Published:Updated:

பொக்ரான் அணுகுண்டு சோதனை: அதிர்ந்த வீடுகள், குழம்பிய மக்கள்- 1998இல் நடந்தது என்ன? #VikatanOriginals

பொக்ரான் கட்டுரை
பொக்ரான் கட்டுரை ( #VikatanOriginals )

இந்த பொக்ரான் - II பரிசோதனையின் ஆராய்ச்சியில் அங்கம் வகித்த முக்கியமானவர்களில் இருவர் தமிழர். ஒருவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்; இன்னொருவர் விஞ்ஞானி ஆர்.சிதம்பரம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2019... நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, இரண்டாவது முறையாக பொறுப்பேற்று அடுத்த இரண்டே மாதங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அதன் அதிர்வுகள் ஓய்வதற்கு முன்பாகவே, குடியுரிமைத் திருத்தச்சட்டம் என்ற அடுத்த வெடியைக் கொளுத்தியது. ஆட்சிக்கு வந்து அடுத்த சில மாதங்களில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளும், இதன் விளைவுகளும் தேசம் முழுக்க எதிரொலித்தன. ஆனால், 1998-ல் பதவியேற்ற வாஜ்பாய் தலைமையிலான அரசு, இதைவிடவும் குறைவான காலத்தில் ஒரு விஷயத்தைச் செய்தது. அதன் அதிர்வுகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகெங்கிலும் எதிரொலித்தன. அந்த சம்பவம்தான் பொக்ரானில் 1998-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற அணுகுண்டு சோதனை.

இப்படியொரு சோதனை நடைபெற்றதை பிரதமர் வாஜ்பாய் அறிவித்ததுமே, அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகள் இந்தியாவைக் கண்டித்தன. உடனுக்குடனாக பொருளாதாரத் தடைகளும் விதித்தன. உள்நாட்டு மக்களிடையே இந்த அணுஆயுத பரிசோதனை வரவேற்பு பெற்றாலும், எதிர்க்கட்சிகளிடையேயும், உலக நாடுகள் மத்தியிலும் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. `ஆட்சிக்குவந்து 2 மாதங்களுக்குள்ளாக இவ்வளவு வேகமாக இப்படியொரு சோதனை நடத்தவேண்டிய அவசியம் என்ன?' என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. அத்தனைக்கும், ``தேச நலன்; தேசப் பாதுகாப்பு" என்ற இரண்டை மட்டும் பதிலாகத் தந்தது அரசு. ஒருபக்கம் இப்படி விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும்கூட, இதை வல்லரசு நாட்டிற்கான ஒரு கனவாக நினைத்து மக்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். இந்த முடிவை வரவேற்றார்கள். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் குறியீடாக அந்நாள் மாற்றப்பட்டது. அதன்படிதான், ஒவ்வோர் ஆண்டும் மே 11-ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த பொக்ரான் - II பரிசோதனையின் ஆராய்ச்சியில் அங்கம் வகித்த முக்கியமானவர்களில் இருவர் தமிழர். ஒருவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்; இன்னொருவர் விஞ்ஞானி ஆர்.சிதம்பரம்.

தேசமே திரும்பிப் பார்த்த இந்த சம்பவம் குறித்து 1998-ல் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது விகடன். விஞ்ஞானி சிதம்பரம் மற்றும் அப்போதைய கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குநர் பிளாசிட் ரோட்ரிக்ஸ் ஆகிய இருவரும் இந்த சம்பவம் குறித்து அதில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் பதிவு இங்கே... #VikatanOriginals-ல்...

24/05/1998 ஆனந்த விகடன் இதழிலிருந்து...

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், பூமிக்கு அடியில் ரகசியமாக வெடிக்கப்பட்ட அணுகுண்டு... இந்தியர்கள் அத்தனை பேரையும் பெருமையோடு நிமிர்ந்து உட்காரவைத்திருக்கிறது.

உலக வரைபடத்தில் இருக்கும் அத்தனை நாடுகளும் தன்னை உன்னிப்பாகக் கவனிக்கும்படி செய்திருக்கிறது இந்தியா. இந்தச் சாதனையை நிகழ்த்தியதில் விஞ்ஞானி அப்துல் கலாமையும், அனில் கத்கரையும் போலவே, இன்னும் இரண்டு பேர் முக்கியமானவர்கள். ஒருவர் - விஞ்ஞானி ஆர்.சிதம்பரம். இன்னொருவர், பிளாசிட் ரோட்ரிக்ஸ். இதில், சிதம்பரம் தமிழ்நாட்டுக்காரர். ரோட்ரிக்ஸ் தமிழ்நாட்டில் வசிப்பவர்.

பிரதமர் வாஜ்பாயிலிருந்து உலகின் முன்னணி அணு விஞ்ஞானிகள் அத்தனை பேராலும் பெரிதும் மதிக்கப்படுபவர் சிதம்பரம்.

பத்மஶ்ரீ சிதம்பரம் பிறந்தது திருச்சியில். படித்தது மயிலாப்பூர் பி.எஸ். சீனியர் செகண்டரி ஸ்கூலில். கல்லூரிப் படிப்பு சென்னை மாநிலக் கல்லூரியிலும் பெங்களூர், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸிலும். பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராக உயர்ந்திருப்பவர் சிதம்பரம்.

சிதம்பரத்தின் தந்தை ராஜகோபால், இந்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்றியவர். தந்தையைப் போலவே சிதம்பரத்தின் ரத்தத்திலேயே தேசபக்தி உணர்வு கலந்திருப்பது, அவரிடம் பேசும்போது தெரிகிறது. அவர் பேச்சில் இருக்கும் தெளிவும் கூர்மையும் நம்மைக் கவர்ந்தன. வெடிக்கப்பட்ட அணுகுண்டு பற்றி விஞ்ஞானரீதியான தகவலை எதிர்பார்த்த நமக்கு, மும்பையிலிருந்து டெலிபோனில் அவர் கொடுத்த பேட்டி, சித்தாந்த ரீதியானது.

24/05/1998 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
24/05/1998 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

``நம் நாடு மிகப்பெரிய நாடு. நிலப்பரப்பை மட்டும் வெச்சு இதை நான் சொல்லலை... அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம்னு எல்லாத்தையும் வெச்சுத்தான் சொல்றேன். இப்ப நாம் செஞ்சிருக்கிற சோதனையைச் செய்யறதுக்கான திறமை, தகுதியெல்லாம் எப்பவோ நமக்கு வந்தாச்சு. ஆனா, இப்பத்தான் இந்தச் சோதனையைச் செஞ்சிருக்கோம். நம் நாட்டின் இந்த சாதனையை நினைச்சு நாம பெருமைப்படணும். சந்தோஷப்படணும்... அதை விட்டுட்டு, `இப்ப இது தேவையா?'னு அரசியல் பேசக்கூடாது. ஒரு நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் மாதிரி. நாடு வெறுமனே வளர்ச்சியடைந்தால் போதுமா..? பாதுகாப்பு தேவையில்லையா..?" என்று அமைதியாகக் கேட்டார் சிதம்பரம்.

``எப்படிச் சொல்றதுன்னே தெரியலை... இவர், அணுகுண்டுச் சோதனை நடத்துறதுக்காக ராஜஸ்தான் போறார்னோ, இப்படி ஒரு சாதனை நடக்கப்போகுதுன்னோ எனக்கு துளிகூட தெரியாது. ஏதோ கான்ஃபரன்ஸ் இருக்குனு டெல்லி போறதா சொன்னார். எப்போ திரும்பி வருவீங்கன்னு கேட்டதுக்கு பதில் சொல்லலை. அணுகுண்டுச் சோதனை நடந்த பிறகுதான், இப்படி ஒரு சமாசாரம் நடந்ததே எனக்குத் தெரிஞ்சது. என்கிட்டே இதுபத்தி அவர் சொல்லவே இல்லையேன்னு குழந்தைத்தனமா எல்லாம் கோபப்படலை. உலகமே வியக்கிற அளவுக்கு ஒரு விஷயத்தை நம்ம நாடு செஞ்சிருக்கு. அதுல எங்க வீட்டுக்காரரும் பங்கெடுத்திருக்காருனு நினைச்சப்ப ரொம்பப் பெருமையா இருந்தது!" என்றார் சிதம்பரத்தின் மனைவி செல்லம்மாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நமது இந்திய அரசு வல்லரசாக மாறியிருப்பதற்கு மிக முக்கியக் காரணம், கல்பாக்கம் அனல் மின்நிலையம்! பரிசோதனை ரீதியில் ராஜஸ்தானில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு தயாரானதே இந்த கல்பாக்கம் அனல் மின்நிலையத்தில்தான். இதன் இயக்குநர் பிளாசிட் ரோட்ரிக்ஸ், உலகப் புகழ்பெற்ற அணுசக்தி ஆராய்ச்சியாளர்.

ராஜஸ்தானில் வெடித்த அணுகுண்டுகளைத் தயாரித்த அத்தனை விஞ்ஞானிகளும் புடைசூழ அமர்ந்திருந்த ரோட்ரிக்ஸிடம் நமது கேள்விகளையும் சந்தேகங்களையும் கொட்டினோம். ரோட்ரிக்ஸ் பேசுவது எதுவானாலும் சர்வதேச அளவில் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பிவிடக்கூடும். அதனால் அவர் வார்த்தைகளைக்கூட மிகக் கவனமாகக் கையாண்டார். பல கேள்விகளுக்கு நாட்டின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, ``இதைத் தவிர்த்துவிடலாமே.." என்றார்.

``இந்தியா அணுகுண்டுச் சோதனை நடத்த தேர்ந்தெடுத்த இந்த நேரம் சரிதானா..? அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளால் அறிவிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளால் நாடு பாதிப்படையாதா..?"

- மூப்பனாரிலிருந்து பல அரசியல் தலைவர்கள் அவரை, கடந்த ஒரு வாரமாக மாறி மாறி எழுப்பும் கேள்வியை விஞ்ஞானி ரோட்ரிக்ஸின் முன் வைத்தோம்.

``இந்தத் தடைகளால் அதிகபட்சமா என்ன பாதிப்பு வந்துடும்..? கோகோ கோலா, பெப்ஸி கோலா, கெல்லாக்ஸ், கென்டகி சிக்கன், மேக்டோனால்ட் எல்லாம் நமக்குக் கிடைக்காது. அவ்வளவுதானே? இந்த அயிட்டமெல்லாம் நமக்குத் தேவையோ இல்லையோ... ஆனா, அவங்களுக்கு நாம தேவை, நம் நாட்டின் மார்க்கெட் தேவை! `இதையெல்லாம் உங்களுக்குக் கொடுக்க மாட்டோம்'னு அவங்க எடுத்துட்டுப் போனாதான் என்ன..? குடியா மூழ்கிப் போயிடும்... அணுகுண்டு செய்யத் தெரிஞ்ச நமக்கு கென்டகி சிக்கனும், கெல்லாக்ஸும் செய்யத் தெரியாதா..?

அப்புறம் என்ன கேட்டீங்க... `இப்ப இது அவசியமா..?' இதுவே ரொம்ப லேட்! இப்ப வெடிக்கப்பட்ட அணுகுண்டுகளைத் தயாரிக்கும் ஆயத்த ஆராய்ச்சி வேலைகள், 1974-ம் ஆண்டு இந்திய முதல் அணுகுண்டு சோதனை நடத்தியபோதே தொடங்கிவிட்டது!" என்றார் ரோட்ரிக்ஸ்.

``இந்த அணுகுண்டுச் சோதனையை உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரி விமர்சிக்கிறதே..?"

``வீட்டில் நாய் வளர்க்கிறதையோ அல்லது `நாய்கள் ஜாக்கிரதை' போர்டு மாட்டறதையோ, அடுத்தவர்களைப் பயமுறுத்தவா செய்யறோம்..? நம்ம பாதுகாப்புக்குத்தானே செய்யறோம்? அணுகுண்டுச் சோதனையும் இதே மாதிரிதான். இது நம்முடைய பாதுகாப்புக்காக நாம் எடுத்திருக்கிற நடவடிக்கை... அவ்வளவுதான்!"

``அப்படியென்றால், நமது அணுகுண்டுச் சோதனையைப் பார்த்து சில நாடுகள் ஏன் இப்படி எகிறிக் குதிக்கின்றன..?"

``நீங்க முதல்ல மாட்டு வண்டி வெச்சிருந்தீங்க... பிறகு, மோட்டார் சைக்கிள் வாங்கினீங்க. இப்ப கார் வாங்கிட்டீங்க! இதைப் பார்க்கிற அடுத்த வீட்டுக்காரன் பொறாமைப்படத்தானே செய்வான்? நம்ம அணுகுண்டுச் சோதனையைப் பார்த்து, இப்ப சில நாடுகள் இப்படித்தான் பொறாமையால் பொசுங்கிட்டு இருக்கு... இதைப் பத்தி நாம கவலைப்படத் தேவையில்லை!"

24/05/1998 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
24/05/1998 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

அணு ஆயுதம் சப்ஜெக்ட் பற்றிப் பேசும்போதுகூட, இத்தனை எளிமையாகப் பேசும் ரோட்ரிக்ஸ் பிறந்தது கேரளாவில். இவர் வாங்கிக் குவித்திருக்கும் பட்டங்களுக்கும் விருதுகளுக்கும் கணக்கு வழக்கே இல்லை!

``சரி, இந்தச் சாதனைக்குக் காரணமானவர்களைப் பட்டியலிடுங்களேன்..." என்று அவரிடம் கேட்டோம்.

``இந்த வெற்றிக்கு வெறும் விஞ்ஞானிகள் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. இந்த அணுகுண்டுச் சோதனைக்குச் செலவான பணத்தை வரியாகக் கட்டிய பொதுமக்களிலிருந்து, சோதனை நடத்த பூமியில் பள்ளம் தோண்டிய தொழிலாளர்கள் வரை அத்தனை பேரும் இந்த வெற்றிக்குக் காரணமானவர்கள்.." என்றார் ரோட்ரிக்ஸ் கச்சிதமாக.

நிருபர்: எஸ். வைதேஹி, படங்கள்: பொன்.காசிராஜன்.

இது அவசியமா?

இந்திய அணு ஆயுதப் பரிசோதனை பற்றி சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.எம்.வாசகத்திடம் கருத்து கேட்டோம்.

``இந்தியாவை ஒரு துணைக் கண்டம்னுதான் சொல்றோம். ஐரோப்பாவைவிட நம் நாட்டில் மக்கள்தொகை அதிகம். தொழில்நுட்ப அறிவியல் வல்லுநர்கள் இங்கே ரொம்ப அதிகம். ஸோ, `அணுசக்தி'யிலும் நாம முன்னேற்றம் அடைஞ்சிருக்கோம். நம்ம நாட்டோட பாதுகாப்புக்குத்தான் நாம் முயற்சிக்கிறோமே தவிர, யாரையும் பயமுறுத்துவதற்கு அல்ல. இந்தியாவின் சொத்து என்றால், அது நமது அறிவியல் தொழில்நுட்ப அறிவுதான். இப்போ நாம நடத்திய அணுகுண்டுச் சோதனை எல்லாம் குறைந்த செலவில் செய்யப்பட்டவை. அடுத்தவர்களையே நம்பவேண்டிய அவசியம் நமக்கு கிடையாது. நீண்ட நாளாக வல்லுநர்கள் சேர்ந்து உழைத்த உழைப்பின் பலன் இது.

24/05/1998 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
24/05/1998 ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

`அடிப்படைத் தேவைகளான உணவும் குடிநீருமே இல்லை; அப்படி இருக்கும்போது, இப்போ இது அவசியமா?'னு கேக்கறாங்க. எல்லோரும் ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கணும். அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைவைத்து நாம் அணு ஆயுதச் சோதனை நடத்தவில்லை.

வெளிநாடுகளிடமிருந்து நாம் வாங்கியிருக்கும் கடனை கணக்குப் பார்த்தால், ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் இருநூறு டாலர் கடன் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக, நம் தொழில்நுட்ப அறிவைப் பணயம்வைக்க முடியுமா என்ன..?" என்றார்.

அணுகுண்டு வெடித்த பூமியில்...

கண்கொத்திப் பாம்பு போன்ற அமெரிக்காவின் செயற்கைக் கோள்களுக்கே கடுக்காய் கொடுத்துவிட்டு, பொக்ரானில் காதும் காதும் வைத்தது மாதிரி இந்திய விஞ்ஞானிகள் அணுகுண்டுச் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அணுகுண்டுச் சோதனை நடத்த பல நாள்களுக்கு முன்பே நமது நாட்டின் ராணுவ வீரர்கள் பொக்ரான் பாலைவனத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள கெப்டோலாய் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த மக்களிடம் வீட்டைக் காலி பண்ணச் சொன்னார்கள். அப்போது, அந்தக் கிராமத்து ஜனங்கள் பலர், என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியாமல் குழம்பினார்கள்.

சிலர், `ஏதோ பேய்கள் வீட்டுக்குள்ளே இருக்கு; அதை ஓட்டத்தான் நம்மை வெளியேத்தறாங்க...' என்றுகூட நினைத்தார்களாம்.

ஆனால், வயதான பெரியவர்களுக்கு ஏதோ மப்பாகப் புரிந்திருக்கிறது. 1974-ல் நடந்த அணுகுண்டுச் சோதனையை நினைவுபடுத்திக்கொண்ட அவர்கள், `மறுபடியுமா?' என்று சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்திருக்கிறார்கள். 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள லதி கிராமத்தைச் சேர்ந்த ராம் ஸ்வரூப் என்ற 21 வயது இளைஞர், ``முதல் மூன்று அணுகுண்டுச் சோதனைகளின்போது நான் பொக்ரானில் இருந்து 25 கிலோ மீட்டர் தள்ளியிருந்தேன். அப்போது, எங்கள் வீடுகள் எல்லாம் லேசாக ஆட, நிலநடுக்கம் வருகிறது எனப் பயந்து நாங்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தோம்" என்றார்.

கெப்டோலாய், லதி, சாச்சா, துலியா, பதாரியா, லோஹார்க்கி போன்ற கிராமங்களில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சரிசெய்யப்பட முடியாத அளவுக்கு விரிசல்கள் விழுந்துள்ளன. அந்தப் பகுதி கிராம மக்களுக்கு என்று இருக்கக்கூடிய ஒரேயொரு வாட்டர் டாங்க்கில் இருந்தும் தண்ணீர் `லீக்'காகிறது.

விரிசல் விழுந்த வீடுகளுக்கு அரசு நஷ்ட ஈடு தருவதாக வாக்களித்துள்ளது. என்னதான் விரிசல் விழுந்த வீடுகள் பற்றிய கவலை இருந்தாலும், கிராம மக்கள் ஒருபக்கம் வெற்றியைக் கொண்டாடும் சந்தோஷத்தில் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

கிராமத்து மக்கள் நிறைய உருளைக் கிழங்கையும் வெங்காயத்தையும் வண்டி வண்டியாக வாங்கிக் குவித்திருக்கிறார்கள். ஒருவேளை சோதனையின்போது பாதகம் விளைவிக்கக்கூடிய கேஸ் லீக் ஆனால், அதைக் குறைக்க உருளைக்கிழங்கும், வெங்காயமும் உபயோகப்படும் என்பது இங்கே ஒரு நம்பிக்கை! கிருஷ்ணன் என்கிற போஸ்ட் மாஸ்டர், ``கொஞ்ச நேரத்துக்கு காத்துல பறக்கற மாதிரி இருந்தது. நானூறு சதுர கிலோ மீட்டருக்கு நிலநடுக்கம் இருந்தது. ஆனா பிரதம மந்திரி, இந்தியா அணுகுண்டு வெடித்த வெற்றிச் செய்தியை அறிவித்தபோது, நிலநடுக்கம் என்கிற பயம்போய் சந்தோஷம் வந்துடுச்சு. மக்கள் எல்லாம் உற்சாகத்துல குதிக்க ஆரம்பிச்சாங்க. ஒருத்தருக்கொருத்தர் ஸ்வீட்ஸ் கொடுத்து, இந்த சந்தோஷத்தைக் கொண்டாடினாங்க!" என்றார் பூரிப்பாக.!

- ராஜஸ்தானிலிருந்து கே.காந்த்

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ... https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு