Published:Updated:

ஓர் இரவு முழுக்க கெடுபிடி... அமெரிக்காவிலிருந்து எம்.ஜி.ஆர். திரும்பியபோது என்ன நடந்தது? #VikatanOriginals

1985-ல் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர்
1985-ல் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர் ( From Vikatan Archives )

35 வருடங்களுக்கு முன்பு இதேநாளில்தான் அமெரிக்க சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பினார் எம்.ஜி.ஆர். பல மாதங்கள் கழித்து மேடையில் தோன்றியவரை உணர்ச்சிப் பூர்வமாக வரவேற்றனர் அன்றைய ரத்தத்தின் ரத்தங்கள். அந்த உணர்வுக் குவியலின் செய்தித் தொகுப்பு.

1984-ம் வருடம்... எம்.ஜி.ஆர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு மாதங்களாயிற்று; இங்கிருந்து அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டே மூன்று மாதங்களாயிற்று. அதே உடல்நலத்துடன் திரும்பி வருவாரா? அதே உற்சாகம் அப்படியே இருக்குமா? கட்சியிலேயே பாதிபேருக்கு இதில் நம்பிக்கை இல்லை; இத்தனைக்கும், ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோது அவர்குறித்த தகவல்கள் ரகசியம் காக்கப்பட்டதுபோல அன்றைக்குப் பெரிதாக ரகசியமெல்லாம் எதுவும் இல்லை. அவ்வப்போது எம்.ஜி.ஆரின் உடல்நலம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. இருந்தும் எம்.ஜி.ஆர் மீண்டும் இங்கு திரும்பிவரும் வரையிலும் பதற்றம் தணியாது காத்திருந்தனர் அன்றைய அ.தி.மு.க.வின் ரத்தத்தின் ரத்தங்கள். இறுதியாக 1985-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி அவர் சென்னை வருவதாகத் தகவல் வெளியானது. பரங்கிமலையில் ஒரு திடலில் மக்கள் முன்பு தோன்றுவதாக முடிவானது. இத்தனை மாதங்கள் கழித்து, தங்கள் தலைவரைக் காணப்போகிறார்கள்; தொண்டர்களின் ஏக்கத்தையும் ஆர்வத்தையும் சொல்லவா வேணும்? வீதி நெடுக நிரம்பியிருந்தது ஜனத்திரள்.

கூட்டத்தில் வி.ஐ.பிகளுக்கே ஏகப்பட்ட கெடுபிடிகள்; இந்நிலையில் பத்திரிகையாளர்களின் கதி? கொஞ்சம் கடினம்தான். அத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்தக் கூட்டத்தின் உணர்ச்சிகளை களத்திலிருந்து பதிவுசெய்திருக்கிறார் அன்றைய விகடனின் நிருபர். காலை நடக்கவிருந்த கூட்டத்திற்கு முதல் நாள் இரவே சாதம் கட்டிக்கொண்டு கிளம்பி வந்திருந்த மக்கள் முதல் கீழே விழுந்தாலும் எம்.ஜி.ஆர் மீதிருந்து இமை விலகாது பார்த்துக்கொண்டிருந்த `பக்தர்கள்' வரை... அந்த ஒரு இரவில், அத்தனை உணர்ச்சிகள்... அந்தப் பதிவு அப்படியே உங்களுக்காக...

13/02/1985 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழிலிருந்து...

பிப்ரவரி மூன்றாம் நாள். ஞாயிறு மாலை ஆறு மணியிலிருந்தே சென்னை நகரம் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது. வழக்கத்திற்கதிகமான கார்கள், லாரிகள்... எக்கச்சக்கப் புதுமுகங்கள்...

சென்னைவாசிகள்கூட மாலை ஏழு மணிக்கே ஒரு போர்வை, கட்டுச்சாதம் சகிதம் புறப்பட்டனர். எல்லோர் பயணமும் சென்னை பரங்கிமலையிலுள்ள மொகைத் திடலை நோக்கிதான். எல்லோர் ஆவலும் `தமிழக முதல்வரை தரிசிக்கவேண்டும்' என்பதுதான்!

நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? எட்டு மணிக்கெல்லாம் கிண்டி போய் விட்டோம். விழா நடக்கும் திடல் இங்கிருந்து 2 பர்லாங் தொலைவிலிருந்தது. ஆனாலும் இங்கேயே நல்ல கூட்டம்.

``எம்.ஜி.ஆரு...எம்.ஜி.ஆர்...

எமனைக் கொன்ன எம்.ஜி.ஆர்."

``ஏழைகளின் தெய்வமாம்,

எம்.ஜி.ஆர். நம்ப ஆண்டவர்!"

என்று கோஷமிட்டபடி ஒரு கோஷ்டி ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி திடலுக்குச் சென்றார்கள். மற்றொரு கோஷ்டியில், ஒருவர் தலையில் ஒரு மண்பானையைக் கைபிடிக்காமல் டான்ஸ் ஆடியபடி வந்தார். பானையில் `சரக்கு' இருக்கிறதாம்!

``ஜெய்..ஜெய்.. எம்.ஜி.ஆர்.

ஜெயிச்சிட்டாரு எம்.ஜி.ஆர்."

என்று பாடியபடி ஒரு கோஷ்டி, அக்கோஷ்டியின் முன்னணியில் ஓர் இளைஞர் உடம்பெல்லாம் விபூதி பூசியபடி, முகத்தில் ரோஸ் பவுடரை அடித்துக் கையில் அ.தி.மு.க கொடி ஒன்றைப் பிடித்துக்கொண்டு போக, கூட்டம் பின்தொடர்ந்து சென்றது. கூட்டத்தின் கடைசியில் இரண்டுபேர் ஆளுக்கொரு பெரிய சைஸ் செம்பைக் குலுக்கியபடி வசூல் செய்தபடி சென்றனர். காணிக்கையாம்! யாருக்கு, எதற்கு என்ற விவரத்தை யாரும் கேட்காமல் வாரி வாரி வழங்கினர். ஒரு ஆசாமி நூறு ரூபாய் நோட்டொன்றைப் போட்டார்!

நெல்லிக்காய் வியாபாரி ஒருவர் ``எம்.ஜி.ஆரின் இதயக்கனி..." என்று கூவி விற்றுக்கொண்டிருந்தார்!

மைதானத்தில் கூட்டம் ஆங்காங்கே இருந்தது. பெண்கள், ஆண்கள் எனப் பகுதி பிரிக்கப்பட்டிருந்தாலும் ஆண்களும் பெண்களும் பல இடங்களில் ஒன்றாகவே இருந்தார்கள்!

வி.ஐ.பி பகுதியருகே சென்றோம். வி.ஐ.பி-க்கள் யாரும் அந்நேரத்தில் வந்திருக்கவில்லை; நம்மைத்தவிர!

மெல்ல மேடையருகே சென்றோம். சில போலீசார் ஓடிவந்து அடிக்காத குறையாகத் துரத்தினார்கள்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்
From Vikatan Archives

அறிமுகமான போலீஸ் அதிகாரி ஒருவர் கண்ணில் பட்டார். `விஷ்' பண்ணினோம்... வாங்கிக்கொண்டு அவர்பாட்டுக்கு மேடைக்குப் போய்விட்டார். ஆனாலும் `அவர் கூப்பிட்டார்' என்று சொல்லி மேடையில் ஏறிவிட்டோம்!

ஜேப்பியார் மேடை செட்டப்பைக் கண்காணித்துக் கொண்டிருந்தார், ``ஏம்ப்பா.. இத பாரு... கம்பளம் இந்த எடத்துல கொஞ்சம் தூக்கியிருக்கு... யாராவது தடுக்கி விழணுமாம்... அடுத்த நிமிஷமே நீங்கள்லாம் காலி, ஆமா..." என்றார்!

திடீரென்று ஒரு போலீஸ் அதிகாரி நம்மை மடக்கி ``பாஸ் வைத்திருக்கிறீர்களா?? என்று கேட்க, ``இல்லை" என்றோம். உடனே, ``அப்படின்னா நீங்க கூட்டக் கடைசியிலேதான் நிக்கணும்... கொஞ்ச நேரத்திலே ஸ்ட்ரிக்டா இருக்க ஆரம்பிச்சுடுவோம். பாஸ் இல்லாம யார் வந்தாலும் நோ என்ட்ரி..." என்றார்.

அப்போது ஜேப்பியார் யாரிடமோ, ``டேய்..முதல்லயே வந்திருக்கக் கூடாதா! எங்ககிட்ட இருந்த பாஸ் எல்லாத்தையும் இஷ்யூ பண்ணிட்டேன்... சரி... மினிஸ்டர்ஸ் யார் வீட்டுக்காவது பாஸ் வாங்கிட்டு வா... உடனே போயிட்டு வா..." என்றார்.

உடனே நாமும் யாராவது மந்திரியைப் பார்த்து பாஸ் வாங்கி வரலாமென்று கிரீன்வேஸ் ரோடு வந்தோம். சில அமைச்சர்கள் வீடுகளுக்குச் சென்று பாஸ் கிடைக்குமா என்று ட்ரை பண்ணினோம். தோல்விதான் கிடைத்தது!

`எப்படியாவது நுழைந்துவிடலாம்' என்ற நம்பிக்கையுடன் திடலுக்கு வந்து சேர்ந்தோம். மணி நாலேகால் ஆகிவிட்டிருந்தது. வி.ஐ.பி-களுக்கென ஏற்படுத்தப்பட்டிருந்த வாயிலருகே ஒரு போலீஸ், ``சார்... பாஸ் இல்லாம விட்டுட்டா என்னை என்கொயரி பண்ணுவாங்க, சார்... ப்ளீஸ் யாரையாவது அட்ஜஸ்ட் பண்ணி அந்தப்பக்கமா மினிஸ்டர்ஸ் போற வழிலே போயிடுங்க.." என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

யாரிடம் தெரியுமா? எஸ்.எஸ்.ஆரிடம்தான்! எஸ்.எஸ்.ஆர் ஒன்றும் பதில் பேசத் தோன்றாமல் மந்திரிகள் செல்லும் பாதைக்குச் சென்றார். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஒரு சல்யூட் அடித்து உள்ளே விட்டுவிட்டார். நாமும் நைஸாகப் பின்தொடர்ந்தோம்... அந்தோ! நம் சட்டை காலரைப் பிடித்திழுத்து வெளியே அனுப்பிவிட்டார்கள்.

#VikatanOriginals
#VikatanOriginals
அசுர உழைப்பு, இசை மயக்கம், அரிதான ஷேரிங்ஸ்... 80's இளையராஜாவின் இன்ஸ்பிரேஷனல் கதை #VikatanOriginals

நாம் வெறுத்துப் போய் பொதுமக்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தோம். நிறையபேர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் சரியாகவே தெரியாத சினிமாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் வயதான தம்பதி... அவர்களிடம் ``இந்தப் பனியில எம்.ஜி.ஆரைப் பார்க்க கஷ்டப்பட்டு இருக்கணுமா?" என்று கேட்டோம்.

``அந்தப் பெரியவர் நம்மை ஒரு அலட்சியப் பார்வை பார்த்தபடி, `அந்தத் தெய்வத்தையே பனியில கூட்டிட்டு வந்து உட்காரச் சொல்லப் போறாங்க... நாங்க படற கஷ்டமா பெரிசு?" என்று கேட்டார்.

பொழுதுபோகாத கூட்டமொன்று ஒரு துண்டை விரித்து `மங்காத்தா' ஆடிக்கொண்டிருந்தது. அருகிலிருந்த போலீஸ்காரர்கள் இருவரும் `மாஸ்' மட்டும் கட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா?

ஒருவழியாக இரவு கழிந்தது. காலை மணி ஆறு ஆயிற்று. தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்தமர்ந்தபடி `எம்.ஜி.ஆர்.' என்ற மந்திரத்தை முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

ஆங்காங்கே `புரட்சித் தலைவர்' என்ற குரலும், அதைத்தொடர்ந்து `வாழ்க' என்ற கோரஸும் பலரின் உடம்பிற்குச் சற்று வெப்பத்தைத் தந்தது!

சற்றுநேரத்தில் புரட்சித் தலைவர் மேடையில் தோன்றினார். கூடியிருந்த மக்களின் உணர்ச்சிக்குரல் அந்தத் தொண்டர்களின் தானைத் தலைவனையே கண்கலங்கச் செய்துவிட்டது.

அந்த வயதான தம்பதி எம்.ஜி.ஆரைக் கண்டு `பட் பட்'டென கன்னத்தில் போட்டுக்கொண்டனர். அப்போது பின்னாலிருந்த கூட்டம், அந்தத் தம்பதியை நெருக்கித் தள்ள, கீழே விழப்போனார்கள். ஆனால், அப்போதும் அவர்கள் கலங்கிய கண்கள் எம்.ஜி.ஆரின் முகத்தில்தான் பதிந்திருந்தன.

அடுத்த கட்டுரைக்கு