Published:Updated:

``நம்மையே மீறுகிற ஒரு சாகசம்தான் காதல்!" - கவிஞர் மனுஷ்யபுத்திரன் #VikatanOriginals

கவிஞர் மனுஷ்யபுத்திரன்
கவிஞர் மனுஷ்யபுத்திரன் ( Photo: Vikatan Archives )

காதல் குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரன்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`பாய் பெஸ்டிகளின்' துயரத்தை (!) கவிதையாகச் சொன்ன கவிஞர் மனுஷ்யபுத்திரன்தான் சமூக வலைதளங்களின் சமீபத்திய ட்ரெண்டிங். பெஸ்டியா இருக்குறது மட்டுமா கஷ்டம்... கேர்ள்ஃபிரெண்ட் / பாய் ஃபிரெண்ட், காதலன் / காதலி, கணவன் / மனைவி என எந்த `ரோல்'-லதான் கஷ்டம் இல்லங்குறீங்களா? உண்மைதான். நாமளே வேண்டி, விரும்பி, தேர்ந்தெடுத்து, தேடித்தேடிப் போய்விழும் காதல்... ஏன் நம்மள இவ்வளவு கஷ்டப்படுத்துது? காதல்ன்னா என்ன? இந்தக் கஷ்டமான கேள்விகளுக்கெல்லாம் ஒரே ஒரு கட்டுரைல பதில் சொல்லிருக்கார் மனுஷ். 2012-ம் ஆண்டு ஆனந்த விகடன்ல வெளிவந்த அந்தக் கட்டுரை இதோ...

15.2.2012 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து... 

``ஒருவர் மீது `பைத்தியமாவது’ என்றால் என்னவென்று நிறைய நேரம் யோசித்து இருக்கிறேன். தன்னைவிட, தன் வாழ்வில் உள்ள அத்தனை விஷயங்களையும்விட இன்னொருவரை முக்கியமாகக் கருதச் செய்வது எது? என்று திரும்பத் திரும்ப நினைத்து இருக்கிறேன். வெறும் இச்சை மட்டும்தானா அது?

இச்சை என்பது ஓர் எளிய உயிரியல் தேவை. அதற்காக இவ்வளவு மனப் பிறழ்வுகளும், தற்கொலைகளும், கொலைகளும், துரோகங்களும் நடக்க வேண்டியது இல்லை. இவ்வளவு கண்ணீர் அதற்கு அவசியம் இல்லை. மேலும், உடலின் இச்சை தணிந்த மறுகணம், தீராமல் பெருகும் எல்லையற்ற பிரியத்தின் தத்தளிப்பை என்னவென்று சொல்வது?

ஒரு காதலுக்காக எந்தக் கணத்தில் எல்லாவற்றையும் பணயம் வைக்க ஆயத்தமாகிறோம்?

நம் வாழ்வில் வரும் ஒரு காதல் என்பது, நம்மையே மீறுகிற ஒரு சாகசம் என்றே தோன்றுகிறது. பல நேரங்களில் காலம் நம்மைச் சுற்றி உறைந்து நின்றுவிடுகிறது. நாம் எவ்வளவு தூரம் நடந்தாலும் அதே இடத்துக்குத் திரும்பி வருவதை உணர்கிறோம். திடீர் என கனவுகளே இல்லாத ஆயாசத்தின் வெட்டவெளியில் நின்றுகொண்டு இருக்கும்போது, பிரமாண்டமான தனிமை ஒன்று நம்மேல் வந்து கவிந்துவிடுகிறது. நீங்கள் எவ்வளவு நேரம் தொலைக்காட்சியில் மிக உயரத்தில் இருந்து குதிக்கிற அல்லது கயிற்றின் மேல் நடக்கிற சாகச விளையாட்டைப் பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்? நீங்களும் எதையாவது நிகழ்த்திப் பார்க்க வேண்டாமா? சாகசம் என்பது மனதின் அடியாழத்தின் விருப்பம். நீங்கள் ஒரு சாகச விளையாட்டுக்காரனாகவோ, விளையாட்டுக் காரியாகவோ இல்லாதபட்சத்தில் நீங்கள் செய்யக் கூடியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; ஒருவரைக் காதலிப்பது.

காதல்
ஒரு சாகச விளையாட்டின் எல்லா சாத்தியங்களும் அப்படியே இதிலும் இருக்கிறது.

ஒரு சாகச விளையாட்டின் எல்லா சாத்தியங்களும் அப்படியே இதிலும் இருக்கிறது. சாதனைக்கும் மரணத்துக்கும் இடையே ஒரு மயிரிழை வித்தியாசம்தான் இருக்கிறது. நமக்கு யோசிக்க அதிக நேரம் இல்லை. ஒரு சாகச விளையாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது எப்படி, எதையுமே தீர்மானிப்பது இல்லையோ அப்படித்தான் ஒரு காதலில் நீங்கள் செய்யக்கூடிய தந்திரங்களும் முன்னேற்பாடுகளும் ஏதோ ஒரு கணத்தில் பயன் அற்றவை ஆகிவிடுகின்றன. உங்களுக்கு முன்பு இந்தச் சாகசத்தில் ஈடுபட்ட யாருடைய அனுபவங்களும் இதில் உங்களுக்குப் பயன்படாது. எல்லா சாகச ஆட்டக்காரர்களும் இந்த உலகில் முதன் முதலாக அதைச் செய்வதுபோலத்தானே செய்கிறார்கள். நீங்கள்தான் முதன்முதலாக இந்த உலகில் காதலிக்கிறீர்கள். அல்லது எத்தனை முறை காதலில் ஈடுபட்டு இருந்தாலும் ஒவ்வொரு முறையும் முதல் காதலைப்போலவே அதே பதற்றத்துடன்தான் அதற்குள் நுழைகிறீர்கள்.

காதல்
காதல்
இந்த நாள்களில் காதல் அர்த்தம் இழந்துவிட்டது, தற்காலிகமானதாகிவிட்டது என்றெல்லாம் நிறைய சொல்லப்படுகின்றன. காதலைப் பற்றிய ஓர் இலட்சியவாதக் கற்பனையை வைத்துக்கொண்டு இருக்கும் எல்லோருமே அப்படித்தான் நினைக்கிறார்கள்.

காதல் என்பது கடவுளின் உணர்ச்சி அல்ல, மனிதர்களின் உணர்ச்சி என்ற தெளிவு நமக்கு இருந்தால் இந்தக் குழப்பம் வராது. அன்பு, நட்பு, தாய்மை, சகோதரத்துவம் எல்லாமே அந்தந்தக் காலத்தின் உணர்ச்சிகளால் கொண்டுசெலுத்தப்படும் எனில், காதல் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாம் எந்த உலகத்தில் எந்த வாழ்க்கைச் சூழலில் வாழ்கிறோமோ அதற்கு ஏற்பவே காதலின் வழிமுறைகளும் நிச்சயமாகின்றன. நாம் எப்போதும் யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையே போராடுகிறோம். அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடுவே போராடுகிறோம். காதல் எப்போதும் கற்பனையையும் உணர்ச்சியையுமே சார்ந்து இருக்கிறது. அதுதான் அதன் வசீகரமும் அபாயமும்.

15.2.2012 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
15.2.2012 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

இந்த உலகிலேயே மிகவும் கடினமான செயல் நம்மை நாமே மனமுவந்து முழுமையாக ஒப்புக் கொடுப்பதுதான். எந்தத் தடையும் இன்றி எந்தப் பயமும் இன்றி ஒப்புக்கொடுத்தல். அந்த முழுமையான ஒப்புக்கொடுத்தலையே நான் முழுமையான காதல் என்பேன். அதனால்தான் அது எப்போதும் மரணத்தோடு ஒப்பிடப்படுகிறது. நம் வாழ்வில் எப்போதோ ஏதோ ஒரு காதலில் அது ஒருமுறையேனும் நிகழவே செய்கிறது. ஒரு முறை அது நிகழ்ந்துவிட்டால், மறுபடியும் நிகழாதா என்ற ஏக்கத்திலோ அல்லது அது ஒரே ஒருமுறையேனும் நம் வாழ்வில் நிகழ்ந்துவிடாதா என்ற பரிதவிப்பிலும் நாம் காதலின் இந்தப் பைத்திய நிழலை வாழ்நாளெல்லாம் தொடர்ந்துகொண்டு இருக்கிறோம்!''

``அப்பாவிடம் அஜித் பேசும் முன்பே நான் பேசிவிட்டேன்!'' ஷாலினி அஜித்தின் `க்யூட்' காதல் #VikatanOriginals
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு