ட ஏதோ ஒரு ஆபத்து அதற்குக் காரணமாகியிருக்கலாம்.

இது பின் குறிப்பு அல்ல... முன் குறிப்பு!

----------------------------------------------

இந்தத் திரையரங்குகளுக்கு எல்லாம் முன் சென்னையில் கட்டப்பட்ட திரையரங்கு எலெக்ட்ரிக் தியேட்டர். அந்த தியேட்டர் எங்கே இருக்கிறது தெரியுமா? சாந்தி தியேட்டர் எதிரில். சாந்தி தியேட்டர் எதிரில் இருக்கும் பழைய போஸ்ட் ஆபிஸ்தான். அந்த எலெக்ட்ரிக் தியேட்டர். திரையரங்கு இருந்ததற்கான அடையாளமாக இப்போதும் அங்கே ஒரு கவுன்டர் மட்டும் சாட்சியாக இருக்கிறது.

பகுதி 8க்கு செல்ல...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism