Published:Updated:

நாடாளுமன்றத் தேர்தல் ஷாக்; மதுவிலக்கை வாபஸ் வாங்கிய எம்.ஜி.ஆர் 1980-ல் என்ன நடந்தது?#VikatanOriginal

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் ( #VikatanOriginals )

கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் அன்றைக்கு மதுவிலக்கை தளர்த்தியதிலிருந்து, இன்று எடப்பாடி அரசு மதுவிலையை பாட்டிலுக்கு 10 ரூபாய் ஏற்றியிருப்பது வரை... எல்லாவற்றுக்கும் ஒரே காரணம்தான்; அது கட்டுரையின் கடைசியில்..!

1971-ல் முதன்முதலாகத் தமிழகத்தில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டதிலிருந்து இதோடு கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒருவருடம் முடிந்தால், ``தமிழகத்துக்கு மீண்டும் மதுவிலக்கு வேண்டும்!" என்ற கோஷத்துக்கு அது பொன்விழா ஆண்டு. தமிழக அரசியலில் இருக்கும் எத்தனையோ சுவாரஸ்யங்களில் இந்த மதுவிலக்கு அரசியலும் ஒன்று. ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்த மதுவிலக்கு முதன்முதலில் எதற்காகத் தளர்த்தப்பட்டது என்ற வரலாறே அதற்குச் சிறு உதாரணம். அதைப் படித்தால் இந்த மாநில அரசு, மத்திய அரசு விளையாட்டு எப்படியெல்லாம் கடந்த காலங்களிலும் இருந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

5.8.2015 தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் ப.திருமாவேலனின் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...

30.8.1971
தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்ட நாள்.

23 ஆண்டுகளாக அமலில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தார் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி... அப்போது ஏக இந்தியாவில் தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் மட்டும்தான் மதுவிலக்கு அமலில் இருந்தது. `மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவோம்’ என அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்தார். `தமிழ்நாட்டுக்கு நிதி உதவி செய்யுங்கள்’ எனக் கருணாநிதி கேட்டார். `இது மதுவிலக்கைப் புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் தரப்படும்’ எனப் புதிய விளக்கம் சொன்னார் இந்திரா. காங்கிரஸை வீழ்த்திவிட்டு வந்த கருணாநிதிக்கு, நிதி கொடுக்க மறுக்கும் தந்திரமாக அந்தக் காரணத்தை இந்திரா கண்டுபிடித்தார். நிதி தராத மத்திய அரசுக்குப் பாடம் கற்பிக்கவே மதுவிலக்கு ரத்து என அறிவித்தார் கருணாநிதி.

கோவை தி.மு.க பொதுக்குழுவில் கருணாநிதிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு, மதுவிலக்கு ரத்து என அறிவிக்கப்பட்டது. மதுவின் தீமையை நாட்டு மக்களுக்கு விளக்க, அன்றைய தி.மு.க பொருளாளர் எம்.ஜி.ஆர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

கருணாநிதி - எம்.ஜி.ஆர்
கருணாநிதி - எம்.ஜி.ஆர்

சென்னை முழுக்கக் கடுமையான மழை. போக்குவரத்து இல்லை.

93 வயதான ராஜாஜி, மதுவுக்கு எதிரான போராட்டத்தைத் தனது வாழ்நாளில் இளமை முதல் நடத்திவந்த ராஜாஜி... தனது காரை எடுத்துக்கொண்டு முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். `தமிழ்நாட்டில் மதுவிலக்குத் தொடர வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார். `வேறு வழி இல்லை; நிதி நெருக்கடியில் இருக்கிறது அரசு’ என விளக்கம் அளித்தார் கருணாநிதி. `மதுவிலக்கை 1937-ம் ஆண்டில் தான் அமல்படுத்தியபோது, நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே விற்பனை வரியை அமல்படுத்தினேன். அப்படி புது வழி இருக்கிறதா எனப் பாருங்கள்’ என்றார் ராஜாஜி; கருணாநிதி ஏற்கவில்லை. வீடு திரும்பினார் ராஜாஜி; மதுவிலக்கை வழியனுப்பினார் கருணாநிதி.

`நம்பிக்கையுடன் அல்ல; மனச் சஞ்சலத்துடன்தான் வீடு திரும்பினேன்’ என ராஜாஜி அன்று சொன்னதாக அவரது பேரன் எழுதுகிறார். ராஜாஜி மனதை இது அதிகமாகப் பாதித்தது. 'உயிர் வாழ வேண்டும் என்கிற மனோபலத்தை நீங்கள் இழந்துவிட்டீர்களா?’ எனக் கல்கி சதாசிவம் கேட்டபோது, 'இல்லை! ஆனால், ஒருவர் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு முக்கியமான நோக்கம் இருக்க வேண்டும் அல்லவா?’ எனச் சொன்ன ராஜாஜி, நாடு முழுக்க சாராயக் கள்ளுக்கடைகளைப் பார்த்துவிட்டுத்தான் கண்ணை மூடினார்!

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த விளக்கம் இது.

தமிழ்நாட்டைச் சுற்றி இருக்கிற மாநிலங்களில் எல்லாம் மது இருக்கும்போது, மது இல்லாமல் தமிழ்நாடு மட்டும் எப்படி இருக்க முடியும் என்பது அவரது கேள்வி. இதைச் சொல்லித்தான் மதுவிலக்கை ரத்துசெய்தார்; பழியைச் சுமக்கிறார்.

ஆனாலும் கருணாநிதி, 1973-ம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தினார். மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, ஆண்டு ஒன்றுக்கு 29 கோடி ரூபாய் தர வேண்டும் என, கருணாநிதி கோரிக்கை வைத்துப் பார்த்தார். பணம் வரவில்லை. மீண்டும் மதுவிலக்கை ரத்துசெய்தார். நிதியைக் காரணம் காட்டியே மதுவிலக்கைத் தவிர்ப்பதும் கொண்டுவருவதும் தொடங்கியது... தொடர்ந்தது. இதை பணமாகவே பார்த்தார்கள். குணமாக அன்றும் பார்க்கவில்லை; இன்றும் பார்க்கவில்லை.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்
#VikatanOriginals

எம்.ஜி.ஆரை வெளியேற்றிய மது!

மது... குடும்பங்களை அல்ல, கட்சிகளையும் உடைக்கும்!

மதுவிலக்கை ரத்துசெய்யும் அதிகாரத்தை கருணாநிதிக்கு வழங்கிய தி.மு.க பொதுக்குழு தீர்மானத்தை ஆதரித்தும், மதுவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் குழுவில் பொறுப்பேற்றும் இருந்த எம்.ஜி.ஆர், இரண்டு ஆண்டுகள் கழித்து தி.மு.க-விலிருந்து வெளியேற கண்டுபிடித்த காரணங்களில் மதுவும் ஒன்று. கணக்கு கேட்டு பேசிய கூட்டத்தில், மதுவைப் பற்றியும் கண்டித்தார். அவரை தி.மு.க-விலிருந்து விலக்கும் கடிதத்தில் உள்ள காரணங்களில் இதுவும் ஒன்று. `பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதற்கு ஆதரவாகப் பேசிவிட்டு, இப்போது வெளி மேடைகளில் விமர்சித்துப் பேசுவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாகும்’ என்றுதான் தி.மு.க-வின் அன்றைய பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன் குறிப்பிட்டார்.

நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரைத் தனிமையில் சந்தித்துக் கேட்டார்கள். மறுத்தார் எம்.ஜி.ஆர். நிரந்தரமாக நீக்கப்பட்டார். எனவே, தி.மு.க உடைந்ததில் மதுவுக்கும் பங்கு உண்டு.

எம்.ஜி.ஆர் போட்ட பல்டிகள்!

சினிமாவில் அடித்த ஸ்டன்ட்களைவிட மதுவிலக்கில் எம்.ஜி.ஆர் அடித்த ஸ்டன்ட்கள்தான் அதிகம்!

`என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக்கொள்கிறேன்’ (2.12.1979 'அண்ணா’ நாளிதழ்) எனச் சொன்ன அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இரண்டு ஆண்டுகள்கூட அதில் உறுதியாக இருக்க முடியவில்லை.

5.8.2015 தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் வெளியான இந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

அதன் பின்னர் எம்.ஜி.ஆர் என்ன செய்தார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

1980-லேயே மீண்டும் மதுவிலக்கைத் தளர்த்தினார். மது அருந்துவதற்காக பர்மிட் வழங்கும் முறையையும் கொண்டுவந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த படுதோல்வியால் இந்த முடிவை எடுத்தார். அப்போது அந்த முடிவை எதிர்த்து விகடன் எழுதிய தலையங்கம் இதோ...

17.2.1980 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

மனிதன் தன் உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்ள தேடிக்கொண்ட கெட்ட பழக்கங்களில் மது அருந்துவது முதலிடம் பெறுகிறது. அளவோடு அருந்தினால் மது, மருந்தாக உதவுகிறது என்கிறார்கள். ஆனால், உடலுக்கு மருந்தாகவும் மன அமைதிக்கு அமிர்தமாகவும் இருக்கும் மது, நாளடைவில் ஓர் அரக்கனாக உருமாறி நம்மையே விழுங்கிவிடுகிறான். அதிலும், இந்தியாவைப் போன்ற ஏழை நாடுகளில், இந்த அரக்கன் ஏழையின் வீட்டில் நுழைந்து, அவர்களை வறுமையில் வாட்டி வதைக்கிறான். சிரித்து வாழ்ந்த குடும்பங்களைச் சித்ரவதை செய்து வேடிக்கைபார்க்கிறான். நன்றாக வாழ வேண்டியவர்கள் ஒரு வேளை கஞ்சிக்கும் கதியின்றி நடுவீதிக்கு வந்துவிடுகிறார்கள்.

ஏழைகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என்று கனவு கண்ட மகாத்மா, மக்களின் கொடும் பகைவனான மதுவரக்கனை நாட்டிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று காலமெல்லாம் பாடுபட்டார். அவரது நிர்மாணத் திட்டத்தில் மதுவிலக்கு முக்கிய இடம்பெற்றது.

மகாத்மாவின் கனவை நனவாக்க காங்கிரஸ் ஆட்சிகள் முயன்றன. சில மாநிலங்களில் மதுவரக்கனை ஒழிக்கச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், குடிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் எதையோ, எப்படியோ குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சட்டம் சக்தியிழந்த நிலையில், மதுவிலக்கு புதுப்புதுப் பிரச்னைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.

17.2.1980 தேதியிட்ட ஆனந்த விகடன் தலையங்கம்
17.2.1980 தேதியிட்ட ஆனந்த விகடன் தலையங்கம்

மக்கள் பிரச்னையாகத் தொடங்கிய மதுவிலக்கு, ஓர் அரசியல் பிரச்னையாகிவிட்டதுதான் இதற்குக் காரணம். அரசியல் கட்சிகள் ஒரு சட்டம் இயற்றும்போது மக்கள் நலனைவிட, தங்கள் நலனைப் பற்றியே அதிகமாக நினைக்கின்றன. அந்தச் சட்டத்தால் தங்களுக்கு ஓட்டு கிடைக்கவில்லையென்றால், கெடுபிடியைத் தளர்த்துவார்கள்; அல்லது சட்டத்தையே கைவிட்டுவிடுவார்கள். மதுவிலக்குச் சட்டம் இதற்குச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. தமிழகத்தில் மதுவிலக்குச் சட்டத்தின் சரித்திரம் விநோதமானது; வேதனை மிகுந்தது. காங்கிரஸ் ஆட்சியில் 25 வருடங்களாக இருந்துவந்த மதுவிலக்குச் சட்டத்தை ஏதோ காரணங்கள் கூறி, தி.மு.க அரசு ரத்துசெய்தது. அதனால் மதுப்பழக்கமில்லாத இளைஞர்கள் அதன்மீது மோகம் கொள்ளத் தொடங்கினார்கள். பின்னர், வேறு சில காரணங்களுக்காக மீண்டும் மதுவிலக்குச் சட்டம் வந்தது. ஆனால், புதிதாக ருசிகண்டவர்கள், கள்ளத்தனமாய் குடிக்கத் தொடங்கினார்கள். கள்ளச் சாராயம் காய்ச்சுவது வருமானமிக்க தொழிலாயிற்று; அந்த வியாபாரம் கொழிக்கத் தொடங்கியது.

மதுவைத் தீவிரமாக எதிர்க்கும் எம்.ஜி.ஆர், ஆட்சிக்கு வந்ததும் படிப்படியாக மதுவிலக்குச் சட்டத்தைத் தீவிரமாக்கினார். குடித்தவர்கள் கடும் தண்டனைக்கு ஆளானார்கள். பர்மிட் முறை இறுக்கப்பட்டது. போலீஸ் கெடுபிடி அதிகமாயிற்று. ஆனால், அப்போதும் கள்ளச் சாராயத் தொழில் தங்குதடையின்றி நடந்துகொண்டுதான் இருந்தது!

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு, கடுமையான மதுவிலக்குச் சட்டமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்று கருதியதாலோ என்னவோ, எம்.ஜி.ஆர் அச்சட்டத்தைத் தளர்த்திவிட்டார். குற்றங்களுக்கான தண்டனை குறைந்தது; 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பர்மிட் கிடைக்க வழிபிறந்தது. கெடுபிடி பெருமளவு மறைந்தது.

படிப்படியாகக் கடுமையாக்கப்பட்ட சட்டம், படிப்படியாக வலுவிழந்து போனதற்குக் காரணம் என்ன? ஓட்டுதான். ஏழைமக்கள் நலனில் அக்கறைகொண்ட எம்.ஜி.ஆர் அவர்களாலேயே மதுவிலக்கைத் தீவிரமாகச் செயல்படுத்த முடியாமல் போனதற்கு அரசியல்தான் காரணம்.

எனவே, அரசியல் கட்சிகளாலேயோ, அவர்கள் இயற்றும் சட்டத்தினாலேயோ மக்களைக் குடிப்பழக்கத்திலிருந்து மீட்க முடியாது. மதுவிலக்குச் சட்டம் தீவிரமாகும்போது கள்ளத் தனமாகக் குடித்துக்கொண்டும் அதை அகற்றும்போது ஓயாமல் குடித்துக்கொண்டும் இருப்பதால் மக்கள், அதிலும் இளைய சமுதாயம் தங்கள் வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்வதை நினைக்கும்போது வேதனையால் நெஞ்சு வெடிக்கிறது.

பல கேடுகளுக்கு வித்திட்டு, உரமிட்டு வளர்க்கும் அரசியலால் மதுவரக்கன் ஒருநாளும் மடியப்போவதில்லை. மாறாக, மதுவரக்கன் விரிக்கும் மாயவலையில் சிக்கி, மதியிழந்து, மானமிழந்து பூச்சிகளைப்போல் நாம்தான் மடியப்போகிறோம்.

எனவே, இந்த விஷயத்தில் நம் நல்வாழ்வுக்குப் பிறரை நம்பியிராமல், நம் மனச்சாட்சியே நமக்குத் துணையாக நிற்க வேண்டும். `மதுவிலக்குச் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் குடிக்க மாட்டேன். என் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ள மாட்டேன்.' என்று ஒவ்வொரு குடிமகனும் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மை நாமே திருத்திக்கொள்ள வேண்டும். மனமாற்றம் நம் உள்ளிருந்தே வர வேண்டும். வேறு வழியேயில்லை.

ஓர் இரவு முழுக்க கெடுபிடி... அமெரிக்காவிலிருந்து எம்.ஜி.ஆர். திரும்பியபோது என்ன நடந்தது? #VikatanOriginals

வீட்டுக்கும் நாட்டுக்கும், மனித சமுதாயத்துக்கும் பயன்பட வேண்டும் என்ற நம்பிக்கையோடு படைக்கப்பட்ட இந்த உடலை, புகைபிடிப்பதாலும் மது குடிப்பதாலும் அழித்துக்கொள்ள நமக்குச் சிறிதும் உரிமை இல்லை; படைத்தவனுக்கு நாம் செய்யும் பச்சைத் துரோகம் இது.

- தலையங்கம் நிறைவு

இதோடு நிறுத்தாமல், அந்த முடிவை விமர்சிக்கும் வகையில் நகைச்சுவை துணுக்குகளையும் அதே இதழில் பிரசுரித்திருக்கிறது விகடன். 

கூடவே மக்களின் பலதரப்பட்ட கருத்துகளையும் பதிவுசெய்திருக்கிறது. இப்போது இருப்பது போலவே, அப்போதும் மதுவிலக்குக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி இருந்திருக்கிறது. அரசியல் ரீதியாகவும் இந்த முடிவு பெரும் தாக்கம் செலுத்தியிருக்கிறது. 

நாடாளுமன்றத் தேர்தல் ஷாக்; மதுவிலக்கை வாபஸ் வாங்கிய எம்.ஜி.ஆர் 1980-ல் என்ன நடந்தது?#VikatanOriginal
இப்போது கட்டுரையின் முதல் இரண்டு வரிகளுக்கு வருவோம். கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் அன்றைக்கு மதுவிலக்கை தளர்த்தியத்திலிருந்து, இன்று எடப்பாடி அரசு மதுவிலையை பாட்டிலுக்கு 10 ரூபாய் ஏற்றியிருப்பது வரை... எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் அதிலிருந்து வரும் வருவாய்தான். ஆனால், என்ன... ஒரே வித்தியாசம். முதலில் ஆட்சி நடத்த மட்டும் அதிலிருந்து வருவாய் எதிர்பார்த்த ஆட்சியாளர்கள், இப்போது தாங்கள் கல்லா கட்டவும் வருவாய் எதிர்பார்க்கிறார்கள். டாஸ்மாக்குக்கு மது உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் பெயர்ப் பட்டியல்களே அதற்கு சாட்சி. அதற்கான விலை, மக்களின் நலம்!
அடுத்த கட்டுரைக்கு