Published:Updated:

1969-ல் மனோரமா விகடனுக்கு அளித்த ஒரே ஒரு போட்டோ... என்ன ஸ்பெஷல் தெரியுமா?! #VikatanOriginals

மனோரமா ( #VikatanOriginals )

விகடனுக்காக மனோரமா கொடுத்த அந்த போட்டோவை விடவும், அதைப் பற்றி மனோரமாவே தன் ஸ்டைலில் விளக்கிச் சொன்ன அந்த விதம்தான் ஹைலைட்!

1969-ல் மனோரமா விகடனுக்கு அளித்த ஒரே ஒரு போட்டோ... என்ன ஸ்பெஷல் தெரியுமா?! #VikatanOriginals

விகடனுக்காக மனோரமா கொடுத்த அந்த போட்டோவை விடவும், அதைப் பற்றி மனோரமாவே தன் ஸ்டைலில் விளக்கிச் சொன்ன அந்த விதம்தான் ஹைலைட்!

Published:Updated:
மனோரமா ( #VikatanOriginals )

இப்போதெல்லாம் பிடித்த நடிகர்களையோ நடிகைகளையோ, பொதுநிகழ்ச்சிகளில் எங்காவது பார்த்தால், ஒரே ஒரு செல்ஃபி தட்டி, உடனே சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்துவிட முடிகிறது. இந்த செல்ஃபிகளுக்கெல்லாம் முன்பு, ரசிகர்களுக்கும் கலைஞர்களுக்கும் உணர்வுப் பாலமாக இருந்தது வேறொரு விஷயம். அது, ஆட்டோகிராஃப்!

செல்ஃபி யுகத்திற்கு முன்பு, பிடித்த கிரிக்கெட் வீரர், பிடித்த அரசியல் தலைவர், பிடித்த நடிகர் என தேடித்தேடி ஆட்டோகிராஃப் சேகரித்தன பல தலைமுறைகள். இப்படி நட்சத்திரங்களைத் தேடிப்போய் ஆட்டோகிராஃப் வாங்குபவர்கள் மட்டுமன்றி, அவர்களுக்கே, `அன்புடன்' கடிதம் எழுதி ஆட்டோகிராஃபும், போட்டோவும் கேட்பவர்களும் இருந்தனர். அன்பான ரசிகர்களுக்கு, அவர்கள் கேட்கும்போதெல்லாம் புகைப்படங்கள் அனுப்புவதை பல முன்னணி நடிகர்களும் ஒருகாலத்தில் வழக்கமாக வைத்திருந்தனர். சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய் சங்கர், பத்மினி, ஹேமமாலினி எனப் பலரது வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் இப்படி ரசிகர்களின் அன்புக் கோரிக்கைகள் வரும். அப்படி அவர்கள் அனுப்பும் ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னும் ஏதேனும் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அதைத் தன் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், 1969-ம் ஆண்டு புதிய தொடர் ஒன்றை ஆரம்பித்தது ஆனந்த விகடன். `ஆட்டோகிராஃப் போட்டோகிராஃப் சொல்லும் கதை' என்பதுதான் அதன் தலைப்பு.

இதன் சிறப்பே நடிகர்களை, அவர்களின் ரசிகர்களுக்கு அனுப்பும் புகைப்படங்களில் மிகவும் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுக்கச் செய்து, அந்தப் புகைப்படம் ஏன் பிடித்தது என்பது பற்றிய விளக்கத்தையும் வாராவாரம் வெளியிடுவதுதான். இந்தத் தொடரின் ஆரம்பமே ஹேமமாலினிதான். புதிய தொடர் குறித்து 1969ல் விகடனில் வெளிவந்துள்ள அறிமுகம்...

17/08/1969 ஆனந்த விகடன் இதழிலிருந்து...

புகழ்பெற்றவர்களிடமிருந்து, அதிலும் குறிப்பாகக் கலைஞர்களிடமிருந்து, `ஆட்டோகிராஃப்' வாங்குவதில் ரசிகர்களுக்குள்ள உற்சாகம் அபூர்வமானது. அதைப்போல், தம் ரசிகர்களுக்காக சிறந்த புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவதில் கலைஞர்கள் காட்டும் ஆர்வமும் அபூர்வமானதுதான்.

அப்படி அனுப்பப்படும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும்; அந்தப் புகைப்படத்தை எடுத்த சூழ்நிலை, எடுத்த புகைப்படக்கலைஞரைப் பற்றிய விவரம், அந்த குறிப்பிட்ட புகைப்படம் மட்டும் அக்கலைஞருக்கு விசேஷமாகப் பிடித்ததற்கான காரணம்... இப்படி எத்தனையோ சுவையான செய்திகள்.

அவற்றை இனி வாசகர்கள் விகடனில் வாரம்தோறும் தொடர்ந்து படிக்கலாம். பிரபலக் கலைஞர்களின் `ஆட்டோகிராஃப்' போட்டோக்களும் (கையெழுத்திடப்பட்ட புகைப்படங்கள்) அவற்றைப் பற்றிய சுவையான செய்திகளும் தொடர்ந்து வெளியாகும்.

தமிழகத்தில் பிறந்து, வடநாட்டிலும் புகழ்க்கொடி நாட்டிவரும் பிரபல நடிகை ஹேமமாலினியின் `ஆட்டோகிராஃப்' கதையுடன் இப்பகுதி ஆரம்பமாகிறது.

இந்தத் தொடரில் சிவாஜி, ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, பத்மினி, ஜெய் சங்கர், சோ, வெண்ணிற ஆடை நிர்மலா, மனோரமா எனப் பல பிரபலங்களும் அவர்களின் பிடித்த புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, அது ஏன் பிடித்தது என்பது பற்றியும் பேசியிருக்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு சுவாரஸ்யம்.

ராமும், பிரபுவும் பரீட்சையில் பாஸ் செய்த சந்தோஷத்தில், நேராக பூஜையறைக்குச் சென்று கடவுளை வணங்கியிருக்கிறார் சிவாஜி. பிள்ளைகளின் கல்விக்காக நன்றி சொல்லிவிட்டு, அதே சந்தோஷத்தில் வெளியே வந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அவரின் நண்பர் மாசிலாமணி எடுத்த புகைப்படம்தான் இந்தக் கட்டுரையில் இருப்பது. ஜெமினி கணேசனும், தன் மகள் நாராயணி பி.யூ.சி பாஸ் செய்த சந்தோஷத்தில் இருந்தபோது, கொடுத்த போஸ்தான் அவருக்குப் பிடித்ததாம். இதைவிட சுவாரஸ்யம், ஜெய் சங்கருடையதுதான். ஆட்டோகிராஃப் கேட்ட தன் ரசிகர்களுக்கு, அந்தக் காலத்தில் `செல்ஃபி'யே எடுத்துக்கொடுத்திருக்கிறார் அவர். அதாவது, கேமாராவை வைத்து தன்னைத் தானே படம் எடுத்துக்கொண்டிருக்கிறார் மனிதர்.

பத்மினிக்கோ, மேக்கப்பே இல்லாமல் அவரின் தங்கை ராகிணி எடுத்த படம்தான் பிடித்ததாம். இதில், சௌகார் ஜானகியின் கதை இன்னும் சுவாரஸ்யம். சமீபத்தில் எடுத்த படம் ஒன்றைக் கேட்டு அவரின் ரசிகர் ஒருவர் கடிதம் எழுத, இவரும் ஒரு படம் அனுப்பிவைத்திருக்கிறார். ஆனால், அந்த ரசிகர் தாத்தாவோ (அதான் 51 வருஷம் ஆயிடுச்சே!) உடனே அதைத் திருப்பி அனுப்பிவிட்டு, கோபமாக ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார். அதில் அவர் சொன்னது, `லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டாவைக் கேட்டா, சின்ன வயசு போட்டோவை எனக்கு அனுப்புறீங்களே?'

இவர்கள் அனைவரும் போட்டோவுக்குப் பின் உள்ள சுவாரஸ்யத்தைச் சொன்னால் மனோரமாவோ, அந்த போட்டோவை விகடனுக்குக் கொடுத்த கதையே சுவாரஸ்யமாகச் சொல்லி வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரின் பிறந்தநாளான இன்று அந்தப் புகைப்படமும், அவர் சொன்ன அந்தக் கதையும் இங்கே... #VikatanOriginals-ல்...

26/10/1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...

``அடியாத்தே! யென்ன அப்படி பாக்குறீக..? நான்தே... மனோரமா! ஆட்டோவோ போட்டோவோ... என்னமோ கேட்டாக..! ஒண்ணும் புரியலை..! வெளக்கம் கேட்டா, கையெழுத்து போட்ட போட்டா படம் வேணும்ன்னாக!

`அதேன், தெனமும் பயாஸ்கோப்லே பாக்கிறீகளே..! இன்னும் எதுக்கு போட்டா'ன்னு நான் ஜொன்னேன்! அவுக விடறாகளா! அடியாத்தே..! விடமாட்டாகளே... தொரத்துராக!

யென்ன வண்றது? ஆராவது கேட்டா, ஒண்ணு ரெண்டு போட்டா அனுப்பலாம்... அம்புட்டுத்தே! அம்புட்டு பேருக்கும் அனுப்ப யெங்கிட்ட போட்டா என்ன, கொட்டியா கெடக்குது..?

26/10/1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
26/10/1996 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

யென்ன? `இவ போட்டாவிலே ரெண்டு சடை போட்டு `ஸ்டெய்லா' இருக்கா... பேச்சு மட்டும் இப்படி இருக்குதே'ன்னு பாக்குறீகளா? அது அப்படிதேன்!

இவக பத்திரிகைக்கு ஒரு போட்டா கேட்டாக... ஒண்ணே ஒண்ணு கொடுத்தேன். எப்படியிருக்குதுங்கறேன். நல்லா... அளகா இல்லே... எ...ன்...ன... என்ன அப்படி பாக்குறீக... நான் போட்டாவைச் சொல்லலை! என் கையெழுத்தை ஜொல்றேன், அம்புட்டுத்தேன்!"