Published:Updated:

``செக்ஸ்... பசி மாதிரி ஓர் உணர்வு!" - குஷ்வந்த் சிங்கின் செம ரகளை பேட்டி! #VikatanOriginals

குஷ்வந்த் சிங்
குஷ்வந்த் சிங் ( Photo: Vikatan Archives )

விகடனுக்காக 1995-ல் எழுத்தாளர் வலம்புரி ஜானுக்கு குஷ்வந்த் சிங் அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியிலிருந்து...

தம் எழுத்தின் தடத்தில் அப்படியே பயணித்த எழுத்தாளர்; வாழ்க்கைத் தடத்தை அப்படியே பதிவுசெய்த கொண்டாட்டக் காரர். விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், மனதில் பட்டதை அப்படியே பதிவுசெய்த சுவாரஸ்ய மனிதர். இதழியலாளர், எழுத்தாளர்... என இவரின் எந்த முகத்தை எடுத்தாலும் யதார்த்தமும், குறும்பும் நிரம்பிய குஷ்வந்த் சிங்தான் நமக்குத் தெரிவார். அப்படி விகடனுக்காக 1995-ல் எழுத்தாளர் வலம்புரி ஜானுக்கு குஷ்வந்த் சிங் அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியிலிருந்து சில பகுதிகள் இங்கே...

19/03/1995 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

``எழுத்தைத் தொழிலாகக் கொள்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

``எழுதிப் பிழைக்கிறவர்களும் இருக்கிறார்கள், வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். நான் எழுதி மாத்திரமே வாழ்கிறேன். எனக்கு வருமானம் அல்ல பிரச்னை. வருமான வரிதான் பிரச்னை."

``உங்கள் எழுத்துக்கு நோக்கம் இருக்கிறதா?"

``ஏன் இல்லை? வாழ்வின் சிறந்த அம்சங்களுக்காக, தரம் உயர வேண்டும் என்பதற்காக எனது எழுத்து போராடி வருகிறது. உதாரணத்துக்கு ஒரு சீக்கியனாகப் பிறந்தும் பிந்தரன்வாலேயின் அடிப்படைவாதத்துக்காக எழுதியவன் நான்! காலிஸ்தான் கேட்கிற சௌகான், இந்திரா காந்தியின் படுகொலையைப் பற்றி நான் எழுதியதால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு என் மீது லண்டனில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். நான் பாகிஸ்தானின் தீவிர ஆதரவாளன்! இதைச் சொல்லிக்கொள்வதற்காக நான் வெட்கப்படவில்லை. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சுமுகமான உறவு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நான் பாகிஸ்தானை ஆதரிக்கிறேன். நான் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் வந்த ஒரு அகதி என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது!"

குஷ்வந்த் சிங்
குஷ்வந்த் சிங்
Photo: Vikatan Archives

``பாகிஸ்தான் பிரிவினைக்கு யார் காரணம்?"

``முஸ்லிம்கள்தான் காரணம். ஆனால், முஸ்லிம் லீக்கில் உள்ள முஸ்லிம்கள் அல்ல. காங்கிரஸில் இருந்த முஸ்லிம்கள் காரணம். இந்தியா பிரிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு ஒரு ஒரு நாடு உருவாக்க வேண்டுமென்று 1924-ல் லாலா லஜபதி ராய் குரல் எழுப்பவில்லையா?"

``நீங்கள் ஏன் எப்போது பார்த்தாலும் ஜோதிடத்தை எதிர்க்கிறீர்கள்?"

``அது ஏமாற்று என்பதால்"

``நரசிம்மராவ் பற்றி உங்கள் கருத்து என்ன?"

``வாழத் தெரிந்த மனிதர்."

``இந்திராகாந்திக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு?"

``இந்திராகாந்தி பல தவறுகளைச் செய்தார். இவர் தவறுகளைக் கூட செய்யாமல் செயலற்றே இருக்கிறார். இதற்குப் பதிலாக தவறாகச் செயல்படுவதே மேல்! பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்றைக்கே அவர் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது."

``பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு அவரா காரணம்?"

``அவரது தாமதம்தான் காரணம். எல்.கே.அத்வானி போன்றவர்களை ஆறு மாதங்களுக்கு முன்னரே கைது செய்திருந்தால் நரசிம்மராவை நான் பாராட்டியிருப்பேன்."

``ஜெயலலிதாவைக் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?"

``நாளாகிறது. முன்பு ராஜ்யசபா உறுப்பினராக அவர் இருந்தபோது பலமுறை என் வீட்டுக்கு வந்தார். என் பேத்திக்குப் பரிசுப்பொருட்களெல்லாம் கொண்டு வருவார். இப்போது அவர் முதலமைச்சர். அவர் கருத்தில் நாங்கள் சமமானவர்கள் இல்லை. அவரது கட் அவுட்டைச் சென்னையில் பார்த்த பிறகு அவரைப் பார்க்கவேண்டும் என்றே எனக்குத் தோன்றவில்லை. இது தமிழர்களின் தலைவிதி!"

Vikatan Originals
Vikatan Originals

``உங்கள் எழுத்து எப்போதும் செக்ஸியாக இருப்பது ஏன்?"

``செக்ஸ், பசி மாதிரி ஒரு உணர்வு என்று நான் நம்புவதால்."

``இப்போது உங்கள் வயது?"

``எண்பது ப்ளஸ்"

``அடுத்த வருடம் எழுபத்து ஒன்பதா?"

``ஆம்" (சிரிக்கிறார்)

அடுத்த கட்டுரைக்கு