Published:Updated:

மாத்தி யோசி... தொழிலை மதி... சச்சின் சரித்திரம் கற்றுத்தரும் 7 பாடங்கள்! #VikatanOriginals

சச்சின்
சச்சின் ( Illustration: Hasif Khan )

கிரிக்கெட்டில் அறிமுகமான காலம் முதல் டி-20 டிரெண்ட் வரை தனது தகுதி, திறமைகளை அப்டேட் செய்துவந்த சச்சினிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.

1998-ம் ஆண்டு சென்னை டெஸ்ட்டில் சச்சினின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தபோது, அந்த அணியின் கேப்டன் மார்க் டெய்லர் சொன்ன வார்த்தைகள் இவை.

நாங்கள் இந்தியாவுக்கு எதிராகத் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் என்னும் தனி மனிதருக்கு எதிராகத் தோல்வி அடைந்திருக்கிறோம்!
மார்க் டெய்லர், 1998

இந்திய கிரிக்கெட்டில் `சச்சின் சகாப்தம்' எத்தனை அழுத்தமானது என்பதை உணர்த்தும் ஓர் உதாரணம் இது!

கிரிக்கெட்டில் அறிமுகமான காலம் முதல் டி-20 டிரெண்ட் வரை தனது தகுதி, திறமைகளை அப்டேட் செய்துவந்த சச்சினிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.

1. இறுதி வரை போராடு!

16 வயதில் பொடியனாக பாகிஸ்தான் மைதானத்துக்குள் நுழைந்தபோது, முதல் போட்டியில் 15 ரன்கள் அடித்த சச்சின், வக்கார் யூனிஸ் பந்தில் க்ளீன் போல்ட். ``நான் என்னென்ன திட்டங்களோடு மைதானத்துக்குள் நுழைந்தேனோ, அது எதுவுமே நிறைவேறவில்லை. `கிரிக்கெட் விளையாட நான் தகுதியானவன் அல்ல' என்று அப்போது தோன்றியது. அந்த எண்ணமே என்னை மிகவும் சோர்வுறச் செய்தது. ஆனால், இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன் என்ற பாசிட்டிவ் சிந்தனையால் அந்தச் சோர்வை விரட்டினேன். அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே 59 ரன்கள் அடித்தேன். அந்த பாசிட்டிவ் எண்ணம் அன்று தோன்றாவிட்டால், இன்று இந்த சச்சினே இல்லை!'' - இந்த நேர்மறைச் சிந்தனை அவருக்கு மட்டுமல்ல... நம் அனைவருக்குமே அவசியம் தேவை!

2. மாத்தி யோசி!

டான் பிராட்மேன், விவ் ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ், ப்ரையன் லாரா, ராகுல் டிராவிட்... என பல பேட்ஸ்மேன்களை உருவாக்கியிருக்கிறது கிரிக்கெட். ஆனால், சச்சினின் ஆட்டத்தில் உள்ள கச்சிதமான நுணுக்கத்தை மற்றவர்களின் ஆட்டத்தில் முழுமையாகப் பார்க்க முடியாது. மேற்கு இந்திய வீரர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் வாகான பந்துகளை முரட்டுத்தனமாக அடித்து ஆடுவதும், அடிக்க ஏதுவாக இல்லாத பந்துகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதுமான பாணியைப் பின்பற்றுவார்கள். ஆனால், தவறான பந்துகளைத் தண்டித்தும் மற்ற பந்துகளை ஃபீல்டர்களுக்கு இடையில் தள்ளிவிட்டு `கேப்பில் கிடா வெட்டும்' ஆட்டத்தை அறிமுகப்படுத்தி, அதை `வெற்றி யுக்தி'யாக மாற்றியவர் சச்சின்.

Sachin Tendulkar
Sachin Tendulkar
#VikatanOriginals

3. கடந்து செல்!

விமர்சனங்களை எப்படிக் கையாள்வது என்பதையும் சச்சினிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சி, `கடவுள்' என புகழ்ந்தாலும் சரி, `சுயநலமாக ஆடுகிறார்', மோசமான ஃபார்ம் காரணமாக `எண்டுல்கர்' என விமர்சித்தாலும் சரி, எதையும் ஒரு சின்னப் புன்னகையோடு கடந்துவிடுவார் சச்சின். அதுவும், இதுவும், எதுவும் கடந்துபோகும் என்பது சச்சினுக்குத் தெரிந்திருக்கிறது!

4. ஒழுங்கு கடைப்பிடி!

உலகக்கோப்பை தொடர் தோல்விகள், தோள்பட்டை - முதுகு காயங்கள், முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனங்கள், கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கம்... என சச்சினின் 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் கசப்பான பல சம்பவங்களும் அடக்கம். ஆனால், ஒருமுறைகூட அவர் நிதானம் தவறிப் பேசியதில்லை. மைதானத்தில் யாரையும் பார்த்து முறைத்ததில்லை. பந்து வீச்சாளர்களுக்கு கெட்டவார்த்தைகளால் பதில் சொன்னதில்லை. நடுவர்களைத் திட்டி வெளியேறியதில்லை. பேட்டிகளில் எந்த வீரரையும் குறை சொன்னதில்லை என சச்சினின் பேட்டிங் மட்டுமல்ல, அவர் ஆட்டத்தில் கடைப்பிடித்த ஒழுங்குதான் உலகம் முழுக்க அவருக்குப் பல கோடி ரசிகர்களை உருவாக்கியது. நாம் ஒவ்வொருவரும் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டியது இதைத்தான்.

5. தொழிலை மதி!

டென்னிஸ், கால்பந்து, தடகளம் எனப் பல்வேறு விளையாட்டுகளில் பல காலம் கோலோச்சிய வீரர்கள் இருக்கிறார்கள். சாதனைகள் படைக்கும் வேகத்தில் அவர்கள் சறுக்கிய வரலாறு அதிகம். போதைமருந்து சர்ச்சைகள் முதல் பெண் சகவாசங்கள் வரை பல்வேறு காரணங்களால் தடம் தெரியாமல் பல வீரர்கள் அழிந்திருக்கிறார்கள். ஆனால் சச்சின், கிரிக்கெட் ஆடிய 24 ஆண்டுகளும் உச்சத்தில்தான் இருந்தார். காரணம், அவர் கிரிக்கெட்டை பேட்டால் விளையாடியவர் அல்ல... இதயத்தால் விளையாடியவர். ஆம், உங்கள் தொழிலை இதயத்தால் அணுகுங்கள். நேசியுங்கள். மதிப்புக் கொடுங்கள்.

6. மீளத் தயாராயிரு!

டென்னிஸ் எல்போ பிரச்னையால் சச்சின் சிக்கித்தவித்தபோது `எண்டுல்கர்' எனத் தலைப்பிட்டு ஆங்கில நாளிதழ் ஒன்று முதல் பக்க செய்தி வெளியிட்டது. ஒட்டுமொத்த மீடியாவும் அவர் ஓய்வுபெறலாம் என கட்டுரைகள் வெளியிட்ட நேரம் அது. ``சிகிச்சை முடிந்ததும் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ஆனால், என்னால் சரியாக விளையாட முடியவில்லை. அந்த நேரம் மனம் உடைந்துவிட்டேன். தூக்கம் வராமல் தவித்தேன். விடியற்காலை 3 மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கொண்டு மும்பை வீதிகளில் தனியாகச் சுற்ற ஆரம்பித்தேன். என்னால் ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை. `கடவுளே என்னை கிரிக்கெட் விளையாட விடு. இல்லையென்றால் கொன்றுவிடு. கிரிக்கெட் விளையாடாமல் என்னால் ஒரு நாள், ஒரு நிமிடம்கூட இருக்க முடியாது' எனக் கதறி அழுதேன்" என்று குறிப்பிட்டார்.

``கிரிக்கெட்டைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது'' என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் சச்சின். டென்னிஸ் எல்போ காயத்திலிருந்து மீள கடுமையாகப் போராடினார் சச்சின். அறுவைசிகிச்சைகள் முடிந்ததும் உடனே விளையாடவும் வந்துவிட்டார். பேட்டின் எடையைக் குறைத்து, ஆட்டத்தின் ஸ்டைலை மாற்றி, புதிய ஸ்ட்ரோக்குகளை விளையாட முயன்று என மீண்டும் ஜீரோவில் இருந்து ஆரம்பித்தார் சச்சின். டென்னிஸ் எல்போ காயத்துக்குப் பிறகுதான் கிரிக்கெட்டில் பல உச்சங்களைத் தொட்டார். ஆம், நம் சரிவுகளில் இருந்து மீளத் தயாராக இருக்க வேண்டும் எப்போதும்.

சச்சின்
சச்சின்
#VikatanOriginals

7. பயிற்சி தவறேல்!

``பல சதங்கள் அடித்திருக்கிறேன். பல சாதனைகள் படைத்திருக்கிறேன். ஆனால், வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் வீரநடை நடந்திருக்கிறேன். ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து இந்தியாவை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற வைத்தப் பிறகு வீரநடை நடந்து பெவிலியனுக்குப் போனேன். அப்போது என் மனதில் நான் ஒரு விவியன் ரிச்சர்ட்ஸ் போல உணர்ந்தேன்'' என்று சொல்லியிருக்கிறார் சச்சின். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பிரையன் லாராவின் சாதனையைக் கடந்தபோது சச்சின் இப்படிச் சொன்னார், ``வெற்றி என்பது ஒரு பயணம். அதன் நடுவில் கற்கள் வீசப்படும். அதை மைல்கற்களாக மாற்றக் கற்றுக்கொண்டால் தொடர்ந்து வெற்றிபெறலாம்'' என்றார்.

ஒரே அலுவலகத்தில் நீண்டகாலம் வேலை செய்பவர்களுக்கு வேலையில் ஒருவிதமான சலிப்பு ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கும் இது அடங்கும். ஆனால், 24 ஆண்டுகளாக எந்தவிதமான சலிப்பும் இல்லாமல் புதிதாகக் களம் இறங்கும் பேட்ஸ்மேனைப்போல் ஆடுவது சச்சினின் சுபாவம். கிரிக்கெட் மைதானத்தில் எந்தப் பக்கமாகவும் ஷாட்டுகளை அடிக்கும் திறன் படைத்த சச்சின், ஓய்வுபெறும் நாள் வரை நெட் பிராக்ட்டீஸ்களைத் தவறவிட்டதில்லை. காயங்களால் அவதிப்பட்ட சச்சின் பலமுறை ஃபார்ம் இல்லாமல் திணறியிருக்கிறார். ஆனால், மீண்டும் அவர் சதங்கள் அடிக்க அவருக்கு துணை நின்றது எக்காரணத்தைக்கொண்டும் அவர் பயிற்சியை விடாததுதான். இதுவும் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

- சார்லஸ் | விகடன் இதழ்களில் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதிய கட்டுரைகளிலிருந்து...
அடுத்த கட்டுரைக்கு