Published:Updated:

பிக்பாஸ் வின்னர் ஆரி நல்லவரா, கெட்டவரா... அவரது 105 நாள் பயணம் எப்படி இருந்தது?! #Aari #BiggBoss

பிக்பாஸ் சீசன்-4 ரியாலிட்டி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகியிருக்கிறார் ஆரி அர்ஜுனன். பிக்பாஸ் வீட்டுக்குள் 105 நாட்கள் ஆரியின் பயணம் எப்படியிருந்தது?!

"ஆரி நல்ல பையன். கடுமையான உழைப்பாளி, நேர்மையான எண்ணம் கொண்டவர். சமூக அக்கறை உள்ளவர்."
இயக்குநர் சேரன்
பிக்பாஸ் வீட்டின் அண்ணணாக, எல்லோருக்கும் அறிவுரைகள் சொல்லும் நல்லவனாகத்தான் ஆரியின் அறிமுகம் நிகழ்ந்தது. முதல்முறையாக ஆரிக்குப் பட்டப்பெயர் வைத்து அவரை களத்துக்குள் இறக்கியவர் அர்ச்சனா. அவர்தான் ஆரிக்கு 'நமத்துப் போன பட்டாஸ்' என்கிற பட்டத்தை வழங்கினார்.

அர்ச்சனாவின் வருகைக்குப் பிறகு ஆரியின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வந்தது. அக்டோபர் 17-ம் தேதி, ஆரிக்கு கமல்ஹாசன் முதன்முதலில் கொடுத்த டிப்ஸ், "ஆலோசனைக் கேட்பவர்களுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க வேண்டும். இல்லையெனில் ஆலோசனைக் கொடுப்பவர் பலியாகி விடுவார்'' என்றார்.

ஆரி மீது மற்ற போட்டியாளர்கள் வைத்த குற்றச்சாட்டே கமல்ஹாசன் அவருக்கு அறிவுரை வழங்கக் காரணம். எப்போதும் ஏதாவது கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்பதுதான் ஆரியைப் பற்றிய மற்றவர்களின் கருத்து.

பிக்பாஸ் ஆரி
பிக்பாஸ் ஆரி

சரி, ஆரி நல்லவரா, கெட்டவரா?!

நேர்மை!

கமல்ஹாசன் டிப்ஸ் கொடுத்த அதேநாளில் ஆரியை நேர்மையானவர் என்றும் பாராட்டினார் கமல். அவருடைய நேர்மை அதற்குப்பிறகு பிக்பாஸை விட்டு வெளியேறிய பல போட்டியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனாவின் வருகைக்குப்பின் பிக்பாஸ் இல்லத்தில் குழுவாதமும் (groupism) சாதக வாதமும் (favouritism) வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தன. ஆனால், ஆரி எந்தக் குழுவிலும் சேராமல் தனித்தன்மையுடன் நேர்மையாக விளையாடினார்.

'தருதலை' என்ற வார்த்தையை தன் மீது பிரயோகித்த பாலாஜியுடன் சனம் சண்டை போட்ட தருணம்தான், ஆரிக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை உண்டாக்கியது. சனத்தின் மீது பாலாஜி 'தருதலை' என்ற வார்த்தையை உபயோகித்ததைக் கண்டித்து பாலாஜியுடனும், பாலாஜிக்கு ஒத்து ஊதிய மற்ற போட்டியாளர்களுடனும் ஆரி மோதினார். அவர்கள் மீது வெகுண்டெழுந்தார். அன்றுதான் மற்ற போட்டியாளர்கள் எல்லாம் சேர்ந்து ஆரியை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

உண்மை - ஞாபகத்திறன்!

பிற போட்டியாளர்கள் ஆரியை ஒதுக்க, ஒதுக்க மக்களிடையே அவருடைய பலம், ஆதரவு பெருகிக்கொண்டே போனது. அவருக்காக அவர் மட்டுமே வாதாட வேண்டும் எனும் நிலை ஏற்பட்டபோது ஆரி ஆர்மி இன்னும் பலமானதாகவே தோன்றியது. தனி ஒருவனாக, சிங்கம் போன்று ஆரி மற்ற போட்டியாளர்களை எதிர்கொண்டார். அவ்வாறு தன்னைத் தாக்கும் போட்டியாளர்களை எதிர்கொள்ள அவருடைய அபார ஞாபகத்திறனும், உண்மையே பேசும் குணமும் பக்கபலமாக இருந்தது.

பிற போட்டியாளர்கள் நடந்த நிகழ்வுகளை திரித்துக்கூறி குழுவாக அவரைத் தாக்கியபோது, சரியாக எந்த இடத்தில் என்ன நடந்தது, எப்போது நடந்தது, யார் என்ன பேசினார்கள் என்பதை புட்டு புட்டு வைப்பார் ஆரி. இவ்வாறு பேசுவதை மற்ற போட்டியாளர்கள், ஆரி baggage வைத்து பேசுகிறார் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
பிக்பாஸ் ரேகா, ஆரி
பிக்பாஸ் ரேகா, ஆரி

பெண்களுக்கு ஆதரவு - பெண்களுக்கு மரியாதை!

பெண் போட்டியாளர்களுக்கு ஒரு பிரச்னை, அவமானம் என்றால் அவர்களுக்காக குரல் கொடுத்தவர் ஆரி. சிறந்த எடுத்துக்காட்டாக ஒரு விஷயம் சொல்ல வேண்டுமென்றால் பாலா, ஆரியிடம் அவருடைய ஐந்து வயது மகளை, ஷிவானியுடன் ஒப்பிட்டுப் பேசியது. வேறு யாராவது அவருடைய இடத்தில் இருந்திருந்தால் பொங்கி எழுந்து இருப்பார்கள். ஆனால் ஆரி மிகுந்த கண்ணியத்துடன் அந்த நிகழ்வை கையாண்டார். ஆனால் வெளியே மக்கள் பொங்கினார்கள்.

அதேபோல், ரம்யா ஒருமுறை, கோழி, நரி டாஸ்க்கில் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். பின்பு அவரிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். நமக்கு இந்த நிகழ்வு காண்பிக்கப்படவில்லை. கமல்ஹாசனிடம் ஆரி இது குறித்து பேசும்போதுதான் மக்களுக்குத் தெரிந்தது. அதேபோல் அர்ச்சனா ஆரியை, "நரியா இருந்தாலும் மானமுள்ள நரியாக இருக்க வேண்டும்'' என்று கமென்ட் அடித்தார். ஆனாலும் ஆரி கோபம்கொண்டு பொங்கவில்லை. பொறுமை காத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விதிமுறைகளைப் பின்பற்றுதல்!

எந்த நிலையிலும் விதிமுறைகளை மீற மாட்டார் ஆரி. சுய ஒழுக்கம் (self-discipline) கொண்ட மனிதர் என்பதற்கு பல உதாரணனங்கள் உண்டு. ஃபிரீஸ் (freeze) டாஸ்க்கில் அவருடைய பெண் வீட்டிற்கு, அதாவது பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது பிக்பாஸ் அவரை ஃப்ரீஸ் செய்துவிட்டார். பிக்பாஸ் அவரை ரிலீஸ் செய்யும் வரை அவர் அசையவில்லை. தன்னுடைய நிலையிலிருந்து ஆரி மாறவில்லை. அந்த வார இறுதியில் கமல், ஆரியைத்தள்ளி உட்கார வைத்துவிட்டு எதுவும் பேசக்கூடாது என்றும் சொல்லிவிட்டார். பிறகு மற்ற போட்டியாளர்களிடம் ஆரியின் குறைகளை கமல்ஹாசன் கேட்கும்போது ஆரி ஒரு இடத்தில் கூட வாயைத் திறக்கவில்லை.

மறப்போம்... மன்னிப்போம்!

தன் முதுகில் குத்தியவர்கள் தன்னை குறித்து புறம் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் இவரிடம் அவர்கள் வந்து பேசும்போது எந்த சுனக்கத்தையும் காண்பிக்கமாட்டார். ஆஜித்துக்கு ஆரியைப் பிடிக்காது. அது அவருக்கும் தெரியும். இருந்தாலும் ஆஜித் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முதல் வாரம் ஆரியிடம் வந்து சில ஆலோசனைகள் கேட்டார். இவரும் தெளிவாக அவருக்குப் புரியும் படி விளக்கினார். பிக்பாஸ் வீட்டுக்குள் ஆலோசனைகள் வழங்கத் தவறியதேயில்லை ஆரி. "பாலா நல்லவர். அவரை பக்குவப்படுத்தினால் அவர் சிறந்த மனிதராக உருவெடுப்பார்"' என்பதுதான் ஆரியின் கருத்தாக இருந்தது. ஆஜித், பாலாவை போலவே ஷிவானி கேபியையும் அவ்வப்பொழுது உற்சாகப்படுத்தி ஊக்குவித்தார்.

பிக்பாஸ் ஆரி
பிக்பாஸ் ஆரி
இதெல்லாம் இவரது பாசிட்டிவ்கள்... நெகட்டிவ் இல்லாத மனிதன் உண்டா என்ன?

கருத்துகளைத் திணிப்பது!

ஆரியின் முதல் மற்றும் முக்கிய குறை அவர் கருத்துகளை சொல்லிக் கொண்டே இருப்பதும், அதை மற்றவர் மேல் திணிப்பதும்தான். ஆரி கருத்துக் கூறுவதில் தவறில்லை. மிகவும் நல்ல விஷயமும் கூட. ஆனால் சக போட்டியாளர்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடவேண்டும்.

சுருங்கச் சொல்லி புரிய வைத்தல்!

ஆரிக்கு எந்த விஷயத்தையும் சுருங்கச் சொல்லி புரிய வைக்கத் தெரியாது. இரண்டு மார்க் கேள்விகளுக்கு 10 மார்க்குக்குத் தகுந்த விடை அளிப்பது போன்று நீட்டி, முழக்கி, உதாரணங்களுடன் விளக்குவார். கேட்பவர்களுக்கும் பொறுமை இருக்க வேண்டுமல்லவா? உதாரணத்திற்கு கமல் ஒருமுறை, ஆரியைத் தள்ளி உட்காரச்சொல்லிவிட்டு, மற்ற போட்டியாளர்களிடம் ஆரியின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் கமல்ஹாசன் ஆரியிடம், "இனிமேல் உங்கள் Tone-ஐ மாற்றிக்கொள்ளுங்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறி முடித்துவிட்டார். நியாயமாக, மற்றவர்கள் கூறிய குறைகளுக்கு ஆரியுடைய பதில் என்னவென்று கமல்ஹாசன் கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை. ஆரியிடம் கருத்து கேட்டால் அவர் நிதானமாக பேசிக்கொண்டே போவார் என கமல்ஹாசன் நினைத்திருக்கக்கூடும். அதனால்தான் அவர் அதைச் செய்யவில்லை.

பிக்பாஸ் ஆரி, ரியோ
பிக்பாஸ் ஆரி, ரியோ

குறை கூறுதல்!

ஆரி ஒரு போட்டியாளரிடம் பேசும்போது மற்ற போட்டியாளர்கள் குறித்து குறை கூறுகிறார் என்று மற்றவர்கள் நினைக்கின்றனர். ஆமாம், ஆரி குறை கூறுகின்றார். மற்ற போட்டியாளர்கள் குழுவாக இருந்தார்கள். அவர்களுக்குள் மற்ற போட்டியாளரைப் பற்றி குறை கூறி பேசிக் கொள்கிறார்கள். அதனால் அது அவர்களுக்கு கருத்துப்பரிமாற்றமாகத் தெரிகிறது. ஆரியோ, தனிமனிதனாக செயல்படுவதால் அவர் கருத்து குறையாகத் தெரிந்தது.

இன்னும் கொஞ்சம் இலகுவாகப் பழகியிருக்கலாம்!

ஆரி தனிமனிதனாக பிக்பாஸ் இல்லத்தில் இயங்கியதால் மற்றவர்களுடன் பேசும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தபோது மற்றவரது குறைகளைக் குறித்து பேசாமல் இலகுவாக சந்தோஷமாக வேறு ஏதாவது பேசியிருக்கலாம்.

பிக்பாஸ் ஆரி
பிக்பாஸ் ஆரி

கோபம்!

கோபம் வருகின்றது. அதை அதிகம் காண்பிக்கின்றார். ஆண்களிடத்தில் முக்கியமாக பாலாவிடம் நிறைய முறை வார்த்தைகளைத் தவற விட்டிருக்கிறார் ஆரி. ஆனால், பெண்களிடம் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆரியால் ஏன் ஆண்களிடம் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரியவில்லை.

Sportsmanship குறைவு!

கேப்டன்ஷிப் டாஸ்க்கிலும், கடைசியாக நடந்த முதுகிலிருந்து பேட்ஜை எடுக்கும் டாஸ்க்கிலும் முழுவதுமாக விளையாடாமல் பாதியிலேயே விட்டுவிட்டார். இது ஒரு சிறந்த விளையாட்டு வீரருக்கு அழகில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக இரண்டு போட்டியில் இருந்தும் விலகிவிட்டார். நாம் எதிர்கொள்ளும் போட்டியாளர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த வேறுபாடுகளை எதிர்கொண்டு திறமையாக ஆடுவதே அழகு. அதில் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் கடைசி வரை விளையாடினோம் என்ற திருப்தி இருந்திருக்கும்.

பிக்பாஸ் ஆரி, பாலாஜி
பிக்பாஸ் ஆரி, பாலாஜி

நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை!

இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கேப்ஷனே, "தப்புன்னா தட்டி கேட்பேன், நல்லதுன்னா தட்டிக் கொடுப்பேன்" என்பதுதான். ஆரி எல்லோருடைய தப்பையும் தட்டிக் கேட்டார். எதற்கு என்றால், அந்த தவறை சக போட்டியாளர்கள் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக. ஆரியும் அவரிடம் உள்ள தவறை மற்றவர்கள் சுட்டிக் காண்பித்தால் உடனே மன்னிப்பு கேட்பதோடு திருத்தியும் கொள்கிறார்.

நல்லது நடந்தால் தட்டியும் கொடுத்தார். சக போட்டியாளர்களை ஊக்குவித்தார். பல இடங்களில் தட்டிக்கொடுத்து பாராட்டி இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஒரே குழுவில் இருக்கும் நண்பர்கள் கூட ஆரி அளவு ஊக்குவிப்பதும் இல்லை, தவறுகளை சுட்டிக் காட்டியதும் இல்லை. ஆனால், ஆரி சக போட்டியாளர் எந்த குழுவில் இருக்கிறார், என்றெல்லாம் பார்ப்பதில்லை. அனைவரையும் ஒரே மாதிரியாக சக போட்டியாளராக மட்டுமே பார்த்தார். ஆரிக்கு நண்பரும் இல்லை. பகைவரும் இல்லை.

பிக்பாஸ் வின்னர் ஆரி
பிக்பாஸ் வின்னர் ஆரி
கடைசி வாரத்தில், வெளியே அனுப்பப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே அனுப்பப்பட்டனர். அவர்களிடம் வெளியே என்ன நடக்கிறது என்பதை மற்ற போட்டியாளர்கள் கேட்டுத்தெரிந்துகொண்டனர். ஆனால், ஆரி யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. நிஷா சொல்லவந்தபோதுகூட வேண்டாம் எனக் கேட்க மறுத்துவிட்டார். அதனால் தன்னுடைய ஆட்டம் திசைமாறிவிடும் என நினைத்தார். அதனால்தான் மக்கள் ஆரியின் குணத்தைப் பாராட்டி கொண்டாடினார்கள். வெற்றியாளராகியிருக்கிறார் ஆரி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு