Published:Updated:

`அந்தப் பெண் எங்குதான் போனாள்?' - மிருணாள் சென் படைப்பை சிலாகித்த பிரபஞ்சன்! #VikatanVintage

பிரபஞ்சன்
பிரபஞ்சன்

''கலை இலக்கியங்கள், ஆத்மாவில் செயல் புரிபவை; அவை நுண்மையானவை; மனத்தில் அசைவை ஏற்படுத்துபவை. 'அறம் இது, அறமற்றது இது...' என்பதைச் சுட்டிக்காட்டுவதே இலக்கியத்தின் பணி.

''இந்திய அளவில் தங்களைக் கவர்ந்த சினிமா இயக்குநர் யார்?'' - மகாலிங்கம், திருத்தங்கல்.

எழுத்தாளர் பிரபஞ்சன்: ''மிருணாள் சென், எனக்குப் பிடித்த கலைஞர். 'ஏக் தின் பிரதிதின்' என்ற அவரது சினிமா, ஒரு சிறந்த படைப்பு. மாலை ஏழு மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பெண், வரவில்லை. கீழ் மத்தியதரக் குடும்பம் அது. அந்தப் பெண்ணின் சம்பளம்தான், அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம். குடும்பம் அலைபாய்கிறது. விபத்தா... ஓடிப்போனாளா... என்ன சிக்கல்? பக்கத்து வீட்டுக் குடும்பங்கள் எட்டிப்பார்த்து, அதீத (இந்திய) அக்கறை காட்டி 'என்ன பிரச்னை?' என விசாரிக்கின்றன. நாலு மணி நேரம் அந்தக் குடும்பம் எதிர்கொள்ளும் அவஸ்தை படமாக விரிகிறது. கடைசிப் பேருந்தில் அந்தப் பெண் வந்து இறங்குகிறாள். உணவுகொண்டு, உறங்கப் போகிறாள்.

படத்தின் திரையிடலின்போது மிருணாள் சென் உடன் இருந்தார். பார்வையாளர்களில் நானும் இருந்தேன். ஒரு தமிழர் எழுந்து, 'சார்... அந்தப் பெண் எங்குதான் போனாள்?' என்று ஆவலுடன் கேட்டார். தமிழ்க் கவலை! சென், மிக அமைதியாக, 'I don't know sir' என்றார். 'என் பிரச்னை அது அல்ல. கீழ் மத்தியதரக் குடும்பத்து, ஓய்வுபெற்ற அப்பா, அம்மா, வேலை தேடும் தம்பி இவர்களுக்குச் சம்பாதித்துச் சோறு போடும், வேலைக்குப் போகும் பெண், திடுமெனக் காணாமல்போனால், அந்தக் குடும்பம் படும் அவஸ்தையும் பயமும்தான் நான் சொல்ல விரும்பியது' என்றார் அன்பார்ந்த ஒரு நண்பனின் குரலில். மனிதர்களைப் பேசுவது அல்ல... மனிதர்களின் அர்த்தத்தைப் பேசுவதே சினிமா!

மிருணாள் சென்
மிருணாள் சென்

சட்டென்று தோன்றுகிறது... ஓர் உலக இயக்குநரையும் சொல்கிறேனே! 'இல் போஸ்டினோ: தி போஸ்ட்மேன்' என்ற படம். பாப்லோ நெரூடா நாடு கடத்தப்பட்டு, ஒரு கடற்கரையோரக் கிராமத்தில் வாழ்ந்த, வாழ்க்கையைச் சொன்ன படம். ஒரு பெரிய படைப்பாளியை, அவரது மனிதாம்சத்தைச் சொன்ன படம். எளிய, உண்மையான படம். சினிமா என்பது, கதை அல்ல; சினிமாவைப் பார்க்க, சினிமா மொழியைப் புரிந்துகொள்ள, சினிமா என்பதன் அர்த்தம் தெளிய, தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!''

''இலக்கியத்தால், இலக்கியவாதிகளால் ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைக்க முடியுமா?'' - அப்துல் சலாம், திருச்சி.

எழுத்தாளர் பிரபஞ்சன்: ''கலை இலக்கியங்கள், ஆத்மாவில் செயல் புரிபவை; அவை நுண்மையானவை; மனத்தில் அசைவை ஏற்படுத்துபவை. 'அறம் இது, அறமற்றது இது...' என்பதைச் சுட்டிக்காட்டுவதே இலக்கியத்தின் பணி. உலக மொழிகளிலேயே அதிகமாக நீதி இலக்கியங்கள் உள்ள மொழி தமிழ். எனினும் தமிழர்க்குள் அவை எந்த அளவில் அசைவை ஏற்படுத்தின? பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால், தமிழர்கள் சாதியை முன்வைத்து, மதத்தை முன்வைத்து, தமக்குள் யுத்தம் செய்வார்களா? தீண்டாமை இன்னும் நீடிக்கிறது என்றால், நீதிகள் அறங்கள் செத்துப்போய்விட்டன என்றுதானே அர்த்தம்.

ஏக் தின் பிரதிதின்
ஏக் தின் பிரதிதின்

அரசியல்வாதிகள் 'வி' மாதிரி விரல்களைக் காட்டிக்கொண்டு (வி ஃபார் விக்டரியாம்) சிறை செல்லும் குற்றவாளிகளாக வாழ்கிற நாடு இது. ஆனால், கலையும் இலக்கியமும் உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டிய நேரமும் இதுதான். நான் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர், இலக்கியம் படித்து, ஐநூறு ரூபாய் வாங்கினாலேகூட இப்போதைக்குப் போதும்தானே?''

- ஆனந்த விகடன் நவ.27, 2013 'விகடன் மேடை' பகுதியில் இருந்து. > முழுமையாக வாசிக்க > "அன்று கர்ஜித்த ஜெயகாந்தன் இன்று 'மியாவ்' என்கிறார்!" http://bit.ly/2EMgFC3

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு